தேமுதிக அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்!
DMDK bomb thread
சமீபத்தில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இல்லத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டு, பின்னர் அது பொய்யான தகவல் எனவும், அந்த அழைப்பை செய்த மாற்றுத்திறனாளி நபர் கைது செய்யப்பட்டதும் நினைவில் உள்ளது.
இந்நிலையில் இன்று சென்னை கோயம்பேட்டில் அமைந்துள்ள தேமுதிக கட்சியின் அலுவலகத்திற்கும் மர்ம நபர் ஒருவர் வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ளார். சென்னை காவல் கட்டுப்பாட்டு அறைக்கு வந்த அந்த தொலைபேசி அழைப்பில், அலுவலகத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக அவர் கூறியதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
உடனடியாக தகவல் அறிந்த வெடிகுண்டு தடுப்புப் பிரிவு, நாய் படையினர் மற்றும் கோயம்பேட்டு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீவிர சோதனைகளை மேற்கொண்டனர். அலுவலகம் முழுவதும் சோதனை நடத்தப்பட்டு, அங்கு எந்தவித வெடிபொருளும் இல்லை என உறுதிப்படுத்தப்பட்டது.
இச்சம்பவம் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த சில வாரங்களாக தலைவர்கள், நடிகர்கள் வீடுகள், அரசியல் கட்சி அலுவலகங்கள் என பல இடங்களில் இவ்வாறு வெடிகுண்டு மிரட்டல்கள் அதிகரித்து வருவதால், காவல்துறை பாதுகாப்பு நடவடிக்கைகளை மேலும் வலுப்படுத்தியுள்ளது.
பொய்யான மிரட்டல்கள் சமூக அமைதியை குலைக்கும் என்பதால், இதுபோன்ற செயலில் ஈடுபடுபவர்களுக்கு கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என போலீஸ் தரப்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.