இனி என்னோட போட்டோவை பயன்படுத்தக்கூடாது - தவெகவினருக்கு புஸ்ஸி ஆனந்த் உத்தரவு.!!
bussy anand says no use my photo in banners
பிரபல நடிகர் விஜய் தலைமையில் தமிழக வெற்றிக் கழகம் என்றக் கட்சித் தொடங்கப்பட்டுள்ளது. இந்தக் கட்சியின் அரசியல் பணிகளை கட்சி தலைவர் விஜய் உத்தரவின் பேரில் பொதுச் செயலாளர் என்.ஆனந்த் தீவிரமாக செய்து வருகிறார்.
இதன் காரணமாக த.வெ.க. நிகழ்ச்சிகளிலும், பேனர்களிலும் கட்சி தலைவர் விஜய், பொதுச் செயலாளர் என்.ஆனந்த் புகைப்படங்களை த.வெ.க.வினர் பயன்படுத்தி வந்தனர். இந்த நிலையில் பொதுச் செயலாளர் என்.ஆனந்த் த.வெ.க. நிகழ்ச்சிகளில் தலைவர் விஜய் படத்தை தவிர வேறு யாருடைய படத்தையும் பயன்படுத்தக் கூடாது என்று கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுக்கு உத்தரவிட்டுள்ளார்.

இது குறித்து அவர் அனுப்பி உள்ள கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:- "நமக்கு ஒரே தலைவர் த.வெ.க. தலைவர் விஜய் தான். வருகிற 2026 தேர்தலில் அனைவரும் ஒன்றுபட்டு உழைத்து தலைவர் விஜயை தமிழக முதலமைச்சர் அரியாசனத்தில் அமர வைப்பதே நமது குறிக்கோள்.
இதற்காக நம் ஒரே தலைவரான விஜயுடன் கைகோர்த்து தீவிரமாக களப் பணியாற்ற உறுதி ஏற்போம். த.வெ.க. நிகழ்ச்சிகளிலோ, விளம்பர பேனர்களிலோ எந்த நிகழ்ச்சியாக இருந்தாலும் கட்சி தலைவர் விஜய் புகைப்படம் மட்டுமே பயன்படுத்த வேண்டும். என்னுடைய படத்தை யாரும் பயன்படுத்தக் கூடாது.
இதை ஏற்கனவே நான் நிர்வாகிகளிடம் வலியுறுத்தி இருக்கிறேன். மீண்டும் தற்போது நிர்வாகிகள், தொண்டர்களுக்கு இந்த கடிதத்தின் மூலம் தெரியப்படுத்திக் கொள்கிறேன்.
மீறி பயன்படுத்தினால் சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். மீண்டும் நான் சொல்லிக் கொள்வது மக்கள் விரும்பும் முதலமைச்சர் வேட்பாளர் விஜய் என்பதை மக்களிடம் கொண்டு சென்று வெற்றி பெறுவோம் என்பதுதான்" என்றுத் தெரிவித்துள்ளார்.
English Summary
bussy anand says no use my photo in banners