மாநிலங்களவை எம்.பி.க்கள்: எடப்பாடி பழனிசாமியுடன் தேமுதிக பொருளாளர் எல்.கே.சுதீஷ் சந்திப்பு..!
DMDK Treasurer LK Sutheesh meets Edappadi Palaniswami
தமிழகத்தில் இருந்து தேர்வு செய்யப்பட்ட மாநிலங்களவை எம்.பி.க்களாக ம.தி.மு.க.வை சேர்ந்த வைகோ, தி.மு.க.வை சேர்ந்த வில்சன், சண்முகம், முகமது அப்துல்லா, பா.ம.க.வின் அன்புமணி ராமதாஸ், அ.தி.மு.க.வின் சந்திரசேகர் ஆகிய 06 பேரின் பதவிக்காலம் வருகிற ஜூலை மாதம் முடிவடைகிறது.
இதற்கான தேர்தல் வருகிற 19-ந்தேதி நடைபெறவுள்ளது. இதில் ஒரு எம்.பி. வெற்றி பெற வேண்டுமென்றால் 34 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு தேவை. அதன்படி, தி.மு.க.விற்கு நான்கு இடங்களும், அ.தி.மு.க.விற்கு 02 இடங்களும் கிடைக்கும் வாய்ப்புள்ளது.

தி.மு.க. சார்பில் வில்சன், கவிஞர் சல்மா, சிவலிங்கம் ஆகிய 03 பேர் போட்டியிடும் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர். மீதமுள்ள ஒரு இடம், மக்கள் நீதி மய்யத்திற்கு தி.மு.க. ஒதுக்கியுள்ளது. அக்கட்சி சார்பில் கமல்ஹாசன் போட்டியிடுவார் என்று அறிவித்துள்ளது. இந்த முறை வைகோவிற்கு எம்.பி. பதவிக்கு இடம் இல்லை. மேலும் அ.தி.மு.க. சார்பாக மாநிலங்களவை எம்.பி. வேட்பாளர்கள் யார்? என்று இன்னும் அறிவிக்கப்படவில்லை.
அதேநேரம் தங்களுக்கு ஒரு இடம் வேண்டும் என்று தே.மு.தி.க.வும், பா.ம.க.வும், நெருக்கடி கொடுத்து வருகின்றன. அத்துடன், வேட்பாளர்கள் தேர்வு குறித்து அ.தி.மு.க.பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தீவிர ஆலோசனையில் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், தேமுதிக பொருளாளர் எல்.கே.சுதீஷ், எடப்பாடி பழனிசாமி சந்தித்து பேசி வருகிறார். சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள இபிஎஸ் இல்லத்தில் இந்த சந்திப்பு நடைபெறுகிறது. மாநிலங்களவை இடம் வழங்க வேண்டும் என அதிமுகவிடம் தேமுதிக கேட்டு வரும் நிலையில் இந்த சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
English Summary
DMDK Treasurer LK Sutheesh meets Edappadi Palaniswami