டார்ச் லைட்டை தி.மு.க.விடம் அடகு வைத்த கமல்ஹாசன் - ஹெச்.ராஜா விமர்சனம்!
BJP H Raja MNM Kamal DMK
புதுக்கோட்டையில் செய்தியாளர்களை சந்தித்த பாஜக மூத்த தலைவர் ஹெச். ராஜா, 2026 தேர்தலில் திமுக ஆட்சி முடிவுக்கு வரும் என்றும், இந்து விரோத சக்திகள் வீட்டுக்கு அனுப்பப்படுவார்கள் என்றும் கூறினார்.
தற்போதைய தமிழக ஆட்சியை விமர்சித்த அவர், "நாடே சீரழிந்துள்ளது. ஒரே நாளில் எட்டு கொலைகள் நடைபெறுவது சாதாரணமல்ல. எல்லா துறைகளிலும் ஊழல் வெளிப்படையாக நடைபெறுகிறது" என்றார்.
அமித்ஷாவின் வருகை மாற்றத்தை ஏற்படுத்தும் எனவும், கடந்த வருகையின் போதே பல தாக்கங்கள் ஏற்பட்டதையும் குறிப்பிட்டார். “முருகன் மாநாட்டுக்கு அனுமதி மறுக்கப்பட்டால், நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கி அதை நடத்துவோம்” என்றும் அவர் தெரிவித்தார்.
மேலும், “கமல்ஹாசன் ஒரு எம்.பி. சீட்டுக்காக தன் கட்சியின் அடையாளமான டார்ச் லைட்டை அடகு வைத்துவிட்டார்” என விமர்சித்தார்.
பெங்களூரு கிரிக்கெட் மைதானத்தில் நிகழ்ந்த மரணங்கள் வருத்தத்துக்குரியது என்றும் குறிப்பிட்டார்.