'சேலத்தில் 50-க்கும் மேற்பட்ட பெண்களை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கு; சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்'; சிபிஐ வீரபாண்டியன்..!
CPIs Veerapandian has demanded that the CBCID be ordered to investigate the case involving the sexual assault of over 50 women in Salem
சேலத்தில் 50-க்கும் மேற்பட்ட பெண்களை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் கைது செய்யப்பட்ட மணிகண்டனின் அரசியல் பின்னணி குறித்தும் தீவிரமாக விசாரித்து அதன் விவரங்களை வெளிப்படுத்த வேண்டும் என்றும், இந்த வழக்கை சிபிசிஐடிக்கு மாற்ற வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் வீரபாண்டியன் வலியுறுத்தியுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது;
''சேலம் கொண்டலாம்பட்டியைச் சேர்ந்த மணிகண்டன், வறுமை நிலையில் உள்ள பெண்களுக்கு கடன் தருவதாக ஏமாற்றி பாலியல் வன்கொடுமை செய்ததுடன், பாலியல் வணிகத்திலும் ஈடுபடுத்திய செய்தி நெஞ்சை பதற வைப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.

இந்த கொடூரச் சம்பவம் தொடர்பான விசாரணையில் இதுவரை 50-க்கும் மேற்பட்ட பெண்கள் ஏமாற்றப்பட்டிருப்பது தெரியவந்திருக்கும் நிலையில், கைது செய்யப்பட்ட மணிகண்டனின் அரசியல் பின்னணி குறித்தும் தீவிரமாக விசாரித்து அதன் விவரங்களை வெளிப்படுத்த வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார்.
இந்த வன்கொடுமை குற்றச் செயல்களில் மணிகண்டன் ஒருவர் மட்டுமே குற்றவாளி என விசாரணை எல்லையை சுருக்கி விடாமல், அவருக்குப் பின்பலமாக இருந்து செயல்பட்ட நபர்கள் யார், யார் என்பது உட்பட குற்றச் செயலின் பின்னணி குறித்து விரிவான விசாரணை நடத்துவது அவசியமாகும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
நீண்ட காலமாக வணிக முறையிலான குற்றச் செயல்கள் நடந்து வந்துள்ள நிலையில், அது காவல்துறையினர் கவனத்துக்கு வராமல் இருந்திருக்க முடியாது என்ற ஆழ்ந்த சந்தேகம் எழுவதாகக் கூறியுள்ள வீரபாண்டியன், இந்த வழக்கு விசாரணை நேர்மையாக நடைபெற வழக்கை சிபிசிஐடி பிரிவுக்கு மாற்ற வேண்டும்'' என்றும் வலியுறுத்தியுள்ளார்.
English Summary
CPIs Veerapandian has demanded that the CBCID be ordered to investigate the case involving the sexual assault of over 50 women in Salem