அதிமுக கோட்டையில் தொடர் ஆதிக்கம்...! எடப்பாடி மண்ணில் 6-வது முறையாக வாகை சூடினார் பழனிசாமி...!
Continued dominance AIADMK stronghold Palaniswami wins 6th time Edappadi
எடப்பாடி சட்டப்பேரவைத் தொகுதியில் அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி மீண்டும் அபார வெற்றி பெற்று, தனது அரசியல் ஆதிக்கத்தை உறுதிப்படுத்தியுள்ளார். இது அவரது ஆறாவது வெற்றியாக மட்டுமல்லாமல், முந்தைய தேர்தலை விட அதிகமான வாக்கு வித்தியாசத்தில் பெற்ற சாதனையாகவும் அமைகிறது.எடப்பாடி தொகுதியில் பழனிசாமியின் அரசியல் பயணம் 1989ஆம் ஆண்டு தொடங்கியது.
அப்போது சேவல் சின்னத்தில் போட்டியிட்டு முதன்முறையாக வெற்றி கண்டார். அதன் பின்னர் 1991, 2011, 2016, 2021 ஆகிய ஆண்டுகளிலும் வெற்றியைத் தொடர்ந்த அவர், 1996 மற்றும் 2006 தேர்தல்களில் மட்டும் தோல்வியை சந்தித்தார். இம்முறை எட்டாவது தடவையாக களம் கண்ட அவர் மீண்டும் வெற்றிக் களத்தில் தனது தடத்தை பதித்துள்ளார்.

இந்தத் தேர்தலில் திமுக சார்பில் காசி, நாதக வேட்பாளராக பிரியதர்ஷிணி ஆகியோர் போட்டியிட்டனர். தொடக்கத்தில் தமிழக வெற்றிக் கழக வேட்பாளராக அருண்குமார் அறிவிக்கப்பட்டு வேட்புமனு தாக்கல் செய்திருந்தாலும், முன்மொழிபவர்களின் எண்ணிக்கை குறைவாக இருந்ததால் அவரது மனு நிராகரிக்கப்பட்டது.
இதன் பின்னர், தேர்தல் பிரச்சாரம் நிறைவடைய இரு நாட்களுக்கு முன்பு சுயேச்சை வேட்பாளர் பிரேம்குமாருக்கு தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் ஆதரவு வழங்கியதால், அக்கட்சியினர் தீவிரமாக பிரச்சாரம் மேற்கொண்டனர்.சங்ககிரி பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் இன்று (மே 4) நடைபெற்ற வாக்கு எண்ணிக்கை மொத்தம் 25 சுற்றுகளாக முன்னெடுக்கப்பட்டது.
தொடக்கம் முதல் இறுதி வரை அனைத்து சுற்றுகளிலும் பழனிசாமி இடையறாத முன்னிலை வகித்தார். விஜய் ஆதரவு பெற்ற பிரேம்குமார் 25 சுற்றுகளிலும் இரண்டாம் இடத்தைப் பிடித்தார். திமுக வேட்பாளர் காசி அனைத்து சுற்றுகளிலும் மூன்றாம் இடத்தில் நிலைத்தார்.
இறுதிக் கணக்கெடுப்பின் படி, பழனிசாமி 98,110 வாக்குகள் வித்தியாசத்தில் பிரமாண்ட வெற்றி பெற்று, எடப்பாடியில் தனது ஆறாவது வெற்றியைப் பதிவு செய்துள்ளார். 2021 தேர்தலில் 93,802 வாக்குகள் வித்தியாசத்தில் வென்றிருந்த அவர், இம்முறை அதைவிட கூடுதலாக 4,308 வாக்குகள் அதிகரித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
எடப்பாடி தொகுதி – 25 சுற்றுகளின் இறுதி நிலவரம்:
அதிமுக (பழனிசாமி) – 1,48,933
தவெக ஆதரவு (பிரேம்குமார்) – 50,823
திமுக (காசி) – 44,011
நாதக (பிரியதர்ஷினி) – 8,450
நோட்டா – 1,341
தபால் வாக்கு நிராகரிப்பு – 227
வெற்றி வாக்கு வித்தியாசம் – 98,110
English Summary
Continued dominance AIADMK stronghold Palaniswami wins 6th time Edappadi