2027 மக்கள் தொகை கணக்கெடுப்பு: ஏப்ரல் 1 முதல் முதல் கட்டம் தொடக்கம் – மக்களிடம் கேட்கப்பட உள்ள 33 கேள்விகள் என்னென்ன?
2027 Census Phase 1 begins from April 1 What are the 33 questions that will be asked of
2011-க்குப் பிறகு இரண்டு கட்டங்களாக நடத்தப்பட உள்ள மக்கள் தொகை கணக்கெடுப்பின் முதல் கட்டம், 2027 ஏப்ரல் 1ஆம் தேதி தொடங்கி செப்டம்பர் 30ஆம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவுகளை பதிவாளர் ஜெனரல் மற்றும் மக்கள் தொகை கணக்கெடுப்பு ஆணையர் வெளியிட்டுள்ளார்.
இந்த முதல் கட்டத்தில், வீட்டுப் பட்டியல் மற்றும் வீடு எண்ணிக்கை (House Listing & Housing Census) செயல்முறை மூலம், அந்தந்த உள்ளூர் பகுதிகளின் எல்லைக்குள் உள்ள வீடுகள் அனைத்திலும் சென்று தகவல்கள் சேகரிக்கப்படவுள்ளன. மக்கள் தொகை கணக்கெடுப்பு அதிகாரிகள் வீடு வீடாக சென்று, மொத்தம் 33 வகையான கேள்விகளை மக்களிடம் கேட்டு விவரங்களை பதிவு செய்வார்கள்.
இந்த கணக்கெடுப்பில், வீடுகளின் கட்டமைப்பு குறித்த தகவல்கள் முக்கியமாக சேகரிக்கப்படுகின்றன. வீட்டின் சுவர்கள், கூரை, தரை ஆகியவை எந்தப் பொருட்களால் கட்டப்பட்டுள்ளன என்பதும், வீடு நல்ல நிலையில் உள்ளதா, வாழத் தகுதியானதா அல்லது பாழடைந்ததா என்பதும் கேட்கப்படும். மேலும் அந்த வீடு வாழ்வதற்காக மட்டுமே பயன்படுத்தப்படுகிறதா, அல்லது வேறு நோக்கங்களுக்கும் பயன்படுகிறதா என்பதும் பதிவு செய்யப்படும்.
வீட்டில் எத்தனை குடும்பங்கள் வசிக்கின்றன, ஒவ்வொரு குடும்பத்திலும் எத்தனை உறுப்பினர்கள் உள்ளனர், குடும்பத் தலைவரின் பெயர், பாலினம், அவர் பட்டியல் சாதி, பட்டியல் பழங்குடி அல்லது பிற பிரிவைச் சேர்ந்தவரா என்பன உள்ளிட்ட சமூகத் தகவல்களும் சேகரிக்கப்படுகின்றன. வீட்டின் உரிமை நிலை, வசிப்பதற்காக உள்ள அறைகளின் எண்ணிக்கை, திருமணமான தம்பதிகள் எத்தனை பேர் உள்ளனர் என்பதும் இதில் அடங்கும்.
குடிநீர் வசதி தொடர்பாக, அரசு நீர், போர்வெல், கிணறு அல்லது பிற ஆதாரங்களில் எது முக்கியமானது என்பதும், போதுமான குடிநீர் கிடைக்கிறதா என்பதும் கேட்கப்படும். வீட்டின் முக்கிய வெளிச்ச ஆதாரம் மின்சாரமா அல்லது வேறு ஆதாரமா என்பதும் பதிவு செய்யப்படும். அதோடு, கழிப்பறை உள்ளதா, இருந்தால் அது இந்திய அல்லது மேற்கத்திய முறையிலானதா, கழிவுநீர் அகற்றும் வசதி உள்ளதா, குளியலறை இருக்கிறதா என்பன போன்ற சுகாதார விவரங்களும் சேகரிக்கப்படும். சமையலுக்குப் பயன்படுத்தப்படும் முக்கிய எரிபொருள் LPG, PNG, மரம், நிலக்கரி அல்லது வேறு ஏதேனும் உள்ளதா என்பதும் கணக்கெடுக்கப்படும்.
தொழில்நுட்ப வசதிகள் குறித்த தகவல்களும் இந்த கணக்கெடுப்பில் இடம் பெறுகின்றன. வீட்டில் ரேடியோ, டிரான்சிஸ்டர், தொலைக்காட்சி உள்ளதா, இணைய இணைப்பு இருக்கிறதா, மடிக்கணினி மற்றும் கணினிகள் எத்தனை உள்ளன என்பதும் பதிவு செய்யப்படும். லேண்ட்லைன் தொலைபேசி, சாதாரண மொபைல் போன், ஸ்மார்ட்போன் ஆகியவற்றின் எண்ணிக்கையும் சேகரிக்கப்படும்.
மேலும், போக்குவரத்து வசதிகள் தொடர்பாக கார்கள், ஜீப்புகள், வேன்கள் மட்டுமின்றி, மிதிவண்டி, ஸ்கூட்டர், பைக், மொபெட் போன்ற வாகனங்களின் எண்ணிக்கையும் கேட்கப்படும். குடும்பம் பயன்படுத்தும் தானியங்கள் குறித்த தகவல்களும் சேர்க்கப்படும். இறுதியாக, மக்கள் தொகை கணக்கெடுப்பு தொடர்பான தகவல்களை எதிர்காலத்தில் பயன்படுத்துவதற்காக ஒரு மொபைல் எண்ணும் கேட்கப்படும்.
இந்த மகத்தான பணிக்காக, நாடு முழுவதும் சுமார் 34 லட்சம் மேற்பார்வையாளர்கள் வீடு வீடாக கணக்கெடுப்பு பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள். அவர்களுக்கு துணையாக, 1.30 லட்சம் மக்கள் தொகை கணக்கெடுப்பு அதிகாரிகள் பணியில் அமர்த்தப்பட உள்ளனர். இந்த கணக்கெடுப்பில் சாதி தொடர்பான தகவல்களும் கேட்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. முழு செயல்முறையும் மொபைல் பயன்பாடுகள் மூலம், முற்றிலும் டிஜிட்டல் முறையில் நடத்தப்படும்.
மக்கள் தொகை கணக்கெடுப்பு இரண்டு கட்டங்களாக நடைபெறும். முதல் கட்டம் வீட்டு பட்டியல் மற்றும் வீடமைப்பு கணக்கெடுப்பு ஆகும். இரண்டாம் கட்டமான மக்கள்தொகை கணக்கெடுப்பில், ஒவ்வொரு வீட்டிலும் வசிக்கும் ஒவ்வொரு நபரையும் பற்றிய மக்கள்தொகை, சமூக-பொருளாதார, கலாச்சார மற்றும் பிற முக்கிய தகவல்கள் விரிவாக சேகரிக்கப்பட உள்ளன.
English Summary
2027 Census Phase 1 begins from April 1 What are the 33 questions that will be asked of