2027 உலகக்கோப்பை அணியில் சீனியர் வீரர்கள் இடம்பெறுவார்களா..? கேப்டன் கில் கூறியது என்ன ..?
What did Captain Gill say about whether senior players would be part of the 2027 World Cup squad
வெஸ்ட் இண்டீஸ் (மேற்கிந்திய தீவுகள்) அணிக்கு எதிரான 3-வது ஒருநாள் போட்டி நேற்று சண்டிகரில் நிறைவடைந்தது. அதன் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த இந்திய அணியின் கேப்டன் சுப்மன் கில்லிடம், 37 வயதாகும் விராட் கோலி மற்றும் 39 வயதாகும் ரோஹித் சர்மாவின் தற்போதைய ஆட்டத் திறன் மற்றும் எதிர்காலம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்குப் அவர், இரு மூத்த வீரர்களின் சிறப்பான ஆட்டத்தையும் அவர்களின் பங்களிப்பையும் வெகுவாகப் பாராட்டி, விமர்சனங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார். இதுகுறித்து கில் அளித்த பேட்டியில் கூறியதாவது;
''இந்தத் தொடரில் ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி இருவரும் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளனர். முதல் ஒருநாள் போட்டியில் விராட் கோலி ஆட்டமிழக்காமல் சதம் விளாசினார். இரண்டாவது ஒருநாள் போட்டியில் ரோஹித் சர்மா சதம் அடித்தார். மேலும் மூன்றாவது போட்டியில் 92 ரன்கள் எடுத்து சதம் அடிக்கும் வாய்ப்பை நூலிழையில் இழந்தார்.

கடந்த 4 இன்னிங்ஸ்களில் ரோஹித் 3 சதங்களை நெருங்கியுள்ளார். விராட் கோலி சிறப்பாக பேட்டிங் செய்து வருகிறார். வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் கே.எல். ராகுலும் அணிக்குத் தேவையானப் பங்களிப்பை வழங்கி வருகிறார்.'' என்று குறிப்பிட்டார்.
இந்நிலையில், கோலி மற்றும் ரோஹித் ஆகியோருக்கு ஓய்வு அளித்து புதிய இளம் வீரர்களுக்கு வாய்ப்பளிக்கலாமே என்று கிளம்பிய சர்ச்சை பேச்சுகளை கில் திட்டவட்டமாக நிராகரித்துள்ளார்.
அதாவது, ''தற்போது ஒருநாள் போட்டிகளின் எண்ணிக்கை மிகவும் குறைவாகவே உள்ளது. எனவே பரிசோதனைகள் செய்வதற்கு போதிய நேரமில்லை. 2027 ஒருநாள் உலகக்கோப்பையில் எந்தக் கூட்டணியுடன் விளையாட திட்டமிட்டுள்ளோமோ, அதே கூட்டணியை வைத்து இப்போதிருந்தே தொடர்ந்து விளையாடுவதே சரியாக இருக்கும்" என்று பதிலளித்துள்ளார்.
இந்திய அணி ஒரு மாத இடைவெளிக்குப் பிறகு நியூசிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் பங்கேற்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
English Summary
What did Captain Gill say about whether senior players would be part of the 2027 World Cup squad