வேண்டுதல்..? போகியோடு திமுக ஆட்சி முடிவடைய வேண்டும்...! - பாஜக தலைவர் அண்ணாமலை தாக்கு
DMK rule must end with Pongal BJP leader Annamalai attacks
தமிழக முன்னாள் பாஜக தலைவர் அண்ணாமலை தனது எக்ஸ் (X) தளத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கடும் விமர்சனங்களை முன்வைத்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:தீமைகளை துடைத்து, புதிய நம்பிக்கையை வரவேற்கும் புனித நாளான போகிப் பண்டிகையை முன்னிட்டு, தமிழக மக்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த வாழ்த்துகள்.
ஆனால் இன்று தமிழ்நாடு, மக்களுக்காக அல்லாமல் குடும்ப அரசியலுக்காக இயங்கும் திமுக ஆட்சியின் பிடியில் சிக்கி தவிக்கிறது. விவசாயத்திற்கு அடிப்படை வசதிகள் கூட செய்யப்படாத நிலையில், ஒவ்வொரு மழைக்காலமும் விவசாயிகள் தங்களது வாழ்வாதாரத்தை இழக்கும் சூழலுக்கு தள்ளப்படுகின்றனர்.

இளைஞர்களின் அரசு வேலை கனவுகள், திமுகவின் லஞ்சம், ஊழல் மற்றும் அரசியல் தலையீடுகளால் நசுங்கி வருகின்றன.பெண்கள், குழந்தைகள், முதியவர்கள் என எந்தப் பிரிவினரும் இன்று பாதுகாப்பாக உணர முடியாத மாநிலமாக தமிழ்நாடு மாற்றப்பட்டுள்ளது.
திமுகவின் கனிமவள கொள்ளைக்கு தடையாக இருந்த அரசு அதிகாரிகள் கூட உயிரிழக்கும் அவலம் ஏற்பட்டுள்ளது. அரசுப் பள்ளி ஆசிரியர்கள் தங்களது அடிப்படை உரிமைகளுக்காக தொடர்ந்து போராட்டம் நடத்த வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
ஊழல், குடும்ப அரசியல், அதிகார துஷ்பிரயோகம் ஆகியவை திமுக ஆட்சியின் அடையாளங்களாக மாறி, தமிழக மக்களின் தினசரி வாழ்க்கையே பாரமாகியுள்ளது.
சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து, மாநிலம் முழுவதும் அச்சம் நிலவும் சூழல் உருவாகியுள்ளது.மக்களிடம் அளித்த வாக்குறுதிகளை மறந்து, குடும்ப நலனுக்காக மாநில வளங்களை சுரண்டிக் கொண்டிருக்கும் திமுக அரசு, இந்த போகிப் பண்டிகையோடு அரசியல் வரலாற்றில் முடிவுக்குக் கொண்டு வரப்பட வேண்டும்.
வரவிருக்கும் தேர்தல், ஊழல் நிறைந்த இந்த ஆட்சியை அரசியல் தீயில் கரைத்து, தமிழ்நாட்டிற்கு புதிய நம்பிக்கையும் மாற்றமும் தரும் வரலாற்றுச் சிறப்பு மிக்க போகியாக நிச்சயம் மாறும்.இவ்வாறு அவர் தனது பதிவில் தெரிவித்துள்ளார்.
English Summary
DMK rule must end with Pongal BJP leader Annamalai attacks