தமிழ்நாட்டின் இயற்கை வளங்களை ஒட்டுமொத்தமாக சூறையாட மத்திய அரசு திட்டமிட்டுள்ளது - செல்வப்பெருந்தகை கண்டனம்!
Congress Selvaperunthagai condemn to Central Govt
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை விடுத்துள்ள செய்திக்குறிப்பில், "தமிழ்நாட்டில், கன்னியாகுமரிக்கு அருகே ஆழ்கடல் பகுதியில் 3 இடங்களிலும், சென்னைக்கு அருகே 1 இடத்திலும் ஹைட்ரோ கார்பன் எடுப்பதற்கு ஒன்றிய அரசு அனுமதி அளித்திருப்பது அதிர்ச்சியை அளிக்கின்றது. தமிழ்நாட்டின் ஆழ்கடல் பகுதியை நச்சுத்தன்மையாக்கும், கடல்வளத்தை கொள்ளையடிக்கும் இத்திட்டத்திற்கு கடுமையான கண்டனங்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
இத்திட்டம் செயல்படுத்தப்பட்டால் பல பேராபத்துகள் ஏற்படும். நச்சுத்தன்மை வாய்ந்த ரசாயனங்களைப் பயன்படுத்தி, நீரியல் விரிசல் முறையில்தான் இத்திட்டம் செயல்படுத்தப்படும். இத்திட்டத்தால் கடல் நஞ்சாகும். முதல்கட்டமாக நச்சுத்தன்மை வாய்ந்த மீன்களை மக்கள் சாப்பிட வேண்டிய நிலை உருவாகும்.
இதனால் பலவிதமான நோய்கள் உருவாகி உடல்நலம் பாதிக்கப்படும். ஒருகட்டத்தில் கடல்வாழ் உயிரினங்கள் அழிந்துபோய் மீனவர்களின் வாழ்வாதாரம் கேள்விகுறியாகிவிடும். தேவையற்ற வாயுக்களை எரிக்கும்போது காற்று நஞ்சாகும். நிலத்தடி நீரும் பாதிக்கப்படும்.
ஒருபுறம் மும்மொழிக் கொள்கை, இந்தித் திணிப்பு, மாநில உரிமை பறிப்பு மற்றும் தொகுதி மறுவரையறை போன்ற தாக்குதல்களை தமிழ்நாட்டில் மேற்கொண்டு வரும் ஒன்றிய அரசு, தற்போது ஹைட்ரோ கார்பன், எண்ணெய் எரிவாயு போன்ற திட்டங்கள் மூலம் தமிழ்நாட்டின் இயற்கை வளங்களை ஒட்டுமொத்தமாக சூறையாட திட்டமிட்டுள்ளது.
தமிழ்நாட்டின் மக்களையும் கடல்வளங்களையும் மிகக் கடுமையாக பாதிக்கும் ஆழ்கடலில் ஹைட்ரோ கார்பன் எடுக்கும் திட்டத்திலிருந்து ஒன்றிய அரசு உடனடியாக கைவிட வேண்டும். தற்போது இத்திட்டத்திற்கு ஒப்புதல் வழங்கியிருப்பதை ரத்து செய்யவேண்டும்." என்று தெரிவித்துள்ளார்.
English Summary
Congress Selvaperunthagai condemn to Central Govt