சர்ச்சை ஏதுமின்றி சுமுகமாகத் தொடங்கிய தமிழக சட்டப்பேரவை: தமிழ்த்தாய் வாழ்த்துடன் ஆளுநர் அர்லேகர் உரை ஆரம்பம்
Smooth Start to TN Assembly Session Governor Arlekar Begins Address with Tamil Thai Vazhthu Amid Protocols
தமிழகத்தின் 17-வது சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தொடர் இன்று ஜூன் 18 காலை 10 மணிக்குச் சலசலப்புகள் ஏதுமின்றி சுமுகமாகத் தொடங்கியது. முன்னதாக ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற முதல்வர் மற்றும் அமைச்சர்கள் பதவியேற்பு விழாவின் போது தமிழ்த்தாய் வாழ்த்து மூன்றாவதாகப் பாடப்பட்டது பெரும் விவாதத்தை ஏற்படுத்தியிருந்தது. இந்தச் சூழலில், இன்றைய சட்டப்பேரவைக் கூட்டம் மாநில மரபுப்படி முதலில் தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்கி, இரண்டாவதாகத் தேசிய கீதத்துடன் முறைப்படி ஆரம்பமானது. பேரவைக்கு வருகை தந்த ஆளுநர் ஆர்.வி.அர்லேகரை சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் மற்றும் சட்டப்பேரவைச் செயலர் ஆகியோர் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர்.
நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் 108 இடங்களில் தனித்து வெற்றி பெற்றது. இதைத்தொடர்ந்து, காங்கிரஸ், விசிக, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மற்றும் ஐயூஎம்எல் ஆகிய கட்சிகளின் ஆதரவோடு தவெக தலைவர் விஜய் கடந்த மே 10-ம் தேதி முதல்வராகப் பொறுப்பேற்றார். தற்காலிகப் பேரவைத் தலைவர் கருப்பையா முன்னிலையில் உறுப்பினர்கள் பதவியேற்ற பின், சபாநாயகராக ஜே.சி.டி.பிரபாகரும், துணைச் சபாநாயகராக ரவிசங்கரும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். கடந்த மே 13-ம் தேதி புதிய அரசு முறைப்படி பெரும்பான்மையை நிரூபித்த நிலையில், புதிய அமைச்சரவையில் கூட்டணிக் கட்சிகளின் பிரதிநிதிகளுக்கும் இடமளிக்கப்பட்டுள்ளது.
தற்போது பேரவையில் தனது கொள்கை விளக்க உரையை வாசித்து வரும் ஆளுநர் அர்லேகர், தனது உரையின் தொடக்கத்தில் அண்ணா, பெரியார், காமராஜர் மற்றும் அம்பேத்கர் ஆகிய தலைவர்களின் பெயர்களைக் குறிப்பிட்டுப் பேசினார். மேலும் வடமாநிலத்தைச் சேர்ந்தவரான அவர், இந்தத் தலைவர்களின் பெயர்களை உச்சரிப்பதில் ஏதேனும் பிழைகள் இருந்தால் பொறுத்தருளுமாறு அவையினரிடம் நெகிழ்ச்சியுடன் கேட்டுக்கொண்டார். கடந்த ஜனவரி மாதம் அப்போதைய ஆளுநர் ஆர்.என்.ரவி, வந்தே மாதரம் பாடல் இசைக்கப்படவில்லை எனக்கூறி உரையை வாசிக்காமல் வெளிநடப்பு செய்ததும், பின்னர் அப்போதைய சபாநாயகர் அப்பாவு தமிழ் உரையை வாசித்ததுமான நாடாளுமன்ற வரலாற்றுச் சம்பவங்களுடன் ஒப்பிடுகையில், இன்றைய கூட்டத்தொடர் மிகவும் இணக்கமான சூழலில் தொடங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது
.
English Summary
Smooth Start to TN Assembly Session Governor Arlekar Begins Address with Tamil Thai Vazhthu Amid Protocols