வெள்ளிக்கிழமை, பிரதோஷ நாளில் வேட்புமனு தாக்கல் செய்யும் ஸ்டாலின் - அதிகாரபூர்வ அறிவிப்பு! - Seithipunal
Seithipunal


திமுக தலைவர் தேர்தலை முன்னிட்டு, வரும் வெள்ளிக்கிழமை பிரதோஷ நாளில் (அக்டோபர் 7-ஆம் தேதி) வேட்புமனு தாக்கல் செய்கிறார் அக்கட்சியின் தலைவரும், தமிழக முதல்வருமான மு.க. ஸ்டாலின்.

இது குறித்து ஸ்டாலின் விடுத்துள்ள அறிக்கையில், "தி.மு.க. 15-ஆவது அமைப்புத் தேர்தல் மாவட்ட - ஒன்றிய - நகர - பேரூர் - கிளைக் கழகங்கள் என அனைத்து நிலைகளிலும் நிறைவுபெற்று நிர்வாகிகள் தேர்வு பெற்றுள்ளனர். தலைவர் உள்ளிட்ட தலைமைக் கழக நிர்வாகிகளைத் தேர்வு செய்வதற்கான பொதுக்குழு அக்டோபர் 9-ஆம் தேதி சென்னை பச்சையப்பன் கல்லூரி எதிரே உள்ள செயின்ட் ஜார்ஜ் பள்ளி 'விங்க்ஸ்' கன்வென்ஷன் சென்டரில் நடைபெறவிருக்கிறது. 

கட்சித் தலைவர் என்ற பொறுப்பை, கண்ணுங் கருத்துமாக, எனது இதயத்திலும் தோளிலும் சுமந்திருக்கும் உங்களில் ஒருவனான நான், உடன்பிறப்புகளின் உளமார்ந்த வாழ்த்துகளையும், ஒருமனதான நல்லாதரவையும் எதிர்நோக்கி, அக்டோபர் 7-ஆம் நாள் வேட்புமனு தாக்கல் செய்யவிருக்கிறேன்.

கட்சி அமைப்புகளில் உள்ள பொறுப்புகளுக்குப் போட்டியிட விரும்புகிறவர்கள் தங்களின் விருப்பத்தை வெளிப்படுத்தி மனு தாக்கல் செய்வது வழக்கம். ஒரு மாவட்டத்திற்கு ஒரு செயலாளர்தான் என்பதை மனு தாக்கல் செய்த ஒவ்வொருவருமே அறிவார்கள். தலைமைக் கழகத்தால் நியமிக்கப்பட்ட தேர்தல் பொறுப்பாளர்கள் முன்னிலையில் அவர்களின் விருப்பமும், வாய்ப்பும் பரிசீலிக்கப்பட்டு, தேவையென்றால் மட்டும் வாக்குப்பதிவு நடைபெறுவதும், அதற்கான அவசியம் ஏற்படாத நிலையில், ஒருமனதாக ஒருவரைத் தேர்வு செய்வதும் நம் உயிர்நிகர் தலைவர் கலைஞர் உருவாக்கிய வழிமுறையின்படி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

கடைக்கோடி மனிதர்களுக்கும், கடைசி குக்கிராமத்திற்கும் அரசின் திட்டங்கள் சிந்தாமல் சிதறாமல் சென்று சேர வேண்டும் என்கிற சிந்தையுடனும் முனைப்புடனும் முழுமையான அர்ப்பணிப்புடனும் உங்களில் ஒருவனான என் தலைமையிலான நமது அரசு ஒவ்வொரு நொடியும் செயல்பட்டு வருகிறது. இதற்கு எப்படியாவது ஊறு விளைவித்திட வேண்டும் என நினைப்போரை சரியாக அடையாளம் கண்டு நாம் எச்சரிக்கையுடனும் கவனத்துடனும் செயலாற்றிட வேண்டும்.

‘சொன்னதைச் செய்வோம் - செய்வதைச் சொல்வோம்’ என்கிற அரசாட்சியின் அடிப்படை இலக்கணத்தை நம் உயிர்நிகர் தலைவர் கருணாநிதி நமக்கு வழங்கியிருக்கிறார். அதனைக் குறைவின்றிக் கடைப்பிடிப்பதுடன், ‘சொல்லாததையும் செய்வோம்.. சொல்லாமலும் செய்வோம்’ எனப் புதிய புதிய முற்போக்குத் திட்டங்களை மக்களுக்காக நிறைவேற்றி வருகிறோம். தமிழ்நாட்டு மக்களுக்கு நன்மை விளைவதைப் பார்த்துப் பொறுத்துக் கொள்ள முடியாத பொல்லாங்கு எண்ணம் கொண்டோர், நமக்கு எதிராகச் சிறு துரும்பையும் பெரும் தூணாக்க முடியுமா எனத் துடித்துக் கொண்டிருக்கிறார்கள். சிறு துரும்புக்கு மட்டுமல்ல, தூசுக்கும்கூட இடம் கொடுக்காத வகையில், நாம் கவனமுடன் செயல்பட வேண்டியுள்ளது.

அமைச்சர் பெருமக்களுக்கும் நாடாளுமன்ற - சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் உள்ளாட்சிப் பொறுப்பிலே இருக்கக்கூடிய கழக நிர்வாகிகளுக்கும் நான் ஏற்கனவே செப்டம்பர் 26-ஆம் நாளன்று ஓர் அறிக்கை வாயிலாக அன்புக்கட்டளை விடுத்திருக்கிறேன். அதனை மீண்டும் நினைவூட்டுகிறேன். எக்காரணம் கொண்டும் சொல்லிலும் செயலிலும் அலட்சியமான போக்கு வேண்டாம். இரண்டையும் கவனத்துடன் கையாளுங்கள். நம்மிடமிருந்து வெளிப்படும் சொற்கள், அதனை வெளிப்படுத்தும் உடல்மொழி, நம்மை நாடி வரும் மக்களை அணுகும் முறை என அனைத்திலும் கவனமுடனும் பொறுப்புடனும் கண்ணியம் துளியும் குறைந்து விடாமல் செயலாற்றுங்கள். 

மற்றவர்களைவிட உள்ளாட்சிப் பிரதிநிதிகள் அதிகளவில் மக்களுடன் நேரடித் தொடர்பு கொண்டவர்கள். அவர்கள் இன்னும் கூடுதல் பொறுப்புடனும் பொறுமையுடனும் நடந்து கொள்ள வேண்டும். நம் தரப்பிலிருந்து தவறுகளுக்கோ, குறைகளுக்கோ குன்றிமணி அளவுகூட இடம் தரக்கூடாது. அப்படி ஏதேனும் ஒன்றிரண்டு நிகழ்வுகள் என் கவனத்திற்கு வந்தாலும், கடுமையான நடவடிக்கை எடுத்திட சிறிதும் தயங்க மாட்டேன் என்பதைக் கண்டிப்புடன் நினைவூட்டிட விரும்புகிறேன். அரும்பாடுபட்டு அமைந்துள்ள மக்கள் நல ஆட்சிக்கு, அவப்பெயர் ஏற்படுத்த நினைக்கும் எதிரிகளுக்கு அருமை உடன்பிறப்புகள் யாரும் எள்ளளவும் துணைபோக மாட்டீர்கள் என உறுதியாக நம்புகிறேன்.

கட்சித் தலைவர், பொதுச்செயலாளர், பொருளாளர், துணைப் பொதுச் செயலாளர்கள், முதன்மைச் செயலாளர் உள்ளிட்டோரைத் தேர்வு செய்யும் பொதுக்குழு அக்டோபர் 9-ஆம் நாள் ஞாயிறு அன்று கூடுகிறது.

ஞாயிறு என்றாலே சூரியன்தான். உதயசூரியன் வெளிச்சத்தால் தமிழ்நாட்டில் விடியல் ஏற்பட்டுள்ள நிலையில், அதன் கதிரொளி எத்திசையும் பரவிடும் வகையில் செயல்படுவதற்கான தீர்மானங்களை நிறைவேற்றவிருக்கும் பொதுக்குழுவில், உயிரனைய உடன்பிறப்புகளை நானும், உங்களில் ஒருவனான என்னை நீங்களும் காணவிருக்கிறோம்" என்று ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

DMK Head Election Candidate Stalin Nomination


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->