செய்தியாளர்கள் தாக்கப்பட்ட வழக்கில் 21 நாட்களுக்கு பிறகு தவெக எம்.எல்.ஏ கபில் மீது வழக்குப்பதிவு - Seithipunal
Seithipunal


செய்தியாளர்களை தாக்கியதாக எழுந்த புகாரில், 21 நாட்களுக்குப் பிறகு சோளிங்கர் தொகுதி தமிழக வெற்றிக் கழக எம்.எல்.ஏ கபில் மற்றும் அவரது தம்பி தனஞ்செழியன் உள்ளிட்டோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கரில் உள்ள திரையரங்கில் சில வாரங்களுக்கு முன்பு தமிழக முதலமைச்சரும், தவெக தலைவருமான விஜய் நடித்த ‘ஜனநாயகன்’ திரைப்படம் வெளியானது. படத்தை பார்த்துவிட்டு வெளியே வந்த எம்.எல்.ஏ கபிலிடம், யூடியூபர் சிவா என்பவர் படம் குறித்து கருத்து கேட்டு மைக்கை நீட்டியதாக கூறப்படுகிறது. அப்போது கபில் அவரை தாக்க முயன்றதாக கூறப்படும் வீடியோ சமூக வலைதளங்களில் பரவியது.

இதையடுத்து ஆத்திரமடைந்த கபில் மற்றும் அவரது ஆதரவாளர்கள் சிவாவை தேடியதாக கூறப்படுகிறது. கடந்த 27-ம் தேதி சோளிங்கர் அண்ணா சிலை அருகே உள்ள சிவாவின் வீட்டிற்கு கபில், அவரது தம்பி தனஞ்செழியன் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்டோர் சென்றதாகவும், அங்கிருந்து சிவாவை வலுக்கட்டாயமாக அழைத்துச் சென்று தாக்கியதாகவும் புகார் எழுந்தது.

இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து செய்தி சேகரிக்கச் சென்ற நாளிதழ் நிருபர்கள் அரங்கநாதன், கல்யாணசுந்தரம் ஆகியோரையும் கபிலுடன் சென்ற கும்பலைச் சேர்ந்தவர்கள் தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் காயமடைந்த இரு நிருபர்களும் சோளிங்கர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர்.

சம்பவத்தைக் கண்டித்து செய்தியாளர்களின் உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் மறியலில் ஈடுபட்டனர். மேலும், காயமடைந்தவர்கள் சோளிங்கர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதுதொடர்பாக ராணிப்பேட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிபினிடமும் அப்பகுதி பத்திரிகையாளர்கள் நேரில் புகார் அளித்திருந்தனர்.

இந்த நிலையில், சம்பவம் நடந்ததாக கூறப்பட்டு 21 நாட்களுக்குப் பிறகு எம்.எல்.ஏ கபில் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். கபில், அவரது தம்பி தனஞ்செழியன் உள்ளிட்ட சிலர் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விவகாரம் தவெக அரசியல் வட்டாரத்தில் புதிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Case registered against TVK MLA Kapil 21 days after the attack on journalists


கருத்துக் கணிப்பு

முதல்வர் விஜய் தலைமையிலான இந்த 100 நாள் ஆட்சி...



Advertisement

கருத்துக் கணிப்பு

முதல்வர் விஜய் தலைமையிலான இந்த 100 நாள் ஆட்சி...




Seithipunal
--> -->