"பதிலளிக்க முடியாமல் திசைதிருப்பும் அரசியல்": சர்க்காரியா கமிஷன் விவகாரத்தில் ஆர்.எஸ்.பாரதி கடும் தாக்கு! - Seithipunal
Seithipunal


சட்டப்பேரவையில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் எழுப்பிய சட்டம் - ஒழுங்கு சீர்கேடுகள், படுகொலைகள் மற்றும் பாலியல் வன்கொடுமைகள் குறித்தக் கேள்விகளுக்குப் பதிலளிக்க முடியாமல், தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய் திசைதிருப்பும் அரசியலில் ஈடுபடுவதாகத் திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கடுமையாகச் சாடியுள்ளார்.

இன்று மாலை செய்தியாளர்களிடம் பேசிய அவர், தவெக ஆட்சியில் நடந்துள்ள சட்டம் - ஒழுங்கு சீரழிவுகள் குறித்து ஆதாரங்களுடன் முன்வைக்கப்பட்டக் குற்றச்சாட்டுகளுக்குப் பதிலளிக்கத் தைரியமின்றி, முடிந்துபோன சர்க்காரியா கமிஷன் விவகாரத்தைப் பேசி முதலமைச்சர் விஜய் கபட நாடகமாடுகிறார் எனக் குற்றம்சாட்டினார்.

சர்க்காரியா கமிஷனில் சுமத்தப்பட்ட அண்ணா தியேட்டர், அருண் ஹோட்டல் மற்றும் டிராக்டர் ஊழல் புகார்கள் அனைத்தும் முற்றிலும் ஆதாரமற்றவை என்றும், அதில் அண்ணா தியேட்டர் ஜக்கரியா சேட் என்பவருக்குச் சொந்தமானது என்றும் விளக்கமளித்த ஆர்.எஸ்.பாரதி, வரலாற்று உண்மைகளை அறிந்துகொண்டு விவாதிக்க முதலமைச்சர் விஜய்க்குத் தெம்பும் திராணியும் இருக்கிறதா எனச் சவால் விடுத்தார். புகார் கொடுத்த எம்.ஜி.ஆரே 10 ஆண்டுகள் ஆட்சியில் இருந்தும் திமுக மீது எந்த வழக்கும் தொடர முடியவில்லை எனச் சுட்டிக்காட்டிய அவர், அவசரநிலைக் காலத்தில் நடந்த தவறுகளுக்காக இந்திரா காந்தியே 1980-இல் கருணாநிதியிடம் பகிரங்க மன்னிப்பு கேட்ட வரலாற்றை நினைவு கூர்ந்தார். மேலும், சர்க்காரியா கமிஷனுக்குப் பிறகு கருணாநிதி எழுதிய வசனத்தில் திரைப்படம் இயக்க முதலமைச்சரின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் மறுக்கவில்லை என்றும் சுட்டிக்காட்டினார்.

தவெக உறுப்பினர் நடுரோட்டில் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டது மற்றும் அமைச்சர் ஜெகதீஸ்வரியின் கார் மோதி ஒருவர் உயிரிழந்தது போன்ற நடப்புச் சம்பவங்கள் சட்டமன்றத்தில் விவாதத்திற்கு வருவதைத் தவிர்க்கவே விஜய் இத்தகைய திசைதிருப்பல் தந்திரத்தைக் கையாண்டுள்ளார் என ஆர்.எஸ்.பாரதி சாடினார். ஜவஹர்லால் நேருவின் ஆட்சிக் காலம் முதலே பல்வேறு அரசியல் நெருக்கடிகளைச் சந்தித்து வளர்ந்த இயக்கம் திமுக என்றும், ஸ்கிரிப்ட் எழுதிக் கொடுத்ததை வைத்துக்கொண்டு பேசும் விஜய்யுடன் சர்க்காரியா கமிஷன் குறித்து வார்த்தைக்கு வார்த்தை விவாதிக்கத் தங்களது கட்சி தயாராக இருப்பதாகவும் அவர் திட்டவட்டமாகத் தெரிவித்தார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

DMK RS Bharathi Slams CM Vijay Over Assembly Speech Accuses Him of Using Sarkaria Commission to Divert Law and Order Issues


கருத்துக் கணிப்பு

முதல்வர் விஜய் தலைமையிலான இந்த 100 நாள் ஆட்சி...



Advertisement

கருத்துக் கணிப்பு

முதல்வர் விஜய் தலைமையிலான இந்த 100 நாள் ஆட்சி...


செய்திகள்



சினிமா

Seithipunal
--> -->