இன்றைய பொழுது எனக்கு பெரும் துயரத்துடனேயே விடிந்திருக்கிறது - அதிர்ச்சியில் மருத்துவர் இராமதாஸ்.! - Seithipunal
Seithipunal


பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாஸ் இன்று விடுத்துள்ள இரங்கல் செய்தியில், "வன்னியர் சங்கம் மற்றும் கட்சி வளர்ச்சிக்காக தனது வாழ்நாள் முழுவதும் உழைத்த, அரியலூர் மாவட்டம் காட்டகரத்தைச் சேர்ந்த வேங்கைப் புலியன் உடல்நலக் குறைவு காரணமாக காலமானார் என்ற செய்தி அறிந்து அதிர்ச்சியடைந்தேன். இன்றைய பொழுது எனக்கு பெரும் துயரத்துடனேயே விடிந்திருக்கிறது.

வன்னியர் சங்கம், பாட்டாளி மக்கள் கட்சி ஆகியவற்றின் வளர்ச்சிக்கான வேங்கைப்புலியனின் பங்களிப்பை வார்த்தைகளில் வர்ணித்து விட முடியாது. 1980-ஆம் ஆண்டில் வன்னியர் சங்கம் தொடங்கப்பட்ட போது, வேங்கைப்புலியன் ஆசிரியராக பணியாற்றிக் கொண்டிருந்தார். ஆனாலும், சமூகப் பணிக்கு அரசுப் பணியை அவர் தடையாகக் கருதவில்லை. கலியபெருமாள் என்ற தமது பெயரை வேங்கைப் புலியன் என்று மாற்றிக் கொண்டு வன்னியர் சங்க மேடைகளிலும், பாட்டாளி மக்கள் கட்சியின் மேடைகளிலும் வீர முழக்கமிட்டவர். அவரது பேச்சு கேட்பவர்களை வீறு கொள்ளச் செய்யும்.

அரியலூர் மற்றும் பெரம்பலூர் மாவட்டங்களில் உள்ள அனைத்து கிராமங்களுக்கும் என்னை அழைத்துச் சென்று மக்கள் சந்திப்புகளை நடத்தியவர். பொதுவாக பலரின் பொதுவாழ்க்கைப் பணிகளுக்கு குடும்பத்தில் எதிர்ப்பு எழும். அது தடையாகவும் மாறும். ஆனால், வேங்கைப் புலியன் தமது குடும்பத்தையே சங்கம் மற்றும் கட்சிப் பணிக்காக அர்ப்பணித்தவர். அவரது மகள் அறிவுக்கொடி 8 வயது சிறுமியாக இருந்த போதே பயிற்சியளித்து மேடைகளில் முழங்க வைத்தவர். கட்சி மேடைகளில் அறிவுக்கொடி பேசுவதைக் கேட்க அந்தக் காலத்தில் பாட்டாளி மக்கள் கட்சியினரும், மக்களும் காத்துக் கிடந்தார்கள்.

வேங்கைப்புலியன் என் மீது மிகுந்த பற்றும், நீங்காத அன்பும் கொண்டவர். மிகுந்த மரியாதை கொண்டவர். சங்க காலத்திலிருந்தே என்னுடன் நெருங்கிய தொடர்பில் இருந்தவர். 2019&ஆம் ஆண்டு எனது முத்து விழா நடைபெற்ற போது, தொடக்க காலம் முதல் என்னுடன் சேர்ந்து போராடிய வேங்கைப் புலியனை அழைத்து கவுரவித்ததுடன், விழாவில் என்னை வாழ்த்திப் பேசவும் கேட்டுக் கொண்டேன்.

வேங்கைப்புலியன் உடல் நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்த போது அவரது உடல் நிலை குறித்து கவலை அடைந்தேன். அவர் விரைவில் உடல் நலம் பெற்று திரும்ப வேண்டும்;  கட்சிப் பணிகளில் மீண்டும் தீவிரமாக ஈடுபட வேண்டும் என்று விரும்பினேன். கடந்த 3-ஆம் தேதி  தொலைபேசி மூலம் அவரை தொடர்பு கொண்டு பேசினேன். நினைவுகள் இல்லாமல் இருந்த அவர், எனது குரலைக் கேட்டதும் புரிந்து கொண்டு குரல் எழுப்பினார். அவரால் பேச முடியவில்லை. ஆனாலும், அவர் எப்படியாவது உடல் நலம் தேறுவார் என்று நம்பினேன்; அது குறித்த செய்தியை நான் எதிர்பார்த்து காத்திருந்தேன். ஆனால், அவர் காலமாகி விட்டதாக இன்று காலை வந்த செய்தி என்னை துக்கத்துக்கு உள்ளாக்கியது. அதிலிருந்து மீண்டு வர இயலாத நிலையில் தான் நான் இப்போது இருக்கிறேன்.

ஏற்றுக் கொண்ட இயக்கத்திற்கும், கொள்கைக்கும் எவ்வளவு விசுவாசமாக இருக்க வேண்டும்; எப்படி அர்ப்பணிப்புடன் உழைக்க வேண்டும் என்பதற்கு எடுத்துக்க்காட்டாக திகழ்ந்தவர் வேங்கைப் புலியன். அவரது மறைவு எனக்கு தனிப்பட்ட முறையிலும் இழப்பு தான். அவரை இழந்து வாடும் குடும்பத்தினர், நண்பர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். அவரது இறுதிச் சடங்குகள் மற்றும் ஊர்வலத்தில் பா.ம.க. நிர்வாகிகளும், தொண்டர்களும் பல்லாயிரக்கணக்கில் பங்கேற்று மரியாதை  செலுத்த  வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.


இவ்வாறு அந்த இரங்கல் செய்தியில் மருத்துவர் இராமதாஸ் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Dr Ramadoss Mourning To Vengai puliyan dead


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->