வெளிநாட்டில் இருந்து முதல்வர் விஜய்க்கு அனுப்பப்பட்ட புகார்....! திருமங்கலம் DEO விசாரணையில் வெளிவந்த உண்மை என்ன...?
complaint sent Chief Minister Vijay from abroad What truth revealed Thirumangalam DEO investigation
விருதுநகர் மாவட்டத்தில் ஓய்வுபெற்ற ஆசிரியையிடம் ரூ.40 ஆயிரம் லஞ்சம் பெற்றதாக வட்டார கல்வி அலுவலர் மீது புகார் அளிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.விருதுநகர் மாவட்டம் என்.ஜி.ஓ. காலனியைச் சேர்ந்தவர் சீனித்தாய். ஓய்வுபெற்ற ஆசிரியையான இவருக்கு ஓய்வூதியப் பலன்கள் மற்றும் மாதாந்திர ஓய்வூதியம் கிடைப்பதற்கான நடவடிக்கைகளில் தாமதம் ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
இதனை சாதகமாகப் பயன்படுத்தி, கள்ளிக்குடி வட்டார கல்வி அலுவலர் முத்துக்குமார், ரூ.40 ஆயிரம் லஞ்சமாக பெற்றதாக புகார் எழுந்துள்ளது.

சீனித்தாயின் மகன் சதீஷ் லண்டனில் பொறியாளராகப் பணியாற்றி வருகிறார். தனது தாயின் ஓய்வூதிய விவகாரத்தில் ஏற்பட்டுள்ள சிக்கலைத் தீர்க்கக் கோரி, தமிழக அரசின் லஞ்சப் புகார் தெரிவிக்கும் வாட்ஸ்-அப் எண்ணின் மூலம் முதலமைச்சரின் தனிப்பிரிவுக்கு அவர் புகார் அனுப்பியுள்ளார்.
அந்தப் புகாரில், தனது தாய் ஓய்வுபெற்ற பிறகு ஓய்வூதிய ஒப்புதல் நடவடிக்கைகளுக்குத் தேவையான தடையில்லா மற்றும் நிலுவையில்லா சான்றிதழைப் பெறுவதற்காக, வட்டார கல்வி அலுவலரிடம் ரூ.40 ஆயிரம் வழங்கியதாக குறிப்பிட்டுள்ளார். ஓய்வூதியப் பலன்கள் கிடைத்தபோதிலும், மாதாந்திர ஓய்வூதியம் வழங்கும் நடவடிக்கைகள் தொடர்ந்து தாமதப்படுத்தப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
எனவே, தனது தாய்க்கு மாதாந்திர ஓய்வூதியம் முறையாக கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், லஞ்சமாக வழங்கியதாக கூறப்படும் ரூ.40 ஆயிரத்தை மீட்டுத் தர வேண்டும் என்றும் சதீஷ் தனது புகாரில் கோரிக்கை விடுத்துள்ளார்.
இதுகுறித்து வட்டார கல்வி அலுவலர் முத்துக்குமார் கூறுகையில், இந்தப் புகார் தொடர்பாக திருமங்கலம் தொடக்கக் கல்வி மாவட்ட அலுவலர் விசாரணை நடத்தி, புகாரில் உண்மை இல்லை என அறிக்கை அளித்துள்ளதாக தெரிவித்தார். மேலும், தான் யாரிடமும் பணம் கேட்கவில்லை என்றும் அவர் மறுப்பு தெரிவித்துள்ளார்.
இவ்வாறு இந்த விவகாரம் தொடர்பாக இருதரப்பிலும் மாறுபட்ட கருத்துகள் தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், சம்பவம் குறித்து தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.
English Summary
complaint sent Chief Minister Vijay from abroad What truth revealed Thirumangalam DEO investigation