மோசம்! தமிழுக்கு, தமிழ்நாட்டிற்கு அநீதி இழைக்கிறது பாஜக ஒன்றிய அரசு? - செல்வப் பெருந்தகை கண்டனம்
BJP Union Government doing injustice to Tamils and Tamil Nadu- Selva Perunthakai condemns
மத்திய தொல்லியல் துறைக்கு,கீழடியில் நடத்தப்பட்ட ஆய்வின் அறிக்கையை ''அமர்நாத் இராமகிருஷ்ணன்'' 2023 ஜனவரி மாதம் சமர்பித்தார்.ஆனால் மத்திய தொல்லியல் துறை, அந்த ஆய்வறிக்கையை இதுவரை வெளியிடவில்லை. இந்நிலையில் கீழடி அறிக்கையில் திருத்தம் தேவை என மத்திய தொல்லியல் துறை அமர்நாத் இராமகிருஷ்ணனின் அறிக்கையை திருப்பி அனுப்பியுள்ளது.

இதைத் தொடர்ந்து, கீழடி ஆய்வறிக்கை சரியாகவே இருக்கிறது. இதில், 'ஏற்கனவே அளிக்கப்பட்ட அறிக்கையில் மாற்றம் தேவையில்லை' என்று மத்திய தொல்லியல் துறை இயக்குநருக்கு தொல்லியல் ஆய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணன் பதிலளித்துள்ளார்.இந்த நிலையில், மத்திய தொல்லியல் துறையின் இந்த செயலுக்கு தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
செல்வப்பெருந்தகை:
இதுகுறித்து அவர் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவு ஒன்று வெளியிட்டுள்ளார்.அதில், "கடந்த 2023 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் கீழடியின் முதல் 2 கட்ட அகழாய்வு அறிக்கையை இந்திய தொல்லியல் துறையிடம் சமர்ப்பித்திருந்த நிலையில், 2 ஆண்டுகளுக்கு மேலாகியும் இந்திய தொல்லியல் துறை கீழடி அகழாய்வு அறிக்கையை இதுவரை வெளியிடவில்லை.
இந்நிலையில், கீழடி முதல் இரண்டு கட்ட அகழாய்வு ஆய்வறிக்கையில் நுட்பமான விவரங்களுடன் திருத்தி எழுத கேட்டுக்கொள்ளப்படுவதாக தொல்லியல் ஆய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணாவுக்கு இந்திய தொல்லியல் துறை கடிதம் எழுதியுள்ளது.கீழடி ஆய்வறிக்கை சரியாகவே இருக்கிறது. ஏற்கனவே அளிக்கப்பட்ட அறிக்கையில் மாற்றம் தேவையில்லை என்று இந்திய தொல்லியல் துறை இயக்குநருக்கு தொல்லியல் ஆய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணன் பதில் அளித்துள்ளார்.
கீழடி ஆய்வறிக்கை வேண்டுமென்றே தாமதப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் செயல்படும் ஒன்றிய பா.ஜ.க. அரசின் இந்திய தொல்லியல் துறைக்கு வன்மையான கண்டனங்களை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பாக தெரிவித்துக் கொள்கிறேன்.கல் தோன்றி மண் தோன்றா காலத்தே முன் தோன்றிய மூத்த தமிழின் கலாச்சார நாகரிகத்தை பொறுத்துக் கொள்ள முடியாதவர்கள் அரசு இயந்திரத்தை தமிழர்களுக்கும், தமிழரின் பண்பாட்டிற்கும் எதிராக பயன்படுத்துகிறார்கள்.
சமஸ்கிருதத்திற்குத் தமிழைப் போல பழமையான வரலாற்றுச் சான்றுகள் இல்லாதபோது, தமிழுக்கு இவ்வளவு ஆழமான மற்றும் அதிகாரபூர்வ அங்கீகரிக்கப்பட்ட வரலாறு உள்ளது என்பதை அவர்கள் எப்படி ஒப்புக் கொள்வார்கள்.? அதனால்தான் கீழடி அகழ்வாயின் ஆய்வறிக்கையை வெளியிட தாமதப்படுத்துகிறது ஒன்றிய பா.ஜ.க. அரசு.
மொழி, பண்பாடு, நிதி பகிர்வு, மாநில சுயாட்சி, கல்வி என அனைத்திலும் தமிழ்நாட்டிற்கு அநீதி இழைத்துக் கொண்டிருக்கிறது ஒன்றிய பா.ஜ.க. அரசு.கீழடி ஆய்வு உள்பட தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில் ஆய்வுப் பணிகளைத் தொடர்ந்து ஊக்குவித்து வரும் மாண்புமிகு தமிழ்நாட்டின் முதலமைச்சர் திரு.மு.க. ஸ்டாலின் அவர்கள் கீழடி ஆய்வறிக்கையை உடனடியாக வெளியிடுமாறு ஒன்றிய அரசை வலியுறுத்த வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன்" என்று தெரிவித்தார்.
English Summary
BJP Union Government doing injustice to Tamils and Tamil Nadu- Selva Perunthakai condemns