ஆண்ட காட்சிகளுக்கு ஆட்டம் காட்டும் தேமுதிக! பிரேமலதா தாமதத்தால் கழற்றிவிடும் முடிவில் திமுக–அதிமுக!இது தான் காரணமா?
DMDK shows signs of resistance to the ruling party DMK AIADMK decide to remove Premalatha due to delay Is this the reason
2026 சட்டமன்றத் தேர்தல் தேதி அறிவிப்புக்கு இன்னும் சில வாரங்களே இருக்கும் நிலையில், தமிழக அரசியல் களம் பரபரப்பாகி வருகிறது. திமுக, அதிமுக ஆகிய இரண்டு பிரதான கட்சிகளும் தங்கள் கூட்டணிகளை ஓரளவு உறுதிப்படுத்தி வரும் சூழலில், தேமுதிக மட்டும் இதுவரை எந்தக் கூட்டணிக்கும் வெளிப்படையாக ‘ஓகே’ சொல்லாமல் காலம் தாழ்த்தி வருகிறது. இந்த தாமதத்திற்குப் பின்னால், அதிக இடங்கள் மற்றும் அரசியல் லாபங்களைப் பெறும் கணக்கு இருப்பதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
கடந்த மக்களவைத் தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி அமைத்திருந்த தேமுதிக, சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் காலம் இருப்பதாகக் கூறி, ஜனவரி மாதம் நடைபெற்ற கட்சி மாநாட்டுக்குப் பிறகு கூட்டணி முடிவு அறிவிக்கப்படும் என்று தெரிவித்திருந்தது. ஆனால் மாநாடு முடிந்து இரண்டு வாரங்களுக்கு மேலாகியும் எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை. இதனால், தேமுதிக எந்தப் பக்கம் செல்லப் போகிறது என்ற கேள்வி அரசியல் வட்டாரங்களில் தொடர்ந்து விவாதமாகி வருகிறது.
அதிமுக தரப்பில், தேமுதிகவுக்கு அதிகபட்சமாக 8 முதல் 10 சட்டமன்றத் தொகுதிகள் வரை வழங்கத் தயாராக இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆனால் தேமுதிக தரப்பில், 21 சட்டமன்றத் தொகுதிகள், ஒரு ராஜ்யசபா சீட், அதோடு மத்திய அமைச்சர் பதவி வரை கோரிக்கை வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதேபோல், திமுக கூட்டணியிலும் தேமுதிகவை இணைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டதாகவும், அங்கு 7 தொகுதிகள் வரை வழங்கலாம் என பேச்சு நடந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால் பிரேமலதா விஜயகாந்த் தரப்பில், குறைந்தது 10 தொகுதிகளுடன் ராஜ்யசபா சீட் வேண்டும் என்ற கோரிக்கை வைக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.
இந்தச் சூழலில், திமுக–காங்கிரஸ் இடையே உரசல் நிலவி வருவதாகவும், ஒருவேளை காங்கிரஸ் திமுக கூட்டணியிலிருந்து வெளியேறினால், அந்த இடத்தை தேமுதிக நிரப்பி கூடுதல் தொகுதிகளைப் பெற முடியும் என்ற நம்பிக்கையில்தான் பிரேமலதா விஜயகாந்த் இன்னும் எந்தக் கூட்டணிக்கும் உறுதியான பதில் அளிக்காமல் காத்திருக்கிறார் என அரசியல் பார்வையாளர்கள் கூறுகின்றனர். இதனால்தான் அதிமுக, திமுக மட்டுமல்லாமல், தவெக உள்ளிட்ட அணிகளிடமும் ஒரே நேரத்தில் பேரம் பேசும் நிலைப்பாட்டை அவர் எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.
இதற்கிடையே, தவெகவுடன் காங்கிரஸ் கூட்டணி அமைக்கலாம் என்ற தகவல்களும் அரசியல் களத்தில் பரவி வருகின்றன. ஆனால் இதுகுறித்து காங்கிரஸ் மேலிடம் இதுவரை எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் வெளியிடவில்லை. ஒருவேளை ராகுல் காந்தி தவெகவுடன் கூட்டணி என அறிவித்தால், திமுக கூட்டணியில் தேமுதிகக்கு கூடுதல் இடம் கிடைக்கும் என்ற கணக்கும் பிரேமலதா தரப்பில் இருப்பதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், பிரதமர் மோடி மதுராந்தகத்தில் நடைபெற உள்ள பொதுக் கூட்டத்தில் பங்கேற்க உள்ளார். அந்தக் கூட்டத்தில் கூட்டணி கட்சித் தலைவர்களையும் மேடையேற்ற பாஜக முயற்சித்ததாக தகவல்கள் வெளியானது. இதன் தொடர்ச்சியாக, பாஜக தரப்பினர் பிரேமலதாவுடன் பேச்சு நடத்தியதாக கூறப்பட்டாலும், அந்த தகவலை அவர் மறுத்துள்ளார்.
காங்கிரஸ் எடுக்கும் முடிவை எதிர்பார்த்தே தேமுதிக காத்திருக்கிறது என பேசப்படும் நிலையில், ஒரே நேரத்தில் பல கூட்டணிகளிடமும் பேரம் பேசும் இந்த அணுகுமுறை, திமுக மற்றும் அதிமுக ஆகிய இரு தரப்புகளையும் அதிருப்திக்குள்ளாக்கியுள்ளதாக கூறப்படுகிறது. இதன் விளைவாக, “இவ்வளவு தாமதம் தேவையில்லை” என்ற முடிவுக்கு வந்து, தேமுதிகவை கூட்டணியில் சேர்க்கும் முயற்சியை கைவிடலாம் என இரு அணிகளும் யோசித்து வருவதாக அரசியல் வட்டாரங்களில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
English Summary
DMDK shows signs of resistance to the ruling party DMK AIADMK decide to remove Premalatha due to delay Is this the reason