திரையில் 'விஜய்' தந்த விழிப்புணர்வு... நிஜத்தில் உடைந்த கொடூரம்...! 'ஜனநாயகன்' படம் பார்த்து தந்தையிடம் போட்டுக்கொடுத்த 8 வயது சிறுமி...! - வடபழனியில் போக்சோவில் ஒருவர் கைது
awareness brought by Vijay screen cruelty that broke out reality 8 year old girl who gave it to her father after watching movie Jananayakan person arrested Vadapalani under POCSO
தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் நடித்துள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படம் திரையரங்குகளில் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. இப்படத்தில் குழந்தைகளுக்கான பாதுகாப்பு குறித்த முக்கியமான விழிப்புணர்வு காட்சியும் இடம்பெற்றுள்ளது.குழந்தைகளுக்கு எதிரான பாலியல் அத்துமீறல்களை எவ்வாறு அடையாளம் காண்பது, பாதுகாப்பற்ற தொடுதல் மற்றும் பாதுகாப்பான தொடுதல் குறித்து குழந்தைகள் எவ்வாறு புரிந்துகொள்ள வேண்டும் என்பதையும் அந்தக் காட்சி எடுத்துரைக்கிறது.

மேலும், தங்களுக்கு நேரிடும் எந்தவொரு அத்துமீறலையும் அச்சமின்றி உடனடியாக பெற்றோரிடம் தெரிவிக்க வேண்டும் என்ற முக்கியமான கருத்தும் அதில் வலியுறுத்தப்படுகிறது.இந்தக் காட்சியை பார்த்த பின்னர், சென்னையைச் சேர்ந்த 8 வயது சிறுமி ஒருவர் தனக்கு நேர்ந்த பாலியல் அத்துமீறல் குறித்து தனது தந்தையிடம் துணிச்சலாக தெரிவித்துள்ளார்.
சிறுமி அளித்த தகவலின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்ட காவலர்கள், சம்பந்தப்பட்ட நபரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர்.சென்னை கே.கே.நகர் பகுதியைச் சேர்ந்த தம்பதிக்கு 11 வயதில் ஒரு மகனும், 8 வயதில் ஒரு மகளும் உள்ளனர். குடும்பத்தில் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கணவன், மனைவி இருவரும் கடந்த சில மாதங்களாக தனித்தனியாக வசித்து வருகின்றனர்.
குழந்தைகள் இருவரும் தந்தையுடன் வசித்து வந்த நிலையில், அவர்களது தாய் கோடம்பாக்கம் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் தங்கி வீட்டு வேலை செய்து வந்துள்ளார். அவ்வப்போது தனது குழந்தைகளையும் தான் வேலை செய்யும் வீட்டிற்கு அழைத்துச் செல்வதை வழக்கமாகக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது.இந்த நிலையில், கடந்த 30-ஆம் தேதி சிறுமியும் அவரது தந்தையும் ‘ஜனநாயகன்’ திரைப்படத்தை பார்ப்பதற்காக திரையரங்கிற்குச் சென்றுள்ளனர்.
திரைப்படத்தில் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் அத்துமீறல் தொடர்பாக இடம்பெற்றிருந்த விழிப்புணர்வு காட்சியை சிறுமி கவனமாக பார்த்துள்ளார்.அந்தக் காட்சியை பார்த்தபோது, தனக்கும் இதுபோன்ற சம்பவம் நேர்ந்திருப்பதாக சிறுமி தனது தந்தையிடம் தெரிவித்துள்ளார். மகள் கூறிய தகவலைக் கேட்டு அதிர்ச்சியடைந்த தந்தை, சம்பவம் குறித்து அவரிடம் அன்புடன் விசாரித்துள்ளார்.
அப்போது, தனது தாய் வேலை செய்து வரும் வீட்டில் இருந்த ஒரு நபர் தன்னிடம் அத்துமீறலில் ஈடுபட்டதாக சிறுமி தெரிவித்ததாக கூறப்படுகிறது.மகள் தெரிவித்த தகவலால் அதிர்ச்சியடைந்த தந்தை, தாமதமின்றி வடபழனி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.புகாரின் அடிப்படையில் காவலர்கள் விசாரணையைத் தொடங்கினர்.
சிறுமி அளித்த தகவல்கள் மற்றும் விசாரணையில் கிடைத்த விவரங்களின் அடிப்படையில், சிறுமியிடம் அத்துமீறலில் ஈடுபட்டதாக கூறப்படும் பெரியன் என்பவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.இதையடுத்து சம்பந்தப்பட்ட நபரை காவலர்கள் கைது செய்து, தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
குழந்தைகளுக்கு எதிரான அத்துமீறல்களை தடுக்க விழிப்புணர்வு எவ்வளவு முக்கியமானது என்பதையும், குழந்தைகள் தங்களுக்கு நேரிடும் தவறான செயல்களை அச்சமின்றி பெற்றோரிடம் தெரிவிக்க வேண்டும் என்பதையும் இந்த சம்பவம் மீண்டும் உணர்த்தியுள்ளது.
English Summary
awareness brought by Vijay screen cruelty that broke out reality 8 year old girl who gave it to her father after watching movie Jananayakan person arrested Vadapalani under POCSO