'தமிழக அமைச்சரவையில் விசிக, ஐயூஎம்எல் இடம்பெறுவது ஜனநாயகத்துக்கு வலுசேர்க்கும்'; கம்யூனிஸ்ட் தலைவர்கள் கருத்து..!
Communist leaders opine that the inclusion of the VCK and IUML in the Tamil Nadu Cabinet would strengthen democracy
தமிழக அமைச்சரவையில் விசிக, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிகளும் இடம்பெற உள்ளமை வரவேற்கத்தக்கது என்று கம்யூனிஸ்ட் கட்சிகள் கருத்து தெரிவித்துள்ளன.
இது குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பெ.சண்முகம் இன்று சென்னையில் செய்தியாளர்களிடம் பேசும் போது கூறியதாவது;
புதிதாக பொறுப்பேற்ற அனைத்து அமைச்சர்களும் வாழ்த்துகள். அதிலும் தமிழக வரலாற்றில் முதல்முறையாக பட்டியலின சமூகத்தை சேர்ந்த 07 பேர் அமைச்சர்களாக பதவியேற்று இருப்பது வரவேற்கத்தக்க, நல்ல முன்னுதாரணமான நடவடிக்கை என்றும், அதற்காக முதல்வருக்கு எனது பாராட்டுக்கள் என்று குறிப்பிட்டுள்ளார்.

அதேநேரம் கூட்டாட்சி என்பது வேறு, கூட்டணி ஆட்சி என்பது வேறு என்று குறிப்பிட்டுள்ளதோடு, இதை வைத்து மாநிலத்தில் சுயாட்சி என்ற முழக்கம் முடிவுக்கு வந்துவிட்டதாக எப்படி சொல்ல முடியும்? கூட்டாட்சிக்கும், கூட்டணி ஆட்சிக்கும் பெரிய வித்தியாசம் இருக்கிறது என்று சுட்டிக்காட்டியுள்ளார்.
அத்துடன், விசிக மற்றும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆகியவை தவெக அரசின் அமைச்சரவையில் பங்கேற்பார்கள் என தான் முழுமையான நம்புகிறேன் என்றும், விளிம்புநிலை மக்களுக்காக பாடுபடுகின்ற ஒரு கட்சி விசிக. இப்படியொரு வாய்ப்பு கிடைக்கும்போது அதை பயன்படுத்துவது என்று அக்கட்சியினர் முடிவு எடுத்து இருக்கிறார்கள். அதை தான் வரவேற்பதாக கூறியுள்ளார்.
மேலும், விசிக, திமுக கூட்டணியில் தொடருமா என்பதை திருமாவளவனிடம் தான் கேட்க வேண்டும் என்றும், இடதுசாரிகள் அமைச்சரவையில் பங்கேற்காது என்றும், வெளியில் இருந்து ஆதரவு அளிப்போம் என்பதை ஏற்கெனவே தெரிவித்து இருக்கிறோம். அந்த நிலையே தற்போதும் தொடரும் என்று பெ.சண்முகம் குறிப்பிட்டுள்ளார்.

அதேநேரம், இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் மு.வீரபாண்டியன் இது குறித்து கூறுகையில், புதிய அமைச்சரவைக்கு வாழ்த்துகள். மக்கள் நலத் திட்டங்கள் தொடர வேண்டும் என்றும், ஒடுக்கப்பட்ட மக்கள், ஏழை, எளிய மக்கள், தொழிலாளர் நலன் போன்றவற்றில் கூடுதல் கவனம் செலுத்தவேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், விசிக, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிகளும் அமைச்சரவையில் இடம்பெற இருப்பது நல்ல விஷயம் என்றும், இது ஜனநாயகத்துக்கு வலுசேர்க்கும். அவர்களுக்கு எனது வாழ்த்துக்கள். இடதுசாரிகள் எண்ணங்கள் பூர்த்தியாகும் காலம் தூரத்தில் இல்லை என்று குறிப்பிட்டுள்ளார்.
English Summary
Communist leaders opine that the inclusion of the VCK and IUML in the Tamil Nadu Cabinet would strengthen democracy