கூட்டணி குழப்பத்தில் தேமுதிக: தேர்தல் நெருங்கியும் முடிவெடுக்க முடியாமல் திணறும் பிரேமலதா!டிமாண்டால் எரிச்சலான திமுக -அதிமுக! - Seithipunal
Seithipunal


சட்டப்பேரவைத் தேர்தல் அறிவிப்பு வெளியாக இன்னும் சில வாரங்களே உள்ள நிலையில், ஒரு காலத்தில் தமிழக அரசியலில் முக்கிய சக்தியாகக் கருதப்பட்ட தேமுதிக, தற்போது கூட்டணி அமைப்பதில் பெரும் குழப்பத்தில் சிக்கியுள்ளதாக அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது. தேர்தல் நேரம் நெருங்கியபோதும், எந்த அணியில் சேருவது என்ற தெளிவான முடிவை எடுக்க முடியாமல், கட்சித் தலைமை காத்திருக்கும் நிலையே தொடர்கிறது.

2011 சட்டப்பேரவைத் தேர்தலில் தேமுதிக எதிர்க்கட்சியாக உயர்ந்தபோது, விஜயகாந்த் தலைமையிலான அந்த கட்சி தமிழக அரசியலின் மாற்று சக்தியாகவே பார்க்கப்பட்டது. ஆனால் அதன்பின்னர் நடந்த தொடர் தேர்தல்களில் அந்த வெற்றி தொடரவில்லை. பல்வேறு கூட்டணிகளில் இடம் பெற்றாலும், ஒரு தொகுதியில்கூட வெற்றி பெற முடியாத நிலை உருவானது.

இதன் உச்சமாக, 2024 மக்களவைத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் கடைசி நேரத்தில் இணைந்த தேமுதிக, ஐந்து தொகுதிகளில் போட்டியிட்டு தோல்வியைச் சந்தித்தது. விருதுநகரில் போட்டியிட்ட விஜய பிரபாகரன் மட்டும் இறுதி கட்டம் வரை போராடி வெற்றி வாய்ப்பை இழந்தார். அந்தத் தேர்தலுக்குப் பிறகும் அதிமுகவுடனான உறவு தொடரும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ராஜ்யசபா இடம் வழங்கப்படாதது தேமுதிக தலைமையில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது.

இதன் தொடர்ச்சியாக அதிமுகவிலிருந்து மெதுவாக விலகிய தேமுதிக, திமுகவின் பக்கம் சிக்னல் அனுப்பத் தொடங்கியது. இரு அணிகளுடனும் பேச்சுவார்த்தைக்கு கதவுகள் திறந்திருப்பதாக பிரேமலதா விஜயகாந்த் கூறியதும் அரசியல் கவனத்தை ஈர்த்தது. ஆனால் திமுகவும் அதிமுகவும் தங்களின் கூட்டணி அமைப்புகளை பெரும்பாலும் இறுதி செய்துவிட்டதாக தகவல்கள் வெளியான நிலையில், தேமுதிக மட்டும் எந்த அணியிலும் உறுதி செய்யப்படாத நிலையில் உள்ளது.

இதற்கிடையே, “இதுவரை யாரும் எங்களை கூட்டணி பேச்சுவார்த்தைக்கே அழைக்கவில்லை” என்று பிரேமலதா வெளிப்படையாக கூறியது அரசியல் வட்டாரங்களில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தேமுதிக மீது பெரிய கட்சிகள் தயக்கம் காட்டுவதற்கான காரணமாக, அதிகமான தொகுதி கோரிக்கைகள் முன்வைக்கப்படுவதாக கூறப்படுகிறது. ஆரம்பத்திலேயே 20 சட்டப்பேரவைத் தொகுதிகள் மற்றும் ஒரு ராஜ்யசபா இடம் என்ற கோரிக்கையுடன் பேச்சுவார்த்தை தொடங்கியதால், திமுகவும் அதிமுகவும் ஆர்வம் காட்டவில்லை என அரசியல் பார்வையாளர்கள் தெரிவிக்கின்றனர்.

மேலும், மாநில மாநாட்டில் “பிரேமலதாவை துணை முதல்வராக்குவோம்”, “நாங்கள் இல்லாமல் யாரும் ஆட்சியமைக்க முடியாது” என்ற கட்சித் தலைவர்களின் பேச்சுகளும், இரு பெரிய கட்சிகளுக்கு எரிச்சலை ஏற்படுத்தியதாக கூறப்படுகிறது. அதிமுக தரப்பில் அதிகபட்சமாக 6 முதல் 10 தொகுதிகள் மட்டுமே வழங்க முடியும் என்றும், திமுக தரப்பில் அதைவிடக் குறைவான எண்ணிக்கையே சாத்தியம் என்றும் தகவல்கள் வெளியாகின்றன. ராஜ்யசபா இடம் குறித்து எந்த தரப்பும் உறுதியான வாக்குறுதி அளிக்கவில்லை.

இந்த சூழலில், குறைந்த தொகுதிகளை ஏற்றுக்கொள்வதா அல்லது கூட்டணியே வேண்டாமா என்ற இரண்டில் ஒன்றை தேர்வு செய்ய வேண்டிய கட்டாயத்தில் தேமுதிக சிக்கியுள்ளது. தனித்து போட்டியிடும் வாய்ப்பை பிரேமலதா முற்றாக நிராகரித்துள்ள நிலையில், கூட்டணி குறித்து விரைவில் முடிவெடுக்க வேண்டிய அழுத்தம் அதிகரித்துள்ளது.

தவெக பக்கம் செல்வது ஒரு மாற்று வாய்ப்பாக பேசப்பட்டாலும், அது நடைமுறையில் சாத்தியமற்றதாகவே அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர். இதற்கிடையே, கூட்டணி முடிவு எடுக்கப்படாத நிலையிலேயே, விருதுநகர் அல்லது சிவகாசி தொகுதியில் விஜய பிரபாகரன் போட்டியிடுவார் என அறிவித்து தேமுதிக பிரச்சாரத்தை தொடங்கியுள்ளது. இந்த அறிவிப்பிற்குப் பின்னாலும் அரசியல் கணக்குகள் இருப்பதாக கூறப்படுகிறது.

2026 சட்டமன்றத் தேர்தலில் எந்த தொகுதி உறுதி செய்யப்படுகிறதோ, அதன்படி தேமுதிக எந்தப் பக்கம் செல்லும் என்பது தெளிவாகும் என அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. “எல்லா கட்சிகளுமே எங்களுக்குத் தோழமைக் கட்சிகள்தான்” என்று பிரேமலதா கூறியிருந்தாலும், அந்த தோழமையை அதிகாரப்பூர்வ கூட்டணியாக மாற்ற எந்தக் கட்சியும் இதுவரை முன்வராததே, தேமுதிக எதிர்கொள்ளும் மிகப் பெரிய அரசியல் சவாலாக மாறியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

DMDK in alliance turmoil Premalatha unable to make a decision even as elections approach DMK AIADMK irritated by the request


கருத்துக் கணிப்பு

தற்போதைய நிலையில் எந்த கூட்டணி வலுவாக உள்ளது?



Advertisement

கருத்துக் கணிப்பு

தற்போதைய நிலையில் எந்த கூட்டணி வலுவாக உள்ளது?




Seithipunal
--> -->