கந்தல் சேகரிப்பாளர்களுக்கு புது வாழ்வுத்திட்டம்..பணி நியமன ஆணைகளை வழங்கிய மேயர் பிரியா!
A new livelihood scheme for flower collectors Mayor Priya has issued work appointment orders
மாண்புமிகு மேயர் திருமதி ஆர்.பிரியா அவர்கள் கொடுங்கையூர்
குப்பைக் கொட்டும் வளாகத்தில் கந்தல் சேகரிப்பாளர்களுக்கு புது வாழ்வுத்
திட்டமாக தனியார் நிறுவனத்தில் பணி நியமன ஆணைகளை வழங்கினார்.
பெருநகர சென்னை மாநகராட்சி கொடுங்கையூர் குப்பை கொட்டும்
வளாகத்தில் உள்ள 128 கந்தல் சேகரிப்பாளர்களுக்கு புது வாழ்வுத் திட்டமாக
தனியார் நிறுவனத்தில் பணி நியமன ஆணைகளையும், பாதுகாப்பு நல
தொகுப்புகளையும், மாநகராட்சியின் சார்பில் நலத்திட்ட உதவிகளுக்கான
தொகுப்புகளையும் மாண்புமிகு மேயர் திருமதி ஆர்.பிரியா அவர்கள் இன்று
ரிப்பன் கட்டட வளாகக் கூட்டரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில்
வழங்கினார்.
பெருநகர சென்னை மாநகராட்சியில் திடக்கழிவு மேலாண்மைப்
பணிகள் சிறப்புடன் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. திடக்கழிவுகள்
கொட்டப்படும் கொடுங்கையூர் மற்றும் பெருங்குடி குப்பை கொட்டும்
வளாகங்களில் உள்ள குப்பைகளில் இருந்து பல்லாண்டுகளாக கந்தல்
சேகரித்து அதன் மூலம் வரும் சிறு வருவாயைக் கொண்டு கந்தல்
சேகரிப்பாளர்கள் தங்களது வாழ்வினை நடத்தி வந்தனர்.
இந்நிலையில், கந்தல் சேகரிப்பாளர்களின் உடல் நலத்தைப்
பேணுகின்ற வகையிலும், அவர்களது வாழ்வாதார மேம்பாட்டினை
உருவாக்குகின்ற வகையிலும், பெருநகர சென்னை மாநகராட்சியின் சார்பில்
கந்தல் சேகரிப்பாளர்களைக் கண்டறிந்து, அவர்களுக்கு கொடுங்கையூர்
மற்றும் பெருங்குடியில் வாழ்வாதாரத்திற்கான சிறப்பு முகாம் நடத்தப்பட்டது.
இம்முகாமில் அவர்களுக்கு மருத்துவப் பரிசோதனை மற்றும் சிகிச்சை
வழங்குதல், அடிப்படைத் தேவையான ஆதார் அட்டைகள், குடும்ப
அட்டைகள் வழங்குதல், வாக்காளர்களாகப் பதிவு செய்து வாக்காளர்
அடையாள அட்டை வழங்குதல், வங்கிக் கணக்கினை உருவாக்குதல்,
தொழில் செய்ய விரும்புவோர்களுக்கு தாட்கோ மூலம் தொழில் கடன் உதவி
வழங்குதல், தூய்மைப் பணியாளர் நலவாரியத்தின் உறுப்பினராக
இணைத்தல், அவர்களது குடும்பத்தில் உள்ள குழந்தைகள் கல்விக்குத்
தேவையான உதவிகளை வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு சிறப்பு
நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.
தற்போது, இதன் தொடர்ச்சியாக முதற்கட்டமாக கொடுங்கையூர்
குப்பை கொட்டும் வளாகத்தில் கந்தல் சேகரித்து வரும் 308 நபர்களைக்
கண்டறிந்து அவர்களுக்கு புது வாழ்வுத் திட்டமாக, புதிய பணிக்கு விருப்பம்
தெரிவித்த கந்தல் சேகரிப்பாளர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தில் இருந்து
128 நபர்களுக்கு பெருநகர சென்னை மாநகராட்சியில் தூய்மைப் பணியினை
மேற்கொண்டு வரும் ஒப்பந்த நிறுவனமான என்விரோ சொல்யூசன்ஸ்
நிறுவனத்தில் பணிபுரிவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு
அதன்படி, 128 கந்தல் சேகரிப்பாளர்களுக்கு மின்கல வாகன ஓட்டுநர்கள்
மற்றும் தூய்மைப் பணியாளர்களாக இந்நிறுவனத்தில் பணிபுரிய பணி
நியமன ஆணைகள் இன்று வழங்கப்பட்டுள்ளது.
பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்ட நபர்களுக்கு பெருநகர
சென்னை மாநகராட்சியின் சார்பில் டிபன் கேரியர், வாட்டர் பாட்டில்,
புடவை, லுங்கி, துண்டு உள்ளிட்ட தொகுப்பு அடங்கிய நல உதவிகளும்,
சென்னை என்விரோ சொலியூசன்ஸ் நிறுவனம் மூலம் காலணிகள், கையுறை,
முகக்கவசம், சீருடைகள் மற்றும் தொப்பி உள்ளிட்ட பாதுகாப்பு நல
தொகுப்புகளும் வழங்கப்பட்டது.
இப்பணியில் சேர்ந்துள்ள இவர்களுக்கு மாத ஊதியமாக ரூ.19,786/-
கிடைத்திடும். மேலும், இயற்கை மரணத்திற்கான உதவித்தொகை, விபத்தில்
இறந்தவர்களுக்கான உதவித்தொகை, தாட்கோ நிறுவனம் உள்ளிட்ட
காப்பீட்டு உதவித் தொகைகள், வார விடுமுறை, மாதம் ஒரு முறை தற்செயல்
விடுப்பு மற்றும் மருத்துவ விடுப்பு, தேசிய விடுமுறை மற்றும் தேசிய
விடுமுறை நாட்களில் பணிபுரியும் போது இரட்டிப்பு ஊதியம், போனஸ்,
பி.எஃப். மற்றும் இ.எஸ்.ஐ., கருணைத் தொகை உள்ளிட்ட பல்வேறு
சலுகைகள் வழங்கப்படும்.
இன்று பணி நியமன ஆணைகள் பெற்ற பயனாளிகளின் சார்பில்
ஜெயந்தி, ஆனந்த், குகவள்ளி, லோகநாயகி ஆகியோர் பணிநியமன
ஆணைகள் வழங்கியதற்காக மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்
அவர்களுக்கும், மாநகராட்சி நிருவாகத்திற்கும் தங்களது மனமார்ந்த
நன்றியினைத் தெரிவித்தனர்.
இதன் மூலம் இவர்களுக்கு நிலைத்த வருமானமும், புதுவாழ்வும்
ஏற்படுவதற்கு வழிவகை ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதர கந்தல்
சேகரிப்பாளர்களுக்கு தேவையான தொழில் தொடங்கும் நடவடிக்கைகள்
குழந்தைகளின் கல்விக்கான உதவி மற்றும் வழிகாட்டுதல், அரசு
நலத்திட்டங்கள் உள்ளிட்ட வாழ்வாதாரத்தை உருவாக்குகின்ற
நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளன.இந்நிகழ்வில் மதிப்பிற்குரிய துணை மேயர் திரு.மு.மகேஷ்குமார்,மாநகராட்சி ஆணையர் திரு. ஜெ. குமரகுருபரன், இ.ஆ.ப., இணைஆணையர் (சுகாதாரம்) முனைவர் வீ.ப. ஜெயசீலன், இ.ஆ.ப., வடக்குவட்டார துணை ஆணையாளர் திரு.கட்டா ரவி தேஜா, இ.ஆ.ப., நிலைக்குழுத்தலைவர் (பொது சுகாதாரம்) டாக்டர் கோ. சாந்தகுமாரி, தலைமைப்
பொறியாளர் (திடக்கழிவு மேலாண்மை) திரு.சி. ஏ. பாலமுரளி,
செயற்பொறியாளர் திரு.ப.விஜய் அரவிந்த், என்விரோ சொலியூசன்ஸ்
நிறுவனத்தின் நிர்வாகிகள் திரு,ரவி திரு. பரிசுத்தம் மற்றும் அலுவலர்கள்
கலந்து கொண்டனர்.
English Summary
A new livelihood scheme for flower collectors Mayor Priya has issued work appointment orders