கண்டனம்! ஆசிரியர்கள் பற்றாக்குறையை பூர்த்தி செய்யாமல்... மாணவர்களின் கல்வியை அதல பாதாளத்திற்கு தள்ளிய திமுக அரசு...!- டிடிவி தினகரன்
Condemnation By not meeting shortage of teachers DMK government has taken education of students lowest ebb TTV Dinakaran
அ.ம.மு.க பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் அவர்கள் தனது எக்ஸ் தளப் பக்கத்தில் பதிவு ஒன்று வெளியிட்டுள்ளார். அதில் அவர் குறிப்பிட்டதாவது,"தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழக பேராசிரியர்களை மாற்றுக் கல்லூரிகளுக்கு இடமாற்றம் செய்யும் முடிவை திமுக அரசு கைவிட வேண்டும் – அரசுக் கல்லூரிகளில் காலியாக இருக்கும் பல்லாயிரக்கணக்கான பேராசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

பல்கலைக்கழக மானியக்குழுவின் விதிமுறைகளுக்கு மாறாக, தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழக பேராசிரியர்களை மாற்றுக் கல்லூரிகளுக்கு இடமாற்றம் செய்வதை கண்டித்து அப்பல்கலைக்கழக பேராசிரியர்கள் கடந்த இரு தினங்களாக உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருவதாக நாளிதழ்களில் செய்திகள் வெளியாகியுள்ளன.
ஏற்கனவே 60% பேராசிரியர்கள் பற்றாக்குறையுடன் இயங்கி வரும் தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகத்தில், தற்போது பணியில் இருக்கும் பேராசிரியர்களையும் மாற்றுக் கல்லூரிகளுக்கு இடமாற்றம் செய்யும் வகையில் தமிழக அரசின் கல்லூரி கல்வி இயக்குனர் அனுப்பியிருக்கும் சுற்றறிக்கை கடும் கண்டனத்திற்குரியது.
பாடப்புத்தகங்களை தயாரித்து விநியோகிப்பது, விடைத்தாள் திருத்துவது, ஆராய்ச்சி மாணவர்களுக்கு வழிகாட்டுவது என பல்வேறு பணிகளில் தங்களை ஈடுபடுத்திக் கொண்டுள்ள பேராசியர்களை இடமாற்றம் செய்வது, அங்கு பயிலும் மாணவர்களின் கல்வித்திறனை பாதிப்பதோடு, வரும் காலங்களில் மாணவர் சேர்க்கை குறைந்து பல்கலைக்கழகத்தின் அங்கீகாரமும் ரத்தாக வாய்ப்பிருப்பதாக பேராசிரியர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
ஆட்சிப் பொறுப்பேற்ற 4 ஆண்டுகளில் தமிழகம் முழுவதும் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் முதல்வர் தொடங்கி பேராசிரியர்கள் வரை நிலவும் பல்லாயிரக்கணக்கான காலிப்பணியிடங்களை நிரப்ப எந்தவித நடவடிக்கையும் எடுக்காத திமுக அரசால் உயர்கல்வித்துறை அதளபாதாளத்தை நோக்கி சென்று கொண்டிருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
எனவே, தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழக பேராசிரியர்களை மாற்றுக் கல்லூரிகளுக்கு இடமாற்றம் செய்யும் முடிவை உடனடியாக கைவிடுவதோடு, காலியாக இருக்கும் பேராசிரியர் பணியிடங்களை நிரப்பிடுவதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என உயர்கல்வித்துறையையும், தமிழக அரசையும் வலியுறுத்துகிறேன் " என்று தெரிவித்துள்ளார்.இதற்கு தமிழக அரசு செவிசாய்க்குமா? என்று மக்களால் எதிர்பார்க்கப்படுகிறது.
English Summary
Condemnation By not meeting shortage of teachers DMK government has taken education of students lowest ebb TTV Dinakaran