அமைச்சர்கள் மீது லஞ்சப் புகார்: அண்ணாமலையின் ஆடியோ ஆதாரம் குறித்து விசாரணைக்கு உத்தரவிட்டாரா முதல்வர் விஜய்? - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் சில அமைச்சர்கள் லஞ்சம் மற்றும் கமிஷன் கேட்பதாக பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ள நிலையில், அவரது இந்தக் குற்றச்சாட்டு தமிழக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, அமைச்சர்கள் லஞ்சம் கேட்பது தொடர்பான ஆடியோ ஆதாரங்கள் தன்னிடம் இருப்பதாக அண்ணாமலை கூறியிருப்பது ஆளும் தவெக வட்டாரத்தில் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

சென்னையில் நடைபெற்ற சுற்றுச்சூழல் விழிப்புணர்வு பேரணி தொடர்பான நிகழ்ச்சியில் பேசிய அண்ணாமலை, ஊழலுக்கு எதிராக முதல்வர் விஜய் இருப்பது உண்மை என்றாலும், ஆட்சியில் மீண்டும் ஊழல் தொடங்கியுள்ளதாக குற்றம்சாட்டினார். மேலும், சில அமைச்சர்கள் தேர்தலில் வாக்குகளுக்காக செலவிட்ட பணத்தை ஈடுகட்டுவதற்காக 2 அல்லது 3 சதவீதம் கமிஷன் கேட்பதாகவும், அது தொடர்பான ஆடியோ தன்னிடம் இருப்பதாகவும் அவர் தெரிவித்தார். இந்த விவகாரத்தை முதல்வர் விஜய்யின் கவனத்துக்கு கொண்டு வருவதாகவும் அண்ணாமலை கூறியிருந்தார்.

அண்ணாமலையின் இந்தப் பேச்சு அரசியல் வட்டாரத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், அவரது உரை மற்றும் குற்றச்சாட்டுகள் தொடர்பான முழுமையான அறிக்கை முதல்வர் விஜய்யின் கவனத்துக்கு அனுப்பப்பட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து, தனது நெருங்கிய ஆலோசகர்கள் மற்றும் செயலாளர்களுடன் விஜய் ஆலோசனை நடத்தியதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அப்போது, அமைச்சர்கள் மீது கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் குறித்து துறை ரீதியாக விசாரணை நடத்தலாம் என்றும், ஒவ்வொரு துறையிலும் நடைபெற்று வரும் பணிகள் மற்றும் நடவடிக்கைகளை ஆய்வு செய்தால் முறைகேடுகள் ஏதேனும் நடைபெற்றுள்ளதா என்பதை கண்டறிய முடியும் என்றும் ஆலோசகர்கள் தெரிவித்ததாக கூறப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து, “அண்ணாமலையிடம் எந்த அமைச்சரைப் பற்றிய ஆதாரம் உள்ளது? எந்தத் துறை தொடர்பாக அவர் பேசுகிறார்?” என விஜய் தனது ஆலோசகர்களிடம் கேட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும், இந்த விவகாரம் தொடர்பாக முழுமையாக விசாரித்து வருவதாக ஆலோசகர்கள் தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது.

இதற்கிடையே, அண்ணாமலையிடம் உள்ளதாக கூறப்படும் ஆடியோ ஆதாரங்கள் குறித்து முழுமையாக தகவல்களை திரட்ட உளவுத்துறைக்கு முதல்வர் விஜய் உத்தரவிட்டதாக உள்துறை வட்டாரங்களை மேற்கோள் காட்டி தகவல்கள் வெளியாகியுள்ளன. குறிப்பாக, எந்த அமைச்சருக்கு எதிராக ஆதாரம் உள்ளது, எந்தத் துறை தொடர்பான புகார் அது, ஆதாரத்தின் தன்மை என்ன என்பது குறித்து துல்லியமான அறிக்கையைத் தாக்கல் செய்யுமாறு உத்தரவிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

கடந்த திமுக ஆட்சியின்போதும் அண்ணாமலை பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகளை முன்வைத்து, தன்னிடம் ஆடியோ உள்ளிட்ட ஆதாரங்கள் இருப்பதாக கூறி அரசியல் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தார். அந்த வரிசையில் தற்போது தவெக ஆட்சியின் அமைச்சர்கள் மீது அவர் முன்வைத்துள்ள குற்றச்சாட்டுகள் முக்கியத்துவம் பெற்றுள்ளன.

அண்ணாமலை கூறியிருப்பது வெறும் அரசியல் குற்றச்சாட்டா அல்லது உண்மையில் வலுவான ஆதாரங்கள் அவரிடம் உள்ளதா என்பது வெளியாகும் தகவல்களைப் பொறுத்தே தெரியவரும். ஒருவேளை அமைச்சர்கள் மீது லஞ்சம் பெற்றதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகளுக்கு வலுவான ஆதாரங்கள் இருப்பது உறுதி செய்யப்பட்டால், ஊழலற்ற நிர்வாகம் என்ற வாக்குறுதியுடன் ஆட்சிக்கு வந்துள்ள தவெக அரசுக்கு இது மிகப்பெரிய அரசியல் மற்றும் தார்மீக சவாலாக மாறக்கூடும்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Bribery allegations against ministers Did Chief Minister Vijay order an inquiry into the audio evidence presented by Annamalai


கருத்துக் கணிப்பு

முதல்வர் விஜய் தலைமையிலான இந்த 100 நாள் ஆட்சி...



Advertisement

கருத்துக் கணிப்பு

முதல்வர் விஜய் தலைமையிலான இந்த 100 நாள் ஆட்சி...




Seithipunal
--> -->