வாக்குரிமை பறிப்பு மன்னிக்க முடியாது! - திமுக துணை பொதுச் செயலாளர் கனிமொழி சாட்டை
Voting rights cant be forgiven DMK Deputy General Secretary Kanimozhi Chattai
தூத்துக்குடி முத்தம்மாள் காலனியில் அமைந்துள்ள வித்யா பிரகாசம் சிறப்பு பள்ளியில், மாவட்ட கனிமவள நிதியின் உதவியுடன் புதிதாக கட்டப்பட்ட வகுப்பறைகள் மற்றும் சுற்றுச்சுவர் இன்று திறந்து வைக்கப்பட்டன. நிகழ்ச்சியில் திமுக துணைப் பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற திமுக குழுத் தலைவருமான கனிமொழி எம்.பி. சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு புதிய கட்டிடங்களை திறந்து வைத்தார்.
பின்னர் ஊடகங்களிடம் பேசிய கனிமொழி,"வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் (SIR) தேர்தலுக்கு முன்பே திட்டமிட்டு நடத்தியிருக்கலாம். ஆனால் இப்போது அவசர அவசரமாக முன்னெடுத்து வரும் நடைமுறை, ஜனநாயகத்தை புறக்கணிக்கும் செயல். பீகார், மராட்டியம், அரியானா போன்ற மாநிலங்களில் ஏராளமான மக்களின் வாக்குரிமை பறிக்கப்பட்டது என்பது வெளிப்படையான உண்மை".

அவர் மேலும் ,"காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இதை வெளிப்படையாகச் சுட்டிக்காட்டினார். நமது முதல்வரும் அதற்கு முழு ஆதரவை அளித்துள்ளார். எஸ்.ஐ.ஆர். என்பது ஜனநாயகத்தையே கொல்லும் முயற்சி. தேர்தல் ஆணையம் அரசியல் கருவியாக மாறி விட்டது. இதனை எதிர்த்து திமுகவும் கூட்டணி கட்சிகளும் இணைந்து மக்கள் போராட்டத்தில் இறங்கியுள்ளோம்".
பெண்கள் பாதுகாப்பை குறித்தும் கனிமொழி,"பெண்கள் மீதான குற்றங்கள் எதுவாக இருந்தாலும், அதை ஏற்றுக்கொள்ள முடியாது. குற்றவாளிகள் மீது உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றுதான் முதலமைச்சர் உறுதியாக அறிவுறுத்தியுள்ளார். பெண்ணை குற்றம் சாட்டும் பழக்கத்தைக் களைவதே சமூகத்தின் முதல் பொறுப்பு".
உடன்பிறப்பே வா’ நிகழ்ச்சியைப் பற்றியும் அவர்,"அந்த சந்திப்பில் நான் நேரிலிருந்தேன். யாருடைய பதவியும் பறிக்கப்படும் என்று எங்கும் கூறப்படவில்லை. வெற்றியை நோக்கி ஒற்றுமையுடன் செயல்பட வேண்டும் என்றே முதல்வர் கூறினார். அது ஒரு அரசியல் தலைவரின் இயல்பான அறிவுரை".
English Summary
Voting rights cant be forgiven DMK Deputy General Secretary Kanimozhi Chattai