மாணவர்களுக்கு காலை உணவு விரிவாக்க திட்டத்தை நாளை முதல்வர் விஜய் திருவான்மியூரில் தொடங்கி வைக்கிறார்..!
Chief Minister Vijay will launch the expansion of the breakfast scheme for students in Thiruvanmiyur tomorrow
06 முதல் 08-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்குக் காலை உணவுத்திட்ட விரிவாக்கத்தை நாளை முதல்வர் விஜய் திருவான்மியூரில் தொடங்கி வைக்கிறார். கடந்த திமுக ஆட்சியில் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் 01-ஆம் வகுப்பு முதல் 05-ஆம் வகுப்புவரை பயிலும் மாணவர்களுக்கு முதல்வரின் காலை உணவுத்திட்டம் கொண்டுவரப்பட்டது.
இந்நிலையில், தற்போதுள்ள தவெக அரசு இந்தத் திட்டத்தின் பெயரைப் பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டம் எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டது. அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் 06 முதல் 08-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவிகளுக்கும் வழங்கும் வகையில் விரிவாக்கம் செய்யப்படும் என அறிவித்திருந்தது.
இந்தத் திட்டம் 22-ஆம் தேதி முதல் தமிழ்நாடு முழுவதும் தொடங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், இதனை முதல்வர் விஜய் நாளை காலை சென்னை, திருவான்மியூரில் உள்ள சென்னை நடுநிலைப்பள்ளியில் தொடங்கி வைக்கவுள்ளார்.

இத்திட்ட விரிவாக்கத்தின் மூலம், 15,454 அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் 06 முதல் 08-ஆம் வகுப்பு வரை பயிலும் சுமார் 15.30 இலட்சம் மாணவ, மாணவியர்கள், கூடுதலாகப் பயன்பெறுவர். இதற்கென நடப்பு நிதியாண்டில் கூடுதலாக 217 கோடியே 63 இலட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இத்திட்டத்திற்கு ஒட்டுமொத்தமாக 724 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இத்திட்டத்தைச் சென்னை மாநகராட்சியில் உள்ள 447 அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் ஒருங்கிணைந்த சமையல் கூடங்கள் மூலமாக சென்னை மாநகராட்சி நிர்வாகத்தாலும் நடத்தவுள்ளது.
அத்துடன், இதர மாநகராட்சிகள், நகராட்சிகள் மற்றும் அதனை ஒட்டியுள்ள பேரூராட்சிப் பகுதிகளிலுள்ள 2,150 அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் ஒருங்கிணைந்த சமையல் கூடங்கள் மூலமாக நகராட்சி நிர்வாக இயக்குநரகத்தாலும், ஊரகப் பகுதிகள் மற்றும் ஊரகப் பகுதிகளை ஒட்டியுள்ள பேரூராட்சிப் பகுதிகளில் உள்ள 12,857 அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் மூலமாகச் சுய உதவிக் குழு உறுப்பினர்களால் அந்தந்தப் பள்ளியிலேயே காலை உணவு தயாரித்து வழங்கப்படும் எனவும் தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
English Summary
Chief Minister Vijay will launch the expansion of the breakfast scheme for students in Thiruvanmiyur tomorrow