குழந்தைகளின் தவறுக்கு பெற்றோருக்கு தண்டனையா...? - சிறுமி தொந்தரவு வழக்கில் சிறுவர்களின் தாய்மார்கள் கைது!
Should parents punished childrens mistakes Mothers boys arrested case harassment young girl
உத்தரப் பிரதேச மாநிலம் பரேலியில் நடந்த ஒரு சம்பவம், சமூக வலைதளங்களிலும் பொதுவெளியிலும் கடும் விவாதத்தை கிளப்பியுள்ளது.
பள்ளிக்குச் செல்லும் வழியில் 8-ஆம் வகுப்பு படிக்கும் சிறுமியை தொடர்ந்து கேலி செய்ததும், ஆபாச வார்த்தைகளால் அவமதித்ததும் தொடர்பான புகாரில், குற்றம் செய்த சிறுவர்களின் தாய்மார்களை போலீசார் கைது செய்துள்ளனர்.

அதே கிராமத்தைச் சேர்ந்த, 13 வயதுக்குள் உள்ள சில சிறுவர்கள், அந்த சிறுமியை தினந்தோறும் தொந்தரவு செய்து வந்துள்ளனர். இதனால் மனவேதனை அடைந்த சிறுமி, நடந்ததை தன் தந்தையிடம் தெரிவித்தார்.
உடனடியாக அவர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.இந்த புகாரின் அடிப்படையில் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர். ஆனால் குற்றம் சாட்டப்பட்டவர்கள் சிறுவர்கள் என்பதால், அவர்களை நேரடியாக கைது செய்ய முடியாத சூழல் ஏற்பட்டது.
இதையடுத்து, குழந்தைகளுக்கு ஒழுக்கமும் கட்டுப்பாடும் கற்பிக்க தவறியதாகக் கூறி, அந்த சிறுவர்களின் நான்கு தாய்மார்களை காவல்துறையினர் கைது செய்தனர்.இந்த நடவடிக்கை குறித்து பேசிய காவல் ஆய்வாளர் அஜய்பால் சிங்,“இந்த சிறுவர்கள் பள்ளிக்குச் செல்லாமல் வீணாக சுற்றித்திரிந்துள்ளனர்.
குழந்தைகளின் தவறான நடத்தைக்கு, அவர்களை சரியான வழியில் வளர்க்கத் தவறிய பெற்றோர்களும் பொறுப்பு. பெற்றோரின் பொறுப்பை உணர்த்துவதன் மூலம் சமூகத்திற்கு ஒரு வலுவான செய்தியைச் சொல்ல விரும்புகிறோம்” என தெரிவித்தார்.
கைது செய்யப்பட்ட நான்கு பெண்களும் பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம், ‘குழந்தைகளின் தவறுக்கு பெற்றோர் பொறுப்பாளர்களா?’ என்ற கேள்வியை மீண்டும் முன்வைத்து, சமூக அளவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
Should parents punished childrens mistakes Mothers boys arrested case harassment young girl