அதிமுக–பாஜக ரகசியங்கள் திமுகவுக்கு கசியுதா? அதிமுகவில் கருப்பு ஆடு..உஷாரான பாஜக.. பரபர தகவல்!
Did AIADMK BJP secrets leak to DMK AIADMK has a black sheep BJP is wary Strange information
2026 சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், அதிமுக–பாஜக கூட்டணிக்குள் பரபரப்பு அதிகரித்து வருகிறது. அதிமுக–பாஜக கூட்டணியில் நடைபெற்ற முக்கிய ஆலோசனைகள் மற்றும் தேர்தல் வியூகங்கள் திமுக தலைமையிடம் அப்படியே “ஜெராக்ஸ்” எடுத்தது போல் சென்று சேர்வதாக பாஜக மேலிடத்திற்கு தகவல்கள் கிடைத்துள்ளன. இதனால் கடும் அதிருப்தியடைந்த பாஜக தலைமை, அதிமுக தரப்பில் இருந்து திமுகவுக்கு உளவு தகவல் வழங்குபவர்கள் யார் என்ற கேள்வியுடன் விசாரணையில் இறங்கியுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
மார்ச் மாதத்திலேயே தேர்தல் அறிவிப்பு வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படும் நிலையில், திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சிகள் கூட்டணி அமைப்பு மற்றும் தொகுதி பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தைகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. திமுகவைப் பொறுத்தவரை கூட்டணி முடிவுகள் பெரும்பாலும் உறுதி செய்யப்பட்ட நிலையில் இருப்பதாக கூறப்படும் சூழலில், அதிமுக–பாஜக கூட்டணிக்குள் ஏற்பட்டுள்ள இந்த தகவல் கசிவு சர்ச்சை பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.
அதிமுக மூத்த தலைவர் செங்கோட்டையன், நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்த சம்பவமே அதிமுகவுக்குள் பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், அதனைத் தொடர்ந்து அமித் ஷா தமிழகம் வந்தபோது திருச்சியில் உள்ள ஹோட்டலில் சில அதிமுக நிர்வாகிகளுடன் நடத்திய ஆலோசனையின் விவரங்கள் வெளியே கசியத் தொடங்கியதாக கூறப்படுகிறது. இந்த விவகாரம் பாஜக மேலிடத்தில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியதாகவும் தகவல்கள் வெளியாகின.
அதிமுகவுடன் பகிரப்பட்ட தேசிய ஜனநாயக கூட்டணியின் தேர்தல் வியூகங்கள், பிரசாரத் திட்டங்கள், பொதுக்கூட்டங்கள் மற்றும் தலைவர்களின் பயண விவரங்கள் போன்றவை, திமுக தலைமையிடம் முன்கூட்டியே சென்றுவிடுவதாக பாஜக உறுதிப்படுத்தியுள்ளதாக சொல்லப்படுகிறது. இதற்கான உதாரணமாக, பிரதமர் நரேந்திர மோடி தமிழகம் வருவது குறித்த தகவல் முதலில் அதிமுக தரப்பில் இருந்து திமுகவுக்கு சென்றதாகவும், அதன் காரணமாகவே மதுரை பொதுக்கூட்டம் பாதுகாப்பு காரணங்களால் சென்னைக்கு மாற்றப்பட்டதாகவும் அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது.
இந்த தொடர் தகவல் கசிவுகளின் பின்னணியில், புதிய கட்சிகளை கூட்டணியில் சேர்ப்பது, தொகுதி பங்கீடு உள்ளிட்ட முக்கிய விஷயங்களை ஆலோசிக்க அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மட்டுமே நேரடியாக டெல்லி வருமாறு பாஜக மேலிடம் அழைத்துள்ளதாக கூறப்படுகிறது. டெல்லியில் நடைபெற்ற சந்திப்பில், திமுகவுக்கு தகவல் கசியும் விவகாரத்தை அமித் ஷா தரப்பு நேரடியாக எடுத்து வைத்து, இது குறித்து விசாரித்து தெளிவான விளக்கம் தருமாறு அதிமுக தலைமையிடம் கேட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த நிலையில், அதிமுக–பாஜக கூட்டணியின் தேர்தல் வியூகங்களை திமுகவுக்கு உளவு சொல்லும் நபர்கள் யார் என்ற கேள்வி அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனை கண்டறிய மத்திய உளவுத்துறை மூலமாக கண்காணிப்பு மற்றும் விசாரணை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக பாஜக வட்டாரங்கள் கூறுகின்றன.
English Summary
Did AIADMK BJP secrets leak to DMK AIADMK has a black sheep BJP is wary Strange information