நீட் எதிர்ப்பு போராட்டத்தில் சனம் ஷெட்டிக்கு எதிர்ப்பு: "இது போலி போராட்டம்" - கொந்தளித்த நடிகை சனம் ஷெட்டி! - Seithipunal
Seithipunal


சென்னையில் நடைபெற்ற நீட் எதிர்ப்பு போராட்டத்தில் பங்கேற்று பேசிய நடிகை சனம் ஷெட்டி, போராட்டக்காரர்களின் எதிர்ப்பைத் தொடர்ந்து மேடையை விட்டு வெளியேறிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், "பேசிக் கொண்டிருக்கும்போதே மைக்கை பிடுங்கிவிட்டு துரத்துகிறார்கள். இதுதான் ஜனநாயகமா? இது ஒரு போலி போராட்டம்" என்று குற்றம்சாட்டினார்.

நீட் தேர்வில் நடைபெற்றதாகக் கூறப்படும் முறைகேடுகளை கண்டித்து, மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி டெல்லியில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. அதன் தொடர்ச்சியாக தமிழ்நாடு உள்ளிட்ட பல மாநிலங்களிலும் மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

சென்னையில் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகமான பாலன் இல்லத்தில் நடைபெற்ற மாணவர் போராட்டத்தில் நடிகை சனம் ஷெட்டி கலந்து கொண்டு ஆதரவு தெரிவித்தார். அப்போது மேடையில் பேசிய அவர், "இது மாணவர்களின் போராட்டம். இங்கு பேசிய சிலரின் கருத்துகளுடன் எனக்கு உடன்பாடு இல்லை. இந்த மேடையை அரசியல் ரீதியாக பயன்படுத்துபவர்கள்தான் ஜோக்கர்கள். நான் விஜய்யின் தீவிர ரசிகை. நேற்று 'ஜனநாயகன்' திரைப்படத்தை பார்த்துவிட்டு வந்தேன்" என்று கூறினார்.

இந்தக் கருத்துக்கு போராட்டத்தில் பங்கேற்ற சிலர் கடும் எதிர்ப்பு தெரிவித்து கோஷமிட்டனர். தனது பேச்சை தொடரலாமா அல்லது வெளியேற வேண்டுமா என்று சனம் ஷெட்டி கேட்டபோது, "போயிடுங்கள்" என சிலர் கோஷமிட்டதாக கூறப்படுகிறது.

இதற்கு பதிலளித்த சனம் ஷெட்டி, "இது பேச்சுரிமையை பறிக்கும் செயல். யாரும் சொல்லி நான் இங்கு வரவில்லை. நானாகவே மாணவர்களுக்காக வந்திருக்கிறேன்" என்று தெரிவித்தார். இருப்பினும் தொடர்ந்து எதிர்ப்பு எழுந்ததால் அவர் அங்கிருந்து வெளியேறினார். இதனால் போராட்டம் நடைபெற்ற பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சனம் ஷெட்டி, "பேசிக் கொண்டிருக்கும்போதே மைக்கை பிடுங்கிவிட்டு துரத்துகிறார்கள். இதுதான் ஜனநாயகமா? இது ஒரு போலி போராட்டம்" என்று கடுமையாக விமர்சித்தார். அவரது கருத்துகள் சமூக வலைதளங்களிலும் அரசியல் வட்டாரங்களிலும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளன.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Backlash against Sanam Shetty during NEET protest This is a fake protest an outraged Sanam Shetty


கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...



Advertisement

கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...




Seithipunal
--> -->