மேகேதாட்டுவில் அணை விவகாரத்தில் கர்நாடகாவிற்கு சாதக போக்கு; பாஜக அரசுக்கு எதிராக மார்க்சிஸ்ட் கம்யூ. போராட்டம் அறிவிப்பு..! - Seithipunal
Seithipunal


''மேகேதாட்டுவில் அணை கட்டும் கர்நாடகாவின் முயற்சிக்கு சாதகமாக செயல்படும் ஒன்றிய பாஜக அரசின் போக்கைக் கண்டித்தும் 2026 ஆகஸ்ட் 02-ஆம் தேதி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்.'' என அக்கட்சியின் மாநில செயலாளர் பெ.சண்முகம் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது;

''மேகேதாட்டு அணை கட்டுவதற்கு கர்நாடகாவுக்கு தமிழகத்தின் ஒப்புதல் தேவையில்லை என மாநிலங்களவையில் மத்திய நீர்வளத்துறை இணை அமைச்சர் அளித்துள்ள பதில், தமிழகம் முழுவதுமுள்ள விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

காவிரி பாசன உரிமையை பாதுகாக்கவும், மேகேதாட்டு அணை கட்ட முயற்சிக்கும் கர்நாடக மாநில அரசின் அடாவடித்தனத்தை எதிர்த்தும் போராட வேண்டிய நிலையில் அன்புமணி ராமதாஸ் இத்தகைய கேள்வியை நாடாளுமன்றத்தில் எழுப்பியிருக்க வேண்டிய அவசியமில்லை.

பன்மாநில நதிகள் சம்பந்தப்பட்ட பிரச்சினையில் தன்னிச்சையாக மேல் பகுதி பாசன பகுதியினர் முடிவெடுக்கக் கூடாது என்பது சர்வதேச அளவில் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ள விதிமுறை. இதை அறியாதவரல்ல மத்திய இணையமைச்சர். ஒன்றிய பாஜக அரசு தமிழகத்தின் நலனுக்கு விரோதமாக நடந்து கொள்வதன் தொடர்ச்சியே விளைவுகள் குறித்து கவலைப்படாமல் நாடாளுமன்றத்தில் அளித்துள்ள பதில் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி குற்றம் சாட்டுகிறது.

நடுவர்மன்ற தீர்ப்பு, காவிரி பிரச்சினை தொடர்பாக உச்சநீதிமன்ற இறுதி தீர்ப்பின் அடிப்படையில் மாதவாரியாக தமிழகத்துக்கு உரிய தண்ணீரை கர்நாடக மாநில அரசு இதுவரை வழங்கியதில்லை. மாறாக, அபரிமிதமான மழை பெய்து உபரி நீரை திறந்து விடும் வடிகாலாகத்தான் தமிழகத்தை பயன்படுத்தி வருகிறது.

இந்த நிலையில், மேகதாட்டு அணை கட்டினால், தமிழகத்துக்கு உரிய தண்ணீர் கிடைக்காமல் பாலைவனமாகும் ஆபத்தை மறுக்க முடியாது. இதனால் குடிதண்ணீர் மற்றும் பாசனத்திற்கு மிகப்பெரிய பாதிப்பை தமிழகம் எதிர்கொள்ள வேண்டிய நிலை உருவாகும்.

காவிரி நடுவர் மன்ற உத்தரவின் அனைத்து அம்சங்களையும் உச்சநீதிமன்றம் விசாரணைக்கு உட்படுத்தவில்லை என்பதையும் குறிப்பாக, நீர்ப்பங்கீட்டு அளவு குறித்தே கர்நாடகாவின் கோரிக்கையை பரிசீலித்து தீர்ப்பு வழங்கியது என்பதையும் கவனப்படுத்துகிறோம்.

எனவே, மத்திய இணையமைச்சர் நாடாளுமன்றத்தில் நதிநீர் பிரச்சினைகள் தொடர்பாக தெரிவித்துள்ள பதிலை திரும்பப் பெற நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று ஒன்றிய அரசை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு வலியுறுத்துகிறது.

தமிழகம் உள்ளிட்ட கீழ் பகுதி பாசன மாநிலங்களின் உரிமைகள் பாதுகாக்கப்படும் வகையில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும் ஒன்றிய அரசை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு கேட்டுக் கொள்கிறது.

தமிழகத்தின் பாசன உரிமையைப் பாதுகாக்கவும், மேகேதாட்டுவில் அணை கட்டும் கர்நாடகாவின் முயற்சிக்கு சாதகமாக செயல்படும் ஒன்றிய பாஜக அரசின் போக்கைக் கண்டித்தும் 2026 ஆகஸ்ட் 2-ஆம் தேதி காவிரி டெல்டா மாவட்டங்களில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.'' என்று பெ.சண்முகம் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Marxist Communist Party announces protest against BJP government over Meketatu dam issue


கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...



Advertisement

கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...


செய்திகள்



Seithipunal
--> -->