2026-இல் நாம் மாபெரும் வெற்றியை நோக்கி முன்செல்கிறோம் - CM ஸ்டாலினின் ஆங்கில புத்தாண்டு வாழ்த்துச் செய்தி! - Seithipunal
Seithipunal


2026-இல் நாம் மாபெரும் வெற்றியை நோக்கி முன்செல்கிறோம்! நாம் என்றால் தமிழ்நாட்டு மக்களாகிய அனைவரும் பெறப்போகும் வெற்றி என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 2026 ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துச் செய்தி வெளியிட்டுள்ளார்.

அவரின் அந்த செய்திக்குறிப்பில், "பல வகைகளிலும் தமிழ்நாட்டுக்கு வெற்றிகரமான ஆண்டாக அமைந்த 2025-க்கு விடைகொடுத்து, இதுவரை காணாத மாபெரும் வெற்றியை வழங்கவுள்ள 2026-இல் அடியெடுத்து வைக்கத் தயாராகிறோம்!

தமிழ் வளர்ச்சிக்கும் தமிழர் எழுச்சிக்கும் தமிழ்நாட்டின் முன்னேற்றத்துக்கும் மிகச் சிறந்த ஆண்டாக 2025 அமைந்தது என்றால் மிகையாகாது. பொருளாதார வளர்ச்சியிலும் GSDP வளர்ச்சியிலும் முதலிடம் என நமக்குக் கிடைத்துள்ள அங்கீகாரங்கள் 2030-க்குள் ஒரு ட்ரில்லியன் டாலர் பொருளாதாரம் எனும் நம் கனவுக்கு வலுவூட்டுகிறது.

மகளிர், உழவர், மாணவர், மாற்றுத்திறனாளிகள், மீனவர், வணிகர், நெசவாளர், விளிம்புநிலை மக்கள், தொழில்முனைவோர், விளையாட்டு வீரர்கள் என அனைத்துத் தரப்பினரின் மனங்களையும் மகிழ்விக்கும் திட்டங்கள் நிறைந்த ஆண்டாக 2025 அமைந்தது. வீடற்ற மக்களுக்கு வீடுக களை வழங்கும் கலைஞர் கனவு இல்லம் திட்டமும், இதுவரை இல்லாத அளவுக்குப் பட்டாக்களை வழங்கி நிலம் எனும் அதிகாரத்தை எளியோருக்கு வழங்கியதும் நமது திராவிட மாடல் அரசில் முன்னுரிமை யாருக்கு என்பதற்குச் சான்றாக அமைந்தன.

உங்களுடன் ஸ்டாலின் முகாம்களால் மக்களின் தேவைகள் உடனடியாகத் தீர்க்கப்பட்டு வருகின்றன, நலம் காக்கும் ஸ்டாலின் முகாம்களால் உயர்தரச் சிறப்பு மருத்துவச் சேவைகள் மக்களுக்குக் கிடைத்து வருகின்றன. கல்வியில் சிறந்த தமிழ்நாடு, வெல்லும் தமிழ்ப் பெண்கள் என 2025-இல் தலைநிமிர்ந்துள்ளோம்! காலை உணவுத் திட்டமும், கலைஞர் மகளிர் உரிமைத் திட்டமும் பெருமளவில் விரிவுபடுத்தப்பட்டுள்ளன. அனைத்து மாவட்டங்களுக்கும்
சமத்துவமான வளர்ச்சியும் சாத்தியமாகி வருகிறது.

தொகுதி மறுசீரமைப்பு ஆபத்தை எதிர்த்து அகில இந்திய அளவில் அணிதிரட்டல், சிறப்புத் தீவிர வாக்காளர் திருத்தப் பட்டியல் சூழ்ச்சியில் இருந்து நம் மக்களின் வாக்குரிமையைக் காப்பது, மாநில சுயாட்சிக்காக உயர்நிலைக் குழு அமைத்தது, மாநிலக் கல்விக் கொள்கையை வெளியிட்டது, கல்வி நிதிக்காக ஒன்றிய அரசிடம் உரிமைக்குரலை எழுப்பியது, ஆளுநரின் அதிகார மீறலுக்கு எதிரான வரலாற்றுச் சிறப்புமிக்க உச்சநீதிமன்றத் தீர்ப்பினைப் பெற்றது என வழக்கம் போல இந்த ஆண்டும் மாநில உரிமைகளுக்கான நமது போராட்டங்களுக்கும் குறைவே இல்லை. மொத்தத்தில் தமிழ்நாடு யாருக்கும் தலைகுனியாது, தமிழ்நாடு போராடும், தமிழ்நாடு வெல்லும் என உலகத்துக்குப் பறைசாற்றிய ஆண்டுதான் 2025!

நாம் இதுவரை பெற்ற வெற்றிகள் தந்த ஊக்கத்தோடும், போராட்டங்களால் பெற்ற துணிவோடும் 2026-இல் மாபெரும் வெற்றியை நோக்கி முன்செல்கிறோம்! நாம் என்றால் தமிழ்நாட்டு மக்களாகிய நீங்கள் அனைவரும் பெறப்போகும் வெற்றியைத்தான் குறிப்பிடுகிறேன். அமைதியும், நல்லிணக்கமும், மகிழ்ச்சியும், புதிய வெற்றிகளும் நிறைந்த ஏற்றமிகு ஆண்டாக 2026 அனைவருக்கும் அமைந்திட எனது புத்தாண்டு நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்" என்று தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

cm mk stalin new year wish 2026


கருத்துக் கணிப்பு

காங்கிரஸ் திடீரென ஆட்சியில் பங்கு கேட்பது கூட்டணி மாறும் கணக்கா..?



Advertisement

கருத்துக் கணிப்பு

காங்கிரஸ் திடீரென ஆட்சியில் பங்கு கேட்பது கூட்டணி மாறும் கணக்கா..?




Seithipunal
--> -->