மின்கம்பம், ஆற்றங்கரை அருகே செல்ல வேண்டாம்!-செல்வப்பெருந்தகையின் அவசர வேண்டுகோள்
Dont go near power poles and riverbank Selva Perunthagais urgent request
தமிழ்நாடு முழுவதும் வடகிழக்கு பருவமழை துவங்கியுள்ள நிலையில், பல்வேறு மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை தொடர்ந்து பெய்து வருகிறது. இதனால் சில இடங்களில் வெள்ளநீர் தேங்கி, மக்களின் அன்றாட வாழ்க்கை சீர்குலைந்துள்ள சூழலில், காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை முக்கிய அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளார்.

அதில் அவர் தெரிவித்ததாவது,"வானிலை ஆய்வு மையம் அடுத்த சில நாட்களிலும் மழை தீவிரமாக இருக்கும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளது. எனவே, மக்கள் அனைவரும் தங்களது பாதுகாப்பை முதன்மையாகக் கொண்டு தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கடைப்பிடிக்குமாறு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் வலியுறுத்துகிறேன்.
மழை, வெள்ள எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள பகுதிகளில் ஆற்றங்கரைகள், ஏரிக்கரைகள் மற்றும் தாழ்வான இடங்களில் தங்குவதைத் தவிர்க்கவும். மின் கம்பங்கள், மரங்கள் அருகே செல்லாமல் இருக்கவும். தேவையில்லாமல் வெளியில் செல்ல வேண்டாம். மழைநீர் தேங்கிய சாலைகளில் வாகனம் ஓட்டுவதும், நடப்பதும் ஆபத்தானது என்பதைக் கவனிக்கவும்.
வீடுகளில் அவசர விளக்குகள், சார்ஜ் செய்யப்பட்ட மொபைல், பவர் பேங்க் மற்றும் அத்தியாவசிய மருந்துகளை முன்கூட்டியே தயார் நிலையில் வைத்திருங்கள். அரசு மற்றும் மாவட்ட நிர்வாகம் வெளியிடும் அதிகாரப்பூர்வ அறிவிப்புகளை மட்டுமே பின்பற்றவும். மழை பாதிப்பு ஏற்பட்டால் உடனடியாக அருகிலுள்ள நிவாரண முகாம் அல்லது ஆட்சியர் அலுவலகத்தை தொடர்பு கொள்ளவும்.
மேலும், காங்கிரஸ் பேரியக்கத்தினர் அனைவரும் மாவட்ட நிர்வாகம் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளுடன் இணைந்து, மழை மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடி உதவிகளை செய்ய முன்வர வேண்டும். மக்கள் அனைவரும் விழிப்புணர்வுடன் இருந்து, தங்கள் குடும்பத்தினருடன் பாதுகாப்பாக இருக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்" என்று தெரிவித்தார்.
English Summary
Dont go near power poles and riverbank Selva Perunthagais urgent request