ரூ.100 கோடி லஞ்சம் வாங்கி இருக்காங்க... பள்ளிக்கரணை விவகாரத்தில் முன்னாள் அமைச்சர் பேட்டி!
DMK ADMK RB Udhayakumar pallikaranaio issue
மதுரையில் செய்தியாளர்களை சந்தித்த சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஆர்.பி. உதயகுமார், பள்ளிக்கரணை சதுப்புநிலத்தில் நடைபெறும் சட்டவிரோத கட்டுமானப் பணிகளை கடுமையாக விமர்சித்தார்.
அவர் கூறியதாவது: “சென்னை பள்ளிக்கரணையில் தனியார் நிறுவனம் எந்தவிதமான கட்டுமானப் பணிகளையும் மேற்கொள்ளக்கூடாது என உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது. அதுபோலும், ரூ.2000 கோடி மதிப்பில் அடுக்குமாடி குடியிருப்புக்கான அனுமதி வழங்கப்பட்டிருப்பது மிகப்பெரிய சர்ச்சையாக மாறியுள்ளது.
சுற்றுச்சூழல் முக்கியத்துவம் வாய்ந்த சதுப்புநிலத்தில் சட்டவிரோதமாக கட்டிட அனுமதி வழங்கியதற்கு சுற்றுச்சூழல் துறை, வனத்துறை, சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் ஆகியவை விளக்கம் அளிக்க வேண்டும். இந்த அனுமதியைச் சுற்றி ரூ.100 கோடி அளவில் லஞ்சம் பரிமாறியதாக சந்தேகங்கள் எழுந்துள்ளன.
பள்ளிக்கரணை சதுப்புநிலம் ராம்சார் அங்கீகாரம் பெற்ற சர்வதேச முக்கியத்துவம் வாய்ந்த ஈரப்பகுதி. அந்த அங்கீகாரம் பெற்ற பகுதிகளில் எந்தவிதமான கட்டுமானமும் மேற்கொள்ளக்கூடாது என்பது சட்டப்படி தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. இருந்தும், 1,250 குடியிருப்புகள் கொண்ட திட்டத்துக்கு அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது. இது சட்டத்தை மீறிய செயல்.
பள்ளிக்கரணை சதுப்புநிலம் வடகிழக்கு பருவமழையின் போது நீரை சேமித்து நிலத்தின் நீர் நிலையை உயர்த்தும் முக்கிய ஈரப்பகுதியாகும். அந்த இயற்கை வளத்தை அழித்து கட்டுமான அனுமதி வழங்கியதில் அரசு அதிகார துஷ்பிரயோகம் நடந்துள்ளது.
இந்த ஊழல், முறைகேடுகளுக்கு முடிவுகட்ட மக்கள் தயாராகி விட்டனர். மீண்டும் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அம்மாவின் ஆட்சி வந்தால், இத்தகைய சதுப்புநிலங்கள் முழுமையாக பாதுகாக்கப்படும்,” என்றார் உதயகுமார்.
English Summary
DMK ADMK RB Udhayakumar pallikaranaio issue