பட்ஜெட்டுக்குப் பிறகு அமைச்சரவை மாற்றமா? 4 தமிழக அமைச்சர்கள் பதவியை பறிக்க விஜய் திட்டம்? ரெடியாகும் லிஸ்ட்!
Cabinet reshuffle after the budget Is Vijay planning to strip four Tamil Nadu ministers of their posts A list is being prepared
சென்னை: தமிழக சட்டமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் நிறைவடைந்த பிறகு அமைச்சரவையில் மாற்றங்களை மேற்கொள்ள முதல்வர் விஜய் ஆலோசித்து வருவதாக அரசியல் வட்டாரங்களில் தகவல்கள் வெளியாகியுள்ளன. சில அமைச்சர்களின் செயல்பாடுகள் குறித்து எழுந்துள்ள புகார்கள் மற்றும் நிர்வாக செயல்திறன் அடிப்படையில் இந்த மாற்றங்கள் இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.
தமிழக சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியமைத்த தவெக அரசில், முதல்வர் விஜய்யுடன் சேர்த்து 35 பேர் அமைச்சர்களாக உள்ளனர். மூத்த தலைவர் செங்கோட்டையனைத் தவிர மற்ற அனைவரும் முதல் முறையாக அமைச்சரவை பொறுப்பேற்றுள்ளனர்.
அமைச்சர்களின் செயல்பாடுகள் குறித்து தொடர்ந்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், அண்மையில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில்கூட, "யார் தவறு செய்தாலும் நடவடிக்கை எடுக்கப்படும். தெரிந்தவர், தெரியாதவர் என்ற வேறுபாடு இருக்காது" என்று முதல்வர் விஜய் எச்சரிக்கை விடுத்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், பட்ஜெட் கூட்டத்தொடர் முடிந்த பிறகு, குறிப்பாக செப்டம்பர் மாதத்திற்குப் பிறகு அமைச்சரவையில் மாற்றம் செய்யப்படும் என்ற பேச்சு கோட்டை வட்டாரங்களில் நிலவி வருகிறது.
அதன்படி, உயர் கல்வித்துறை அமைச்சர் விஸ்வநாதன், போக்குவரத்துத்துறை அமைச்சர் விஜய் தமிழன் பார்த்திபன், சமூக நலன் மற்றும் மகளிர் மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரி, மனித வள மேம்பாட்டுத்துறை அமைச்சர் சரத்குமார் ஆகியோரின் செயல்பாடுகள் குறித்து அதிருப்தி இருப்பதாக கூறப்படுகிறது. இதனால் அவர்களது பொறுப்புகளில் மாற்றம் அல்லது அமைச்சரவையில் மாற்றம் ஏற்படலாம் என்ற தகவல்கள் வெளியாகியுள்ளன.
அதேபோல், சில அமைச்சர்களின் இலாகாக்களும் மாற்றப்படலாம் என்றும் அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது. தொழில்துறை அமைச்சர் கீர்த்தனா, கால்நடைத் துறை அமைச்சர் கமலி மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேஷ்குமார் ஆகியோரின் பொறுப்புகளிலும் மாற்றம் இருக்கலாம் என்ற தகவல்கள் வெளியாகியுள்ளன.
மேலும், சமூக நீதித்துறை அமைச்சர் வன்னியரசுக்கு கூடுதல் முக்கியத்துவம் வாய்ந்த துறை ஒதுக்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது. இருப்பினும், அமைச்சரவை மாற்றம் தொடர்பான இறுதி முடிவு முழுமையாக முதல்வர் விஜய்யின் வசமே இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதற்கிடையில், இடைத்தேர்தலுக்குப் பிறகு அமைச்சரவை விரிவாக்கமும் நடைபெறலாம் என்ற பேச்சும் எழுந்துள்ளது. அதிமுகவில் இருந்து தவெகவில் இணைந்த முன்னாள் அமைச்சர்களான விஜயபாஸ்கர், எம்.ஆர். விஜயபாஸ்கர் மற்றும் மரகதம் குமாரவேல் உள்ளிட்டோருக்கும் எதிர்காலத்தில் அமைச்சரவை வாய்ப்பு கிடைக்கலாம் என்றும் கூறப்படுகிறது.
எனினும், இவை அனைத்தும் அரசியல் மற்றும் கோட்டை வட்டாரங்களில் பரவி வரும் தகவல்களே தவிர, அமைச்சரவை மாற்றம் குறித்து தமிழக அரசு அல்லது தவெக தரப்பில் இதுவரை எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை.
English Summary
Cabinet reshuffle after the budget Is Vijay planning to strip four Tamil Nadu ministers of their posts A list is being prepared