மதுரை திருமங்கலம் அருகே பயங்கரம்; 4 வயது சிறுவனை கழுத்தை அறுத்து கொலை செய்து, உடலை குவாரியில் வீசிய 18 வயது இளைஞர் கைது..!
18 year old youth arrested for murdering a 4 year old boy and dumping the body in a quarry near Madurai
மதுரை, திருமங்கலம் அருகே 4 வயது சிறுவனை பிளேடால் கழுத்தறுத்து கொன்று உடலை குவாரி பள்ளத்தில் வீசிய கொடூர சம்பவத்தில் உறவினரான 18 வயது இளைஞரை போலீஸார் கைது செய்துள்ளமை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை திருமங்கலம் அருகிலுள்ள பாரபத்தி கிராமத்தைச் சேர்ந்தவர் 38 வயதான விவசாயி முருகன். இவரது மனைவி நாச்சம்மாள். இத்தம்பதியருக்கு ஒரு ஆண், இரு பெண் குழந்தைகள். நேற்று முன்தினம் தம்பதியர் வழக்கம் போல் வேலைக்கு சென்றுவிட்டு மாலையில் வீடு திரும்பியுள்ளனர். இரு பெண் குழந்தைகள் வீட்டில் இருந்த நிலையில், 04 வயதான மகன் மோகன் வீட்டில் இல்லாததால் பெற்றோர் பதற்றம் அடைந்துள்ளனர்.
உடனடியாக பல்வேறு இடங்களில் தேடியும் சிறுவன் கிடைக்கவில்லை. இது குறித்து தந்தை முருகன், கூடக்கோவில் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். உடனடியாக எஸ்பி தேவநாதன் உத்தரவின்பேரில் தனிப்படை போலீஸார் சிறுவனை தேடியுள்ளனர்.
இந்நிலையில், பக்கத்துவீட்டைச் சேர்ந்த முருகனின் உறவினர் கிருஷ்ணன் மகன் முத்துமணி (18) இரவில் சாக்கு மூட்டை ஒன்றை தூக்கிச் சென்றதாக தங்கள் கிடைத்துள்ளது. இதையடுத்து வீட்டில் படுத்திருந்த முத்துமணியை பிடித்த போலீசார், அவரை காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரித்துள்ளனர்.
விசாரணையில் முதலில் மறுத்த அவர், பிறகு சிறுவனைக் கொன்று உடலை சாக்கு மூட்டையில் கட்டி குவாரி பள்ளத்தில் வீசியதாக பகீர் தகவலை தெரிவித்துள்ளார். அவரை அழைத்துக்கொண்டு சம்பவ இடத்திற்கு போலீஸார் சென்று, அங்கு சிறுவன் கழுத்தறுத்து கொல்லப்பட்டு, உடல் சாக்கு மூட்டையில் கட்டப்பட்டிருப்பது கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
பரிதாபமாக இருந்த 04 வயது சிறுவனின் உடலை கைப்பற்றிய போலீஸார் மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பியதோடு, இது தொடர்பாக முத்துமணி மீது கொலை வழக்குப் பதிவு செய்து அவரை கைது செய்துள்ளனர்.
இந்த கொடூர கொலை குறித்து போலீஸார் கூறுகையில், முருகனும், முத்துமணியும் உறவினர்கள். இரு குடும்பத்திற்கும் முன்பகை இருப்பதாகவும், பெண் விவகாரம் தொடர்பாகவும் அவர்களுக்குள் பிரச்சினை இருந்துள்ளதாக தெரிவித்துள்ளனர். இதனால் முருகனை பழிவாங்கும் நோக்கில் அவரது 04 வயது மகனை கொல்ல முத்துமணி திட்டமிட்டுள்ளார்.
அதற்காக, நேற்று முன்தினம் மாலை வீட்டுக்கு அருகே தனியாக விளையாடிய மோகனை, குடிபோதையில் இருந்த முத்துமணி தனது வீட்டின் பின்புறம் அழைத்துச் சென்று பயன்பாடு இன்றி இருந்த கழிப்பறைக்குள் வைத்து வாயை பொத்தி பிளேடால் கழுத்தறுத்து கொன்றுள்ளதாக தெரிவித்துள்ளார்.
யாருக்கும் சந்தேகம் வராமல் இருக்க உடலை சாக்கில் கட்டி தோளில் சுமந்து சென்று ஒரு கிலோ மீட்டர் தொலைவிலுள்ள குவாரி பள்ளத்தில் வீசிவிட்டு வீட்டில் வந்து தூங்குவது போன்று நடித்தது விசாரணையில் தெரியவந்துள்ளதாக போலீசார் குறிப்பிட்டுள்ளனர்.
அத்துடன், முருகனின் சொத்துக்களை அபகரிக்கும் வகையில் அவருக்கு ஆண் வாரிசு இல்லாமல் ஆக்கவேண்டும் என, முத்துமணி குடும்பத்தினர் ஏற்கெனவே கருதியதாகவும், இது குறித்து தகவல் கிடைப்பதால் அந்த கோணத்திலும் சிறுவன் கொல்லப்பட்டிருக்கலாம் என விசாரித்து வருவதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.
English Summary
18 year old youth arrested for murdering a 4 year old boy and dumping the body in a quarry near Madurai