அமித்ஷா சென்னை வந்தும் எடப்பாடி சந்திப்பு ரத்து? பின்னணியில் எஸ்பி வேலுமணி விவகாரம்! தமிழக அரசியலில் பரபரப்பு
Did Edappadi cancel the meeting despite Amit Shah visit to Chennai The SP Velumani issue lies in the background a stir in Tamil Nadu politics
தென் மாநில முதல்வர்கள் மாநாட்டில் பங்கேற்பதற்காக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா சென்னை வந்துள்ள நிலையில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியுடனான சந்திப்பு கடைசி நேரத்தில் ரத்து செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
அமித்ஷா இன்று இரவு கோவளத்தில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் தங்க உள்ளதாகவும், நாளை காலை 10.30 மணிக்கு தென் மாநில முதல்வர்கள் மாநாட்டை தொடங்கி வைத்து பங்கேற்க உள்ளதாகவும் கூறப்படுகிறது. பின்னர் முதல்வர்களுடன் மதிய விருந்தில் பங்கேற்று, பிற்பகல் தமிழக பாஜக நிர்வாகிகளை சந்திக்கிறார்.
இந்த பயணத்தின்போது எடப்பாடி பழனிசாமி, அன்புமணி ராமதாஸ், டிடிவி தினகரன் உள்ளிட்டோரை அமித்ஷா சந்திக்கலாம் என முதலில் தகவல்கள் வெளியாகின.
குறிப்பாக, அதிமுகவில் எடப்பாடி பழனிசாமி மற்றும் எஸ்பி வேலுமணி, சிவி சண்முகம் உள்ளிட்ட அதிருப்தி தலைவர்களுக்கு இடையிலான பிரச்சினை குறித்து அமித்ஷா பேச்சுவார்த்தை நடத்துவார் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால், அந்த விவகாரம் தொடர்பாக பேச வேண்டாம் என எடப்பாடி பழனிசாமி தரப்பில் திட்டவட்டமாக தெரிவிக்கப்பட்டதாகவும், இதையடுத்து சந்திப்பை நடத்த வேண்டாம் என அமித்ஷா தரப்பில் முடிவு எடுக்கப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதேபோல் அன்புமணி ராமதாஸ் மற்றும் டிடிவி தினகரனுடனான சந்திப்புகளும் கடைசி நேரத்தில் ரத்து செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.
இதற்கிடையே சென்னை விமான நிலையத்திற்கு அமித்ஷா வந்தபோது அவரை வரவேற்க எடப்பாடி பழனிசாமி வரவில்லை என்றும் தகவல் வெளியாகியுள்ளது.
2026 சட்டப்பேரவைத் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி தோல்வியடைந்த பின்னர் அமித்ஷாவின் முதல் தமிழ்நாடு பயணம் என்பதால், அவரது சென்னை வருகை அரசியல் முக்கியத்துவம் பெற்றுள்ளது.
மேலும் தமிழகத்தில் தவெக ஆட்சியை அமைத்துள்ள நிலையில், மாநிலத்தின் புதிய அரசியல் சூழல் குறித்தும் பாஜக நிர்வாகிகளிடம் அமித்ஷா ஆலோசனை நடத்த உள்ளார்.
இதனிடையே, முதல்வர் விஜய் முதல்முறையாக அமித்ஷாவை சந்தித்து வரவேற்றதாக கூறப்படும் சூழலில், எடப்பாடி பழனிசாமியுடனான சந்திப்பு ரத்து செய்யப்பட்டிருப்பது தமிழக அரசியல் வட்டாரத்தில் கூடுதல் கவனத்தை பெற்றுள்ளது.
இருப்பினும், எடப்பாடி–அமித்ஷா சந்திப்பு ரத்து செய்யப்பட்டதற்கான காரணம் தொடர்பான தகவல்கள் தற்போது அரசியல் வட்டாரங்களில் வெளியாகும் தகவல்களே; அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்படவில்லை.
English Summary
Did Edappadi cancel the meeting despite Amit Shah visit to Chennai The SP Velumani issue lies in the background a stir in Tamil Nadu politics