மறுவரையறை மசோதாவுக்கு ஆதரவு..? மத்திய அரசுக்கு திமுக விதித்துள்ள நிபந்தனைகள்..!
Conditions imposed by DMK in support of the redefinition bill
மக்களவை மற்றும் மாநில சட்டசபைகளுக்கான தொகுதி மறுவரையறை சட்டத்தை நிறைவேற்ற கடந்த நாடாளுமன்ற கூட்டத்தில் மத்திய அரசு தாக்கல் செய்தது. ஆனால், போதிய ஆதரவின்றி மசோதா நிறைவேற்ற முடியவில்லை. தற்போது, சில மாநில கட்சிகளின் ஆதரவுகளுடன் மீண்டும் மசோதாவை தாக்கல் செய்து நிறைவேற்ற மத்திய அரசு அதிக முனைப்புக் காட்டி வருகிறது.
இந்நிலையில், மசோதாவில் சில திருத்தங்களைச் செய்தால் ஆதரவளிக்கத் தயாராக இருப்பதாகத் திமுக தெரிவித்துள்ளதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, 1971 மக்கள் தொகையின் அடிப்படையில் தொகுதிகளின் எண்ணிக்கையை நிர்ணயிப்பது என்ற முறையை மேலும் 25 ஆண்டுகளுக்கு நீட்டிக்க திமுக வலியுறுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.
அதாவது, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா வாய்மொழியாக உறுதியளித்தபடி, அனைத்து மாநிலங்களுக்கும் மக்களவைத் தொகுதிகளின் எண்ணிக்கையில் ஒரே சீராக 50% உயர்த்த கோருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த புதிய சட்ட மசோதாவிலேயே ஒவ்வொரு மாநிலத்திற்கும் எத்தனை தொகுதிகள் ஒதுக்கப்படும் என்ற தெளிவான அட்டவணை இடம்பெற வேண்டும் என்றும் திமுக வலியுறுத்தியுள்ளதாகவும் கூறப்படுகிறது. அதேநேரம் மசோதாவின் முழுமையான வடிவம் மற்றும் திருத்தங்களைப் பார்த்த பிறகே இறுதி முடிவை அறிவிப்போம் என்று திமுக தலைமை தெரிவித்துள்ளதாக நம்ப தகுந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இந்நிலையில், தொகுதி மறுவரையறை மசோதா குறித்து முதலமைச்சர் விஜய் தலைமையில் தமிழ்நாட்டைச் சேர்ந்த எம்.பி.க்கள் ஆலோசனைக் கூட்டம் வரும் 08-ஆம் தேதி நடைபெறவுள்ளது. சென்னை சேப்பாக்கத்தில் உள்ள கலைவாணர் நடைபெறும் கூட்டத்தில் பங்கேற்க தமிழ்நாட்டைச் சேர்ந்த எம்.பி.க்களுக்கு டெல்லியில் உள்ள தமிழ்நாடு இல்லம் மூலம் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

அதன்படி, தொகுதி மறுவரையறை பணிகள் மற்றும் அதன் தாக்கம் குறித்து முதலமைச்சர் விஜய் தலைமையில் தமிழ்நாட்டைச் சேர்ந்த மக்களவை மற்றும் மாநிலங்களவை உறுப்பினர்களின் கலந்தாய்வுக் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
தற்போது மழைக்கால கூட்டத்தொடர் நடைபெற்றுவரும் நிலையில், தொகுதி மறுவரையறை மசோதாவை நிறைவேற்ற மத்திய அரசு முயற்சித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
முன்னதாக, தொகுதி மறுவரையறை மசோதாவை நிறைவேற்றுவதற்கு தேவையான எம்.பி.க்கள் இருப்பதாக மத்திய அரசு தரப்பில் தகவல் வெளியானது. மசோதாவை கொண்டுவரும் முன் அனைத்துக் கட்சிகளுடனும் ஆலோசிக்க வேண்டுமென மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கேட்டுக்கொண்டதாக மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜூ தெரிவித்துள்ளார்.
English Summary
Conditions imposed by DMK in support of the redefinition bill