மோகன் ஜி-யின் 'திரௌபதி 2' தமிழக மக்களிடையே பிரிவினையைத் தூண்டுபவர்களை அடையாளம் காட்டும்; அண்ணாமலை பாராட்டு..!
Annamalai praised Draupadi 2 stating that it will identify those who incite division among the people of Tamil Nadu
இயக்குனர் மோகன் ஜி. இயக்கத்தில் சரித்திர காலப் படமாக உருவாகியுள்ள 'திரௌபதி 2' கடந்த 15-ஆம் தேதி வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டது. பின்னர் படத்தின் ரிலீஸ் தேதி ஒத்திவைக்கப்பட்டு, நாளை, 23-ஆம் தேதி, வெளியாகவுள்ளது.
இந்த படத்தில் ரிச்சர்ட் ரிஷி கதாநாயகனாக நடித்துள்ளார். ரக்சனா இந்துசூடன் கதையின் நாயகியாக நடித்துள்ளார். இவர்களுடன், நட்டி, வேல ராமமூர்த்தி, நாடோடிகள் பரணி, உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். ஜிப்ரான் இசையமைத்துள்ளார்.
'திரௌபதி 2' படத்தை அன்புமணி ராமதாஸ் , எச்.ராஜா ஆகியோர் பாராட்டியுள்ள நிலையில், தமிழக பாஜகவின் முன்னாள் தலைவர் அண்ணாமலை அவர்களும் பாராட்டியுள்ளார். இது குறித்தும், 'திரௌபதி 2' படம் வெற்றிபெற வாழ்த்தி அண்ணாமலை தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளதாவது;
''அன்புச் சகோதரர் திரு மோகன் ஜி, அவர்கள் இயக்கத்தில், திரௌபதி 2 திரைப்படம், நாளை வெளியாகவுள்ளது மகிழ்ச்சியளிக்கிறது. புண்ணிய பூமியாம் நம் திருவண்ணாமலையை தலைமையிடமாகக் கொண்டு, 14 ஆம் நூற்றாண்டில் ஆட்சி புரிந்த மாமன்னன் வீர வல்லாளர் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு, உருவாக்கப்பட்டுள்ள திரௌபதி 2 திரைப்படம், மறைக்கப்பட்ட வீரத் தமிழ் மன்னர்கள் வரலாற்றை வெளிக்கொண்டு வரும் ஒரு முயற்சியாக அமைந்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.
ஒரு நாணயத்தின் இரண்டு பக்கங்களையும் பார்க்க வேண்டியது, முன்னேற்றப் பாதையில் செல்ல விரும்பும் ஒரு சமூகத்தின் கடமை. அந்த வகையில், சகோதரர் திரு மோகன் ஜி. அவர்களது திரைப்படங்கள், சமூக அக்கறையுடன் குறைகளைச் சுட்டிக்காட்டி, சுயநலத்துடன் செயல்படுபவர்களை அடையாளம் கண்டு புறக்கணித்து, மக்கள் அனைவரும் ஒற்றுமையுடன் இருக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்துவதாகவே அமைந்திருக்கின்றன.
அந்த வகையில், திரௌபதி 2 திரைப்படமும், அறமும், வீரமும் சேர்ந்த தமிழ் மண்ணின் வரலாற்றை வெளிக்கொண்டு வருவதாகவும், பெருமை மிகுந்த தமிழ் கலாச்சாரத்தையும், பண்பாட்டையும், அடையாளங்களையும் அழித்து, தமிழக மக்களிடையே பிரிவினையைத் தூண்டுபவர்களை அடையாளம் காட்டுவதாகவும் அமையவும், திரௌபதி 2 திரைப்படம் மாபெரும் வெற்றியடையவும், எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்.'' என்று பதிவிட்டுள்ளார்.
English Summary
Annamalai praised Draupadi 2 stating that it will identify those who incite division among the people of Tamil Nadu