தாக்குதல் எதிரொலி! டெல்லி முதல்வர் ரேகா குப்தாவுக்கு Z பிரிவு பாதுகாப்பு! மத்திய அரசு அதிரடி!
Delhi CM Rekha Gupta Z category security
டெல்லி முதல்வர் ரேகா குப்தாவுக்கு இப்போது மத்திய அரசு ‘இஸட்’ பிரிவு பாதுகாப்பு வழங்க உத்தரவிட்டுள்ளது.
நேற்று காலை, ரேகா குப்தாவின் இல்லத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்ப்பு கூட்டமான ‘ஜன் சன்வாய்’ நிகழ்ச்சியின் போது திடீரென அடையாளம் தெரியாத நபர் ஒருவர் அவரை தலைமுடியைப் பிடித்து இழுத்து, கன்னத்தில் தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. தாக்குதலில் காயமடைந்த முதல்வர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று பின்னர் வீடு திரும்பினார். இந்த சம்பவத்துக்கு பல்வேறு கட்சித் தலைவர்கள் கடுமையான கண்டனம் தெரிவித்தனர்.
சம்பவத்தை அடுத்து மத்திய அரசு, பாதுகாப்பு கருதி டெல்லி முதல்வர் ரேகா குப்தாவுக்கு ‘இஸட்’ பிரிவு பாதுகாப்பு வழங்க தீர்மானித்துள்ளது. இதன்படி இன்று காலை முதல் சிஆர்பிஎப் படையினர் அவரது இல்லம் மற்றும் அலுவலகத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இதற்கு முன்பு டெல்லி காவல்துறை மட்டுமே பாதுகாப்பு வழங்கி வந்தது.
முதல்வரைத் தாக்கிய குற்றச்சாட்டில், குஜராத்தைச் சேர்ந்த 41 வயதான ராஜேஷ் கிம்ஜி என்பவர் கைது செய்யப்பட்டார். அவர் ராஜ்கோட் மாவட்டத்தைச் சேர்ந்தவர் என்றும், அவர் ஒரு ‘நாய் பிரியர்’ என்றும் கூறப்படுகிறது.
சமீபத்தில் உச்ச நீதிமன்றம், டெல்லி மற்றும் புறநகரங்களில் உள்ள தெருநாய்களை எட்டு வாரங்களுக்குள் பிடித்து நிரந்தர காப்பகங்களில் அடைக்க வேண்டும் என உத்தரவிட்டது. முதலில் இந்த உத்தரவை ரேகா குப்தா வரவேற்றிருந்தாலும், பின்னர் தெருநாய்களுக்கு தீங்கு விளைவிக்கும் நடவடிக்கைகளை தவிர்க்க வேண்டும் என தெரிவித்தார்.
தன் மகன் நாய்கள் மீது உள்ள அன்பினால் தவறாக நடந்துகொண்டதாகவும், முதல்வரிடம் மன்னிப்பு கோருவதாகவும் ராஜேஷின் தாயார் கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
English Summary
Delhi CM Rekha Gupta Z category security