மேற்குவங்கத்தில் பாஜக வெற்றி: ஜமுரியா மற்றும் அசோன்சோல் திரிணமூல் அலுவலகங்கள் சூறையாடல்!
BJP Triumphs in West Bengal TMC Offices Ransacked in Jamuria and Asansol Amid Post Poll Violence
மேற்கு வங்க சட்டமன்றத் தேர்தல் 2026-ன் முடிவுகள் பாரதிய ஜனதா கட்சிக்கு ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றியைத் தேடித்தந்துள்ளன. மொத்தமுள்ள தொகுதிகளில் பாஜக 207 இடங்களைக் கைப்பற்றித் தனிப்பெரும்பான்மையுடன் முதன்முறையாக அங்கு ஆட்சி அமைக்கவுள்ளது.
கடந்த 15 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்த மமதா பானர்ஜி தலைமையிலான திரிணமூல் காங்கிரஸ் கட்சி, இந்த முறை வெறும் 80 இடங்களை மட்டுமே பெற்றுத் தனது அதிகாரத்தைப் பறிகொடுத்துள்ளது. காங்கிரஸ் கட்சி 2 இடங்களிலும், இதர கட்சிகள் 4 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன.
ஜமுரியா மற்றும் அன்சோல் பகுதிகளில் வன்முறை
வாக்கு எண்ணிக்கை நடைபெற்று முடிந்த உடனேயே, பர்தமான் மாவட்டத்திற்கு உட்பட்ட ஜமுரியா மற்றும் அன்சோல் ஆகிய பகுதிகளில் கடும் வன்முறை வெடித்தது. வெற்றி கொண்டாட்டத்தில் ஈடுபட்ட பாஜக தொண்டர்கள், திரிணமூல் காங்கிரஸ் அலுவலகங்களை முற்றுகையிட்டதாகக் கூறப்படுகிறது. ஆவேசமடைந்த கும்பல் அலுவலகத்திற்குள் புகுந்து அங்கிருந்த நாற்காலிகள் மற்றும் கோப்புகளை வெளியே தூக்கி வீசி எறிந்தனர்.
பின்னர் அந்தப் பொருட்களை ஒன்றாகக் குவித்துத் தெருவிலேயே வைத்துத் தீயிட்டு எரித்தனர். மேலும், அலுவலக வளாகத்தில் நிறுத்தப்பட்டிருந்த வாகனங்களும் கடுமையாக அடித்து நொறுக்கப்பட்டன. இதற்குப் பதிலடியாகத் திரிணமூல் தொண்டர்களும் பதில் தாக்குதலில் ஈடுபட்டதால் அந்தப் பகுதியே போர்க்களம் போலக் காட்சியளித்தது.
மமதா பானர்ஜியின் குற்றச்சாட்டும் பாதுகாப்புப் படையினரின் நடவடிக்கையும்
வாக்கு எண்ணிக்கையின் போதே பல மையங்களில் வன்முறை நிகழ்ந்ததால், சில இடங்களில் பணிகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுப் பின்னர் மீண்டும் தொடங்கப்பட்டன. இத்தகைய குழப்பமான சூழலைப் பயன்படுத்தித் தனது கட்சியின் பல ஆயிரம் வாக்குகள் திருடப்பட்டிருப்பதாக மமதா பானர்ஜி அதிரடிக் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
வன்முறை குறித்த தகவலறிந்த மத்திய பாதுகாப்புப் படை வீரர்கள் உடனடியாகச் சம்பவ இடங்களுக்கு விரைந்து வந்தனர். அலுவலகத்தைச் சூறையாடிய நபர்களைத் தடியடி நடத்தி விரட்டியடித்த வீரர்கள், தற்போது அந்த அலுவலகங்களைத் தங்களது கட்டுப்பாட்டில் கொண்டு வந்துள்ளனர்.
இந்த வன்முறைச் சம்பவங்கள் தொடர்பான வீடியோக்களைத் திரிணமூல் ஆதரவாளர்கள் சமூக வலைதளங்களில் பகிர்ந்து தங்களது கண்டனத்தைப் பதிவு செய்து வருகின்றனர். ஜமுரியா மற்றும் அன்சோல் பகுதிகளில் தொடர்ந்து பதற்றம் நிலவுவதால், மேற்கொண்டு அசம்பாவிதங்கள் நிகழாமல் தடுக்க கூடுதல் பாதுகாப்புப் படை வீரர்கள் குவிக்கப்பட்டுள்ளனர்.
English Summary
BJP Triumphs in West Bengal TMC Offices Ransacked in Jamuria and Asansol Amid Post Poll Violence