ரவுடி நாகேந்திரனின் இளைய மகனுக்கு ஒரு நாள் ‘பரோல்’ : உயர் நீதிமன்றம் உத்தரவு; காரணம் என்ன..?
High Court grants one day parole to Rowdy Nagendran son
பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவராக இருந்த ஆர்ம்ஸ்ட்ராங் படுகொலை வழக்கில் முக்கிய குற்றவாளியாக ரவுடி நாகேந்திரன், அவரது மகன் அஸ்வத்தாமன் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர். ரவுடி நாகேந்திரனின் மற்றொரு மகன் அஜித் ராஜூம் வேறு ஒரு வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
சமீபத்தில் கல்லீரல் பாதிப்பால் ரவுடி நாகேந்திரன் காலமானார். இதையடுத்து இவரது இறுதி சடங்கில் கலந்துக் கொள்வதற்காக அஸ்வத்தாமனுக்கு இடைக்கால ஜாமீனும், அஜித் ராஜ் 03 நாட்கள் பரோலும் வழங்கப்பட்டது.
இந்தநிலையில், நாளை மறுநாள் 26-ந்தேதி நாகேந்திரனின் 16-ஆம் நாள் காரியம் நடைபெற உள்ளது. இதனால், சிறையில் உள்ள அவருடைய இளைய மகன் அஜித் ராஜுக்கு 02 நாட்கள் பரோல் வழங்க வேண்டும் என கேட்டு நாகேந்திரன் மனைவி விசாலாட்சி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த மனுவை நீதிபதிகள் என்.சதீஷ்குமார், எம்.ஜோதிராமன் ஆகியோர் விசாரித்தனர். அப்போது, ''தந்தையின் காரியத்தில் மகன் கலந்து கொள்ள வேண்டியது முக்கியமானது என்பதால் வருகிற 26-ந்தேதி ஒரு நாள் மட்டும் பரோல் வழங்குகிறோம்'' என்று நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர். ஏற்கனவே, நாகேந்திரனின் மூத்த மகன் அஸ்வத்தாமனுக்கு வரும் 28-ந்தேதி வரை இடைக்கால ஜாமீனை சென்னை மாவட்ட முதன்மை செசன்சு நீதிமன்றம் வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
English Summary
High Court grants one day parole to Rowdy Nagendran son