சமூகநீதி அரசின் பள்ளிகளில் தொடரும் சாதி வெறி - வானதி சீனிவாசன் கண்டனம்!
BJP Vanathi Srinivasan Condemn to DMK CM MK Stalin
பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் விடுத்துள்ள அறிக்கையில், "சமூகநீதி அரசின் பள்ளிகளில் தொடரும் சாதி வெறி!
சென்னை புழுதிவாக்கம் அரசு தொடக்கப்பள்ளியில் தரையில் இங்க் கொட்டியதற்காக ஐந்தாம் வகுப்பு படிக்கும் பட்டியலின சிறுமி ஒருவர் அப்பள்ளியின் தலைமை ஆசிரியரால் கொடூரமாக தாக்கப்பட்டதாக வெளியாகியுள்ள தகவல்கள் கடும் அதிர்ச்சியளிப்பதோடு மிகுந்த மன வேதனையுமளிக்கிறது. கடும் தாக்குதலுக்குள்ளான அச்சிறுமிக்கு தலையில் ரத்தக்கசிவு ஏற்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக அறிந்தேன், துளியும் மனிதநேயமற்ற இந்த மூர்க்கத்தனம் வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.
பட்டியலின மக்களுக்கு எதிரான வன்முறைக் குற்றங்களுக்கு கடுமையான சட்டங்கள் இருந்த போதிலும், ஒரு சிறிய கவனக்குறைவிற்காக பட்டியலின சிறுமியை இந்தளவிற்கு தாக்கும் துணிச்சலும் தைரியமும் எங்கிருந்து வருகிறது? திமுகவின் போலி சமூகநீதி ஆட்சியில் பட்டியலின மக்களை நாம் என்ன பாடு படுத்தினாலும் அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காது என்ற ஆணவமா?
அதிலும் இந்த விஷயம் வெளியே கசியாமல் இருக்க திமுகவின் மாமன்ற உறுப்பினர் அச்சிறுமியின் பெற்றோரை மூளைச்சலவை செய்ததாகவும், பத்திரிக்கையாளர்களை நெருங்கவிடாமல் தடுத்ததாகவும் தகவல்கள் உலா வருகின்றன. சாதிய வன்முறைகளை கட்டுப்படுத்த வேண்டிய ஆட்சியாளர்களும் பொறுப்பாளர்களும் இப்படி வெட்டி விளம்பரங்களைக் கட்டமைப்பதிலும், ஊடகங்களின் வாயை அடைப்பதிலும் மட்டுமே கவனம் செலுத்திக் கொண்டிருப்பது வெட்கக்கேடானது.
எனவே, சம்பந்தப்பட்ட தலைமையாசிரியர் மீது எவ்வித சமரசமுமின்றி கடும் நடவடிக்கை எடுப்பதோடு, பாதிக்கப்பட்ட சிறுமியின் மருத்துவச் செலவுகளை அரசே ஏற்க வேண்டுமெனவும், திமுக ஆட்சியில் பட்டியலின சமூக மக்களின் மீது தொடரும் வன்முறைகளுக்கு உடனடி தீர்வு காண வேண்டுமெனவும் முதல்வர் அவர்களை வலியுறுத்துகிறேன்" என்று தெரிவித்துள்ளார்.
English Summary
BJP Vanathi Srinivasan Condemn to DMK CM MK Stalin