ஈரான் முழுவதும் மக்கள் எழுச்சி! உயிரிழப்பு 2,500-ஐ தாண்டியது...! - கட்டுக்கடங்காத வன்முறை
Popular uprising across Iran death toll exceeds 2500 Uncontrollable violence
ஈரானில் பொருளாதார சரிவு, கட்டுக்கடங்காத பணவீக்கம் மற்றும் அத்தியாவசிய பொருட்களின் விண்ணைத் தொடும் விலைவாசி உயர்வு, பொதுமக்களின் பொறுமையை முற்றிலுமாக சிதைத்துள்ளது.
இதன் வெடிப்பாக, அரசு மற்றும் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனிக்கு எதிரான மக்கள் எழுச்சி கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு வெடித்தது.ஆரம்பத்தில் அமைதியான எதிர்ப்பாக தொடங்கிய இந்த போராட்டம், நாடு முழுவதும் பரவும் ஆட்சிக்கு எதிரான தீவிர கிளர்ச்சியாக மாறியுள்ளது.

போராட்டங்களை ஒடுக்க அரசு கடுமையான அடக்குமுறைகளை கையாண்டதைத் தொடர்ந்து, போராட்டக்காரர்கள் – பாதுகாப்புப் படையினர் இடையே கடும் மோதல்கள் உருவானது. இதனால் ஈரான் முழுவதும் வன்முறை வெடித்து, அரசு கட்டிடங்கள் தாக்கப்பட்டு, வாகனங்கள் தீக்கிரையாக்கப்பட்டன.
தற்போது முக்கிய நகரங்களில் ஆயிரக்கணக்கானோர் சாலைகளில் திரண்டு, அரசுக்கும் உச்ச தலைமைக்கும் எதிராக கோஷங்களை எழுப்பி வருகின்றனர். போராட்டங்களை அடக்க பாதுகாப்புப் படையினர் நேரடியாக துப்பாக்கிச் சூடு நடத்துவதாக தகவல்கள் வெளியாகி, உலகளாவிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
முன்னதாக வன்முறைகளில் 646 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியான நிலையில், தற்போது உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2,500-ஐ கடந்துள்ளதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அமெரிக்காவை தலைமையிடமாகக் கொண்ட மனித உரிமைகள் அமைப்பு வெளியிட்டுள்ள தகவலின்படி, அரசின் அடக்குமுறையால் இதுவரை 2,571 பேர் உயிரிழந்துள்ளனர்.
அவர்களில் 2,403 பேர் போராட்டக்காரர்கள், 147 பேர் அரசு ஆதரவாளர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. உயிரிழந்தவர்களில் 12 குழந்தைகள் மற்றும் போராட்டங்களில் ஈடுபடாத 9 பொதுமக்களும் அடங்குவதாக அந்த அமைப்பு கூறியுள்ளது. மேலும், 18 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நாடு முழுவதும் ஊரடங்கு, போக்குவரத்து தடைகள், கடும் பாதுகாப்பு ஏற்பாடுகள் நடைமுறையில் இருந்தாலும், மக்கள் போராட்டங்கள் தணியவில்லை. இதனால் ஈரான் முழுவதும் பதற்றமான சூழல் நீடித்து வருகிறது.இதற்கிடையே போராட்டக்காரர்கள் வெளியிட்டுள்ள குற்றச்சாட்டுகள் மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்துகின்றன.
அரசு படையினர் தானியங்கி ஆயுதங்களுடன் ஆயுதமற்ற மக்களை நோக்கி கண்மூடித்தனமாக சுடுவதாகவும், சில இடங்களில் கட்டிடங்களின் மேற்கூரைகளில் இருந்து துப்பாக்கிச் சூடு நடத்தப்படுவதாகவும் அவர்கள் கூறுகின்றனர்.
போராட்டங்களை கட்டுப்படுத்தும் முயற்சியாக ஈரான் அரசு செல்போன் மற்றும் இணைய சேவைகளை முற்றிலும் முடக்கியது. தற்போது சில தகவல் தொடர்பு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ள நிலையில், ஈரான் மக்களுக்கு இலவச இணைய சேவை வழங்கப்படும் என எலான் மஸ்க்கின் ஸ்டார்லிங் நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பு உலக அரசியல் வட்டாரங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
Popular uprising across Iran death toll exceeds 2500 Uncontrollable violence