விக் இல்லைனா நம்ம பொழப்பு.. சத்யராஜை கலாய்த்த கவுண்டமணி..– சத்யராஜ் பகிர்ந்த நெகிழ்ச்சியான சம்பவம்!
Without a wig our hair is a mess Goundamani made fun of Sathyaraj A touching incident shared by Sathyaraj
தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத நகைச்சுவை நடிகர்களில் ஒருவராக கவுண்டமணி திகழ்கிறார். பல ஆண்டுகள் கோலிவுட்டில் அசைக்க முடியாத இடத்தைப் பிடித்திருந்த அவருக்கு, ஒரு கட்டத்தில் மார்க்கெட் சரிந்தாலும், அவர் திரையில் வழங்கிய நகைச்சுவை இன்றும் மக்களிடம் உயிருடன் உள்ளது. புதிய படங்களில் அவர் அரிதாகவே தோன்றினாலும், பழைய படங்களின் நகைச்சுவை காட்சிகள் டிவி சேனல்களிலும், சமூக வலைதள மீம்ஸ்களிலும் தொடர்ந்து இடம்பிடித்து வருகின்றன.
நாடக மேடைகளில் இருந்து சினிமாவுக்குள் காலடி எடுத்து வைத்த கவுண்டமணிக்கு, இயக்குநர் பாக்யராஜ் வழியாக பாரதிராஜாவின் அறிமுகம் கிடைத்தது. 16 வயதினிலே திரைப்படம் அவருக்கு மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது. அந்தப் படத்துக்குப் பிறகு தொடர்ச்சியாக வாய்ப்புகள் வந்தன. ஒவ்வொரு வாய்ப்பையும் முதல் வாய்ப்பைப் போலவே கருதி, தனித்துவமான வேரியேஷன் நகைச்சுவைகளை அவர் வழங்கினார். இதனுடன் செந்தில் இணைந்த பிறகு, தமிழ் சினிமாவின் நகைச்சுவை ஒரு புதிய உயரத்திற்குச் சென்றது.
செந்தில் கேட்கும் அப்பாவித்தனமான கேள்விகளும், அதற்கு கவுண்டமணி அளிக்கும் நக்கலான பதில்களும், ரியாக்ஷன்களும் தமிழ் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தன. திரையில் இருவரும் தோன்றும் போதெல்லாம், டாம் & ஜெர்ரி போல ரசிகர்கள் தங்கள் கவலைகளை மறந்து சிரிப்பார்கள். இதன் காரணமாக பல ஆண்டுகள் யாராலும் அசைக்க முடியாத நகைச்சுவை ஜோடியாக அவர்கள் விளங்கினர்.
எல்லா உச்ச நட்சத்திரங்களுக்கும் ஒரு காலக்கட்டம் இருப்பது போல, கவுண்டமணியின் திரை காலமும் ஒருநாள் முடிவுக்கு வந்தது. அதை உணர்ந்த அவர், எந்தவித சர்ச்சையும் இல்லாமல், மரியாதையுடன் திரைத்துறையிலிருந்து ஒதுங்கினார். குடும்பத்துடன் நேரம் செலவிடத் தொடங்கினார். இடையே ஒத்த ஓட்டு முத்தையா, எனக்கு வேறு எங்கும் கிளைகள் கிடையாது போன்ற படங்களில் நடித்தாலும், பழைய காலத்து சென்சேஷன் மீண்டும் உருவாகவில்லை.
இதற்கிடையில் அவரது மனைவி மறைந்தது அவருக்கு பெரும் தனிப்பட்ட இழப்பாக அமைந்தது. அதன்பிறகு பெரும்பாலும் வீட்டிலேயே இருப்பவர் கவுண்டமணி. இருப்பினும், தன்னுடன் பணியாற்றிய கலைஞர்கள் அல்லது திரையுலக முக்கியஸ்தர்கள் மறைந்தால், இந்த வயதிலும் நேரில் சென்று மாலை அணிவித்து துக்கம் விசாரிப்பதை தவற விடுவதில்லை. இளம் நடிகர்களே பலர் துக்க நிகழ்வுகளுக்கு வர தயங்கும் காலத்தில், இவ்வளவு புகழ் பெற்ற ஒருவர் மனிதநேயத்தை மறக்காமல் நடந்து கொள்வது அனைவரையும் ஆச்சரியப்படுத்தி, பாராட்டையும் பெற்றுள்ளது.
இந்த நிலையில், கவுண்டமணியுடன் பல ஆண்டுகளாக நெருங்கிய நட்பில் இருக்கும் நடிகர் சத்யராஜ், வா வாத்தியார் பட விழாவில் கவுண்டமணி குறித்து ஒரு சுவாரஸ்யமான நினைவை பகிர்ந்து கொண்டார். அவர் பேசுகையில், “நானும் கவுண்டமணி அண்ணனும் விக் தொடர்பாக அடிக்கடி ஜாலியாக பேசிக்கொள்வோம். ஒருமுறை அவர் என்னிடம், ‘ஏன் சத்யராஜ்… இந்த விக் இல்லையென்னா நம்ம பொழப்பு என்னாகும்?’ என்று கேட்டார். அதற்கு நான் ‘மாடு மேய்க்கத்தான் போயிருப்போம்’ என்றேன். அதற்கு அவர் சிரித்தபடியே, ‘மாடு மேய்க்கவும் ஒன்னு ரெண்டு சரியா தெரிஞ்சிருக்கணுமே… அதுவும் நமக்கு தெரியாது’ என்று சொன்னார்,” என நகைச்சுவையுடன் நினைவுகூரினார்.
இந்த சம்பவம், கவுண்டமணியின் நகைச்சுவை உணர்வும், எளிமையான மனிதநேயமும் இன்று வரை மாறாமல் இருப்பதை மீண்டும் ஒருமுறை நினைவுபடுத்துவதாக அமைந்தது.
English Summary
Without a wig our hair is a mess Goundamani made fun of Sathyaraj A touching incident shared by Sathyaraj