விஜய்யின் தனிச்செயலாளர் ஜெகதீஷ் பழனிசாமிக்கு அரசியல் ஆசை? தவெக இளைஞரணி பதவிக்கு காய் நகர்த்துவதாக தகவல்!
Does Vijay personal secretary Jagadish Palanisamy have political ambitions Reports suggest he is making moves to secure the TVK youth wing post
முதல்வர் விஜய்யின் தனிச்செயலாளராக இருந்து வரும் ஜெகதீஷ் பழனிசாமி, தற்போது தமிழக வெற்றிக் கழகத்தில் தனக்கென தனி அரசியல் அடையாளத்தை உருவாக்குவதற்கான முயற்சிகளில் ஈடுபட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. குறிப்பாக, தவெக இளைஞரணி பொறுப்பை கைப்பற்றுவதற்கான முயற்சிகளில் அவர் இறங்கியுள்ளதாக கட்சி வட்டாரங்களில் பேசப்படுகிறது.
விஜய் அரசியலுக்கு வருவதற்கு முன்பு, அவரது சினிமா பயணத்தில் மேனேஜராக செயல்பட்டவர் ஜெகதீஷ் பழனிசாமி. விஜய் அரசியலுக்கு வந்தபோது அவருடனான பயணத்தை தொடர விரும்பிய ஜெகதீஷுக்கு தவெகவில் இணைப் பொருளாளர் பொறுப்பு வழங்கப்பட்டது.
தவெகவில் புஸ்ஸி ஆனந்த், ஆதவ் அர்ஜுனா போன்றவர்கள் பொதுவெளியில் அரசியல் ரீதியாக அதிகம் முன்னிறுத்தப்படும் நிலையில், ஜெகதீஷ் பழனிசாமி சற்று அமைதியான முறையில் செயல்பட்டு வருகிறார். சமூக வலைதளங்கள் உள்ளிட்ட தளங்கள் மூலமாகவே தனது செயல்பாடுகளை முன்னெடுத்து வருவதாக கூறப்படுகிறது.
2026 சட்டமன்றத் தேர்தலின்போது ஜெகதீஷ் பழனிசாமி போட்டியிடுவார் என எதிர்பார்ப்பு நிலவியது. குறிப்பாக திருச்சி கிழக்கு தொகுதி குறித்து அவரது பெயர் பேசப்பட்டது. ஆனால், அவர் தேர்தலில் போட்டியிடுவதில் ஆர்வம் காட்டாமல் விலகி இருந்ததாக கூறப்படுகிறது.
அதே நேரத்தில், தவெக ஆட்சி அமைப்பதற்கான நடவடிக்கைகளில் விஜய்யுடன் தொடர்ந்து நெருக்கமாக இருந்தார். ஆட்சி அமைக்க உரிமை கோரி விஜய் ஆளுநரை சந்தித்தபோதும் ஜெகதீஷ் பழனிசாமி அவருடன் சென்றார்.தவெக ஆட்சி அமைந்த பிறகு, விஜய்யின் தனிச்செயலாளர் என்ற முக்கியப் பொறுப்பு அவருக்கு வழங்கப்பட்டது.
இதுவரை விஜய்யுடன் நெருக்கமாக இருந்து அவரது அரசியல் பயணத்தில் உதவுவதையே முக்கியமாகக் கருதிய ஜெகதீஷ் பழனிசாமிக்கு, தற்போது தனக்கென ஒரு அரசியல் அடையாளத்தை உருவாக்க வேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இதன் காரணமாகவே தவெகவின் இளைஞரணி பொறுப்பை பெறுவதற்கான முயற்சிகளை மேற்கொள்ளுமாறு அவருக்கு நெருக்கமானவர்கள் அறிவுறுத்தி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தவெக ஆட்சிக்கு வந்துள்ள நிலையில், இளைஞர்களை ஒருங்கிணைப்பதில் இளைஞரணி முக்கியப் பங்கு வகிக்கும் என்பதால், அந்தப் பொறுப்பு எதிர்காலத்தில் கட்சிக்குள் முக்கியமான அரசியல் தளமாக மாறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும், தன்னுடன் நெருக்கமாக இருப்பவர்களுக்கு கட்சியிலும் ஆட்சியிலும் விஜய் பல்வேறு பொறுப்புகளை வழங்கி வருவதாக கூறப்படும் நிலையில், ஜெகதீஷ் பழனிசாமியின் அரசியல் ஆர்வம் குறித்த தகவலும் விஜய்யின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக தெரிகிறது.
ஜெகதீஷ் பழனிசாமி ஏற்கனவே தவெகவின் இணைப் பொருளாளராகவும், முதல்வரின் தனிச்செயலாளராகவும் இருப்பதால், அவருக்கு கூடுதல் அரசியல் பொறுப்பு வழங்கப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
ஒருபுறம் விஜய்யின் நம்பிக்கைக்குரிய நபராக நிர்வாகப் பொறுப்பில் தொடர்வது, மறுபுறம் கட்சிக்குள் தனக்கென ஒரு அரசியல் அடையாளத்தை உருவாக்குவது என ஜெகதீஷ் பழனிசாமியின் அடுத்த நகர்வு கவனம் பெற்றுள்ளது.
தவெக இளைஞரணி பொறுப்பு அவருக்கு வழங்கப்பட்டால், விஜய்யின் நிழலில் இருந்து செயல்பட்ட ஜெகதீஷ் பழனிசாமி, தனக்கென தனி அரசியல் களத்தை உருவாக்கத் தொடங்கிவிட்டார் என்றே பார்க்கப்படும். ஆனால், இந்த விவகாரத்தில் விஜய் எத்தகைய முடிவை எடுக்கப் போகிறார் என்பதுதான் தற்போது தவெக வட்டாரத்தின் எதிர்பார்ப்பாக உள்ளது.
English Summary
Does Vijay personal secretary Jagadish Palanisamy have political ambitions Reports suggest he is making moves to secure the TVK youth wing post