என்டிஏ கூட்டணியில் விஜய் இணைய வாய்ப்பு..? தொடர் முயற்சியில் பாஜக; பழனிசாமி மறுப்பு தெரிவிக்கிறாரா..?
BJP in Continuous Pursuit to Bring Vijay into the NDA Alliance
விஜயிடம் பல வழிகளிலும் பேச பாஜக முற்படுவதாக கூறப்படும் நிலையில், அடுத்தடுத்து நாட்களில் எதுவும் நடக்கலாம் என்றும், அதிமுகவுக்குள்ளேயே பெரிய விவாதங்கள் உருவாகலாம் எனவும் டெல்லி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தமிழக சட்டசபை தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்பட்ட நிலையில், தேர்தல் களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. இந்த தேர்தலில் முதல்முறையாக விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் களம் காணவிருக்கிறது.
அடுத்த மதஹம் தேர்தல் நடக்கவுள்ள நிலையில், ஆட்சியில் பங்கு எனக் கூறியும் இதுவரை எந்தக் கட்சியும் தமிழக வெற்றிக் கழகத்துடன் கூட்டணிக்குச் செல்லவில்லை. பல்வேறு காட்சிகள் இணையும் என்று எதிர்பார்த்த கட்சிக்கு ஏமாற்றமே மிஞ்சியது.

இதையடுத்து, இந்த தேர்தலில் தவெக தனித்துப் போட்டியிடும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது. இதனிடையே விஜய் நடித்த 'ஜன நாயகன்' படத்திற்கு தணிக்கை சான்றிதழ் வழங்காதது மற்றும் கரூர் நெரிசல் வழக்கு தொடர்பாக சி.பி.ஐ. விசாரணை என மத்திய அரசு அவருக்கு அழுத்தம் தந்து கூட்டணிக்கு வற்புறுத்துவதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில், திமுக போட்டியாகக் கருதப்படும் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தை தேசிய ஜனநாயக கூட்டணிக்குள் கொண்டுவர பாஜக முயற்சிப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதேவேளை, தவெகவுடன் பேச்சுவார்த்தை நடத்தவில்லை என அதிமுக பொதுச்செயலாளர் கே.பழனிசாமி கூறியுள்ளார்.
அத்துடன், பிற கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தவில்லை என தவெகவும் தெரிவித்துள்ளது. ஆனால், தேசிய ஜனநாயக கூட்டணியில் தவெக இடம்பெற அதிமுக மற்றும் தவெகவின் இரண்டாம் கட்ட தலைவர்கள் விரும்புவதாக கூறப்படுகிறது. இதையடுத்தே, பாஜகவும் தவெகவை கூட்டணிக்குள் கொண்டுவர முயற்சிப்பதாகக் அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மூலம், தேசிய ஜனநாயக கூட்டணிக்குள் தவெகவை கொண்டுவர பாஜக காய் நகர்த்துவதாக கூறப்படுகிறது. இந்த விவகாரத்தில் பழனிசாமிக்கு, வேலுமணி வழியாக அழுத்தம் கொடுக்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
அதேநேரம், விஜய்யிடம் பல வழிகளிலும் பேச பாஜக முற்படுவதாக கூறப்படுகிறது. இதனால், அடுத்தடுத்து நாட்களில் எதுவும் நடக்கலாம் என்றும், அதிமுகவுக்குள்ளேயே பெரிய விவாதங்கள் உருவாகலாம் எனவும் தெரிவிக்கின்றன.
அதாவது, தேசிய ஜனநாயக கூட்டணியில் தவெக இடம்பெற்றால், அக்கட்சிக்கு 60 தொகுதிகள் வழங்கப்படலாம் என கூறப்படுகிறது. மொத்தமுள்ள 234 தொகுதிகளில் அதிமுகவுக்கு 140 இடங்களும், தவெகவுக்கு 60 இடங்களும் ஒதுக்கப்படலாம் எனச் சொல்லப்படுகிறது. மீதமுள்ள 34 தொகுதிகள் பாஜக, பாமக, அமமுகவுக்கு பிரித்து வழங்கப்படலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த கூட்டணிக்கு அதிமுகதான் தலைமை என்றும், 150 தொகுதிகளில் அதிமுக போட்டியிடும் என்ற நிலைப்பாட்டில் கே.பழனிசாமி உறுதியாக இருப்பதாக கூறப்படுகிறது. கூட்டணி ஆட்சி கிடையாது என்றும், தவெகவுக்கு அதிகபட்சம் 40 தொகுதிகள் வழங்கலாம் என்பது கே.பழனிசாமியின் நிலைப்பாடு எனவும் கூறப்படுகிறது.
இதேவேளை, தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகளுடன் விஜய் ஆலோசனையில் ஈடுபட்டபோது பலரும் கூட்டணி வைப்பதே சரியான முடிவு என்று தெரிவிக்கப்பட்டதாகவும், வேட்பாளர்கள் நேர்காணலிலும் இதையே வற்புறுத்தப்பட்டதாகவும் மேலும் 40-க்கும் மேற்பட்ட தொகுதிகளுக்கு மட்டுமே விஜய் நேர்காணல் நடத்தியதாகவும் தகவல்கள் வெளியாகின.
இதனால் விஜய் அதிமுகவுடனான கூட்டணிக்கு தயாராகி விட்டார் என்கிற தகவல்களும், கூட்டணி தொடர்பான தகவல்களை யாரும் நம்ப வேண்டாம் என தவெக தரப்பிலும் மாற்றிமாற்றி செய்திகள் வெளியாகி வருகின்றமை இங்கு குறிப்பிடத்தக்கது.
English Summary
BJP in Continuous Pursuit to Bring Vijay into the NDA Alliance