கரூருடன் ஒப்பீடு! டெல்லியில் விஜய்க்கு போதிய பாதுகாப்பு வழங்கப்படும்...! - வானதி சீனிவாசன்
comparison Karur Vijay provided adequate security Delhi Vanathi Srinivasan
கோவையில் இன்று நடைபெற்ற ‘நம்ம ஊரு மோடி பொங்கல்’ விழாவில் பங்கேற்ற பா.ஜ.க. எம்.எல்.ஏ. வானதி சீனிவாசன், நிகழ்ச்சி முடிவில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.அப்போது அவர், “பொங்கல் போன்ற பாரம்பரிய பண்டிகைகள் பாரத நாட்டின் கலாசாரத்துடன் ஆழமாக பின்னிப்பிணைந்தவை.

‘நம்ம ஊரு மோடி பொங்கல்’ விழாவில் பா.ஜ.க. தேசிய செயல் தலைவர் நிதின் நபின் முதன்முறையாக உற்சாகமாக கலந்து கொண்டது மகிழ்ச்சி அளிக்கிறது” என்றார்.தி.மு.க. ஆட்சிக்கு வந்த பிறகு, இந்துக்களின் பண்டிகைகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்துகள் தெரிவிப்பதில்லை என குற்றம்சாட்டிய அவர், “பொங்கல் நேரத்தில் மட்டும் ‘சமத்துவ பொங்கல்’ என்ற பெயரில், தமிழகத்தில் இல்லாத ஒரு புதிய வடிவத்தை உருவாக்கி கொண்டாடுகிறார்” என விமர்சனம் செய்தார்.
சிறுபான்மையின மக்கள் தங்களது மதப் பண்டிகைகளை கொண்டாடுவதை பா.ஜ.க. மதிப்பதாகவும், அதற்கு வாழ்த்துக்களையும் தெரிவிப்பதாகவும் கூறிய அவர், “ஆனால், பொங்கலை கொண்டாடாதவர்களுடன் சேர்ந்து இந்து மக்களை குழப்பும் வகையில் ‘சமத்துவ பொங்கல்’ விழாவை நடத்துவது ஏமாற்று அரசியல்” என குற்றம் சாட்டினார்.
பிரதமர் நரேந்திர மோடி விரைவில் தமிழகம் வர உள்ளதாக குறிப்பிட்ட வானதி சீனிவாசன், அதன் பின்னர் தேர்தல் பணிகள் வேகமெடுக்கும் என்றும், கொங்கு மண்டலத்திற்கு தேசிய செயல் தலைவர் வருகை பா.ஜ.க.விற்கு கூடுதல் உற்சாகத்தையும் பலத்தையும் அளித்துள்ளதாக தெரிவித்தார்.
மேலும், த.வெ.க. தலைவர் விஜய் டெல்லியில் உள்ள சி.பி.ஐ. அலுவலகத்தில் ஆஜராகும் போது கூடுதல் பாதுகாப்பு கோரப்பட்டுள்ளதா என்ற கேள்விக்கு பதிலளித்த அவர், “பாதுகாப்பு கோருவது ஒரு வழக்கமான நடைமுறை. கரூரை விட டெல்லியில் சிறந்த பாதுகாப்பு வழங்கப்படும்” என்று தெரிவித்தார்.
English Summary
comparison Karur Vijay provided adequate security Delhi Vanathi Srinivasan