யாஷ் நடித்த ‘டாக்ஸிக்’ டீசருக்கு எதிராக CBFC-யில் புகார் – சென்சாரில் காத்திருக்கும் ஆப்பு..!
Complaint filed with CBFC against Yash starrer Toxic teaser A wedge waiting in the censors
நடிகர் யாஷ் நடிப்பில் உருவாகி வரும் ‘டாக்ஸிக்’ திரைப்படத்தின் முதல் டீசர் வெளியான சில நாட்களிலேயே, படம் சட்ட சிக்கலில் சிக்கியுள்ளது. சமூக ஆர்வலர் தினேஷ் கல்லஹள்ளி, டீசரில் இடம்பெற்றுள்ளதாக கூறப்படும் “மோசமான மற்றும் ஒழுக்கக்கேடான காட்சிகள்” தொடர்பாக மத்திய திரைப்பட சான்றிதழ் வாரியத்தில் (CBFC) அதிகாரப்பூர்வ புகார் அளித்துள்ளார். இந்த புகார் CBFC தலைவர் பிரசூன் ஜோஷிக்கு அனுப்பப்பட்டுள்ளது.
புகார் மனுவில், ‘டாக்ஸிக்’ டீசரில் மிகவும் அருவருப்பான மற்றும் சமூக ஒழுக்கத்திற்கு முரணான காட்சிகள் இடம்பெற்றுள்ளதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. எந்தவித கட்டுப்பாடும் இன்றி சமூக ஊடகங்களில் இந்த டீசர் பரவலாக பகிரப்படுவதால், சிறுவர்கள் மற்றும் இளைஞர்கள் உட்பட பொதுமக்கள் சட்டவிரோதமான மற்றும் சமூகத்திற்கு தீங்கு விளைவிக்கும் உள்ளடக்கங்களை பார்க்க நேரிடுகிறது என அவர் தெரிவித்துள்ளார். இது பேச்சு மற்றும் கருத்து சுதந்திரம் தொடர்பான அரசியலமைப்பு உரிமைகளின் எல்லைகளை மீறுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், இந்திய உச்ச நீதிமன்றத்தின் பல தீர்ப்புகளை சுட்டிக்காட்டியுள்ள புகார்தாரர், மோசமான மற்றும் பாலியல் ரீதியான உள்ளடக்கங்கள் பாதுகாக்கப்பட்ட கருத்து வெளிப்பாடுகளாக கருதப்பட முடியாது என்றும் தெரிவித்துள்ளார். திரைப்படச் சட்டம் 1952, திரைப்பட சான்றிதழ் விதிகள் மற்றும் CBFC வழிகாட்டுதல்களின்படி, திரைப்படங்கள் மற்றும் அவற்றின் டீசர்கள், விளம்பரப் பொருட்கள் அனைத்தும் நாகரிகம், ஒழுக்கம் மற்றும் சமூகப் பொறுப்பை பின்பற்ற வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
இதனைத் தொடர்ந்து, ‘டாக்ஸிக்’ டீசரை மறுஆய்வு செய்து சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்க வேண்டும் என்றும், அந்த டீசரின் பரவலை உடனடியாகத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் CBFC-யை அவர் கோரியுள்ளார். மேலும், படத்தின் இயக்குனர், தயாரிப்பாளர்கள் மற்றும் சம்பந்தப்பட்டவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் புகாரில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த விவகாரம் பொது ஒழுக்கம் மற்றும் சிறுவர்களின் பாதுகாப்பு தொடர்புடையது என்பதால், அவசர கவனம் தேவை என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
இந்த புகார் தொடர்பாக ‘டாக்ஸிக்’ படக்குழுவினர் இதுவரை எந்த அதிகாரப்பூர்வ கருத்தையும் வெளியிடவில்லை. யாஷ் மற்றும் கீது மோகன்தாஸ் எழுதி இயக்கும் இந்த படத்தில், யாஷ் கதாநாயகனாக நடிக்க, கியாரா அத்வானி, நயன்தாரா, ஹூமா குரேஷி, ருக்மிணி வசந்த் மற்றும் தாரா சுதாரியா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். KVN புரொடக்ஷன்ஸ் மற்றும் மான்ஸ்டர் மைண்ட் கிரியேஷன்ஸ் நிறுவனங்களின் கீழ் வெங்கட் கே நாராயணா மற்றும் யாஷ் தயாரிக்கும் ‘டாக்ஸிக்’ திரைப்படம், வரும் மார்ச் 19ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
English Summary
Complaint filed with CBFC against Yash starrer Toxic teaser A wedge waiting in the censors