மேலும் ஒரு ஊழல் அம்பலம்... திமுக அரசில், ஊழலும், மோசடியும் நடைபெறாத துறையே இல்லை - அண்ணாமலை கண்டனம்!
BJP Annamalai Condemn to DMK Govt MK Stalin scam
பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை விடுத்துள்ள அறிக்கையில், "திமுக அரசில், ஊழலும், மோசடியும் நடைபெறாத துறையே இல்லை என்று உறுதியாகக் கூற முடியும். நகராட்சி நிர்வாகத்துறையில், ₹1,020 கோடி ஊழலும், அரசுப் பணி வழங்க ₹888 கோடி லஞ்சமும் வசூலிக்கப்பட்டது குறித்து, அமலாக்கத்துறை வழக்குப் பதிவு செய்ய திமுக அரசை வலியுறுத்திக் கொண்டிருக்கும் அதே நேரத்தில், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையில் மற்றுமொரு மோசடி அரங்கேறியிருக்கிறது.
பஞ்சாயத்துராஜ் சட்டத்தின்படி, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையில், ஊராட்சி செயலாளர் பதவிக்கு, நேர்முகத் தேர்வு நடத்தி அதில் தகுதி பெற்றவர்களை ஊராட்சி செயலாளர்களாக நியமிப்பது வழக்கம். தமிழகம் முழுவதும், இன்று 12.12.2025 நேர்முகத் தேர்வு நடைபெறும் என்று திமுக அரசு அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிட்டிருந்தது. பல ஆயிரம் இளைஞர்கள் இதற்காக விண்ணப்பித்துக் காத்திருந்த நிலையில், திடீரென நிர்வாகக் காரணங்களால் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டதாக, அனைவருக்கும் நேற்று 11-12-2025 மாலை குறுஞ்செய்தி அனுப்பப்பட்டுள்ளது.
இதனால் ஏமாற்றமடைந்த இளைஞர்கள், தமிழக அரசின் அதிகாரபூர்வ இணையதளத்தில் பார்த்தபோது, நேர்முகத் தேர்வுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் பட்டியலிலேயே குளறுபடி நடந்துள்ளது தெரிய வந்துள்ளது. அதிக மதிப்பெண் பெற்ற இளைஞர்களைத் தகுதி நீக்கம் செய்தும், அவர்களை விடக் குறைவான மதிப்பெண் பெற்றவர்களைத் தேர்வு செய்தும், மோசடி செய்திருக்கிறது திமுக அரசு. அரசுப் பணிகளுக்காக, பல ஆண்டுகள் தங்கள் விருப்பு வெறுப்புகளைத் தியாகம் செய்து, கடும் உழைப்பைக் கொடுத்துக் காத்துக்கொண்டிருந்த தகுதியான பல ஆயிரம் இளைஞர்களை வஞ்சித்திருக்கிறது திமுக அரசு.
உடனடியாக திமுக அரசு குளறுபடியாக வெளியிட்டிருக்கும் ஊராட்சி செயலாளர் பணிக்கான நேர்முகத் தேர்வுப் பட்டியலை ரத்து செய்ய வேண்டும் என்றும், முறையாக, மதிப்பெண் அடிப்படையில், தகுதியான இளைஞர்களைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.
English Summary
BJP Annamalai Condemn to DMK Govt MK Stalin scam