சபரிமலை நடை திறக்கப்பட்டது; நாளை முதல் மண்டல காலம் தொடக்கம்; ஐயப்ப பக்தர்கள் மகிழ்ச்சி..! - Seithipunal
Seithipunal


கேரளா சபரிமலை ஐயப்பன் கோயில் மண்டல கால பூஜைகளுக்காக நடை இன்று மாலை திறக்கப்பட்டது. இதனை முன்னிட்டு பக்தர்கள் குவிந்து வருகின்றனர். ஐயப்பன் கோயிலில் தங்கம் திருடப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், இந்த வருட மண்டல காலம் நாளை (17-ஆம் தேதி) முதல் தொடங்குகிறது. இதை முன்னிட்டு இன்று மாலை 05 மணிக்கு கோயில் நடை திறக்கப்படுகிறது. தந்திரி மகேஷ் மோகனர் முன்னிலையில் மேல்சாந்தி அருண்குமார் நம்பூதிரி நடையை திறந்து வைத்தார்.

பின்னர் மேல்சாந்தி கோயிலுக்குள் இருந்து எடுத்து வரும் தீபத்தை 18-ஆம் படி வழியாக கொண்டு சென்று நெய் தேங்காய்களை எரிக்கும் ஆழியில் தீ மூட்டுவார். மண்டல பூஜை முடிந்து நடை சாத்தும் வரை ஆழியில் இந்த தீ எரிந்து கொண்டிருக்கும். இதன்பிறகு புதிய மேல்சாந்திகளை அருண்குமார் நம்பூதிரி கைபிடித்து 18-ஆம் படி வழியாக சன்னிதானத்திற்கு கொண்டு வருவார்.

இதனை தொடர்ந்து மாலை 06.30 மணியளவில் புதிய மேல்சாந்திகள் பொறுப்பேற்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. பின்னர் இரவு 10 மணியளவில் கோயில் நடை சாத்தப்பட்டது. கார்த்திகை 01-ஆம் தேதியான நாளை அதிகாலை 03 மணியளவில் நடை திறக்கப்பட்டு இந்த வருட மண்டல கால பூஜைகள் தொடங்க உள்ளன. பின்னர் கோயில் நடையை புதிய மேல்சாந்தியான பிரசாத் நம்பூரியும், மாளிகைப்புரம் கோயில் நடையை மனு நம்பூதிரியும் திறப்பார்கள்.

நாளை முதல் சபரிமலை ஐயப்பனுக்கு நெய்யபிஷேகமும் தொடங்கும். இன்று நடை திறப்பை முன்னிட்டு நேற்று முதலே தமிழ்நாடு, ஆந்திரா, தெலங்கானா, கர்நாடகா உள்பட பல்வேறு மாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் குவியத்தொடங்கியுள்ளனர். இன்று பிற்பகல் 02 மணி முதல் பக்தர்கள் பம்பையில் இருந்து சன்னிதானம் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளார்.

ஐயப்பனின் தரிசனத்திற்கு ஆன்லைன் மூலம் 70 ஆயிரம் பக்தர்களுக்கும் உடனடி முன்பதிவு மூலம் 20 ஆயிரம் பக்தர்களுக்கும் அனுமதி வழங்கப்படுகிறது. இன்று முதல் டிசம்பர் 02-ஆம் தேதி வரை 17 நாட்களுக்கான முன்பதிவு முடிவடைந்து விட்டதாகவும், இதுவரை 23 லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் தரிசனத்திற்காக ஆன்லைனில் முன்பதிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

அத்துடன், பக்தர்களுக்காக பம்பை, நிலக்கல், எருமேலி, வண்டிப்பெரியார் மற்றும் செங்கணூர் ஆகிய இடங்களில் உடனடி முன்பதிவு கவுண்டர்கள் திறக்கப்பட்டுள்ளன. இந்த வருடம் முதல் கேரளாவில் சாலை விபத்துகளில் மரணமடையும் சபரிமலை பக்தர்களுக்கு ரூ.5 லட்சமும், மாரடைப்பு உள்பட இயற்கை மரணத்திற்கு ரூ.3 லட்சமும் இன்சூரன்ஸ் வழங்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

சபரிமலை மண்டல காலம் தொடங்குவதை முன்னிட்டு சபரிமலையில் 03 எஸ்பிக்கள் தலைமையில் 3500க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். பெண்கள், முதியவர்கள் மற்றும் குழந்தைகள் எளிதில் தரிசனம் செய்வதற்காக 18ம் படிக்கு அருகே தனி வரிசை ஏற்படுத்தப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Sabarimala Mandalal Kaal Poojas begin


கருத்துக் கணிப்பு

பிஹார் தேர்தல் முடிவுகள் தமிழகத்தில் எதிரொலிக்குமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

பிஹார் தேர்தல் முடிவுகள் தமிழகத்தில் எதிரொலிக்குமா?




Seithipunal
--> -->